Header Ads



சிரியாவிலிருந்து ஒரு சிறுவனின், உருக்கமான பதிவு


சிரியாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை, சிரிய சிறுவன் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.

சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில், கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதல்களினால் இதுவரை, 600 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கவுடா பகுதியைச் சேர்ந்த முகமத் நஜிம் என்ற 15 வயது சிறுவன், அரசுப் படைகளின் தாக்குதல்களை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நஜிம் கூறுகையில், ‘என் பெயர் முகமத் நஜிம், எனக்கு 15 வயது ஆகிறது, நான் பஷார் அல் ஆசாத் செய்யும் குற்றங்களை உங்களிடம் கொண்டு வரப் போகிறேன்.

மக்கள், குண்டுவீச்சுகளுக்கு இடையில் பசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இங்கு நடப்பதை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது.

இங்கு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது, நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நாங்கள் இப்பகுதியில் சிரிய அரசையும், ரஷ்யாவையும் போர் நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.

இதுதான் எனது கருத்தும், இங்குள்ள குழந்தைகள் கருத்தும். உங்கள் மனசாட்சிக்கே நாங்கள் விட்டுவிட்டோம்.

நாங்கள் அமைதியாக வாழ வேண்டும். நாங்கள் தொடர்ந்து உங்கள் அமைதியால் கொல்லப்பட்டு கொண்டு இருக்கிறோம். பஷார் அல் ஆசாத், புதின், கொமைனி எங்களது குழந்தை பருவத்தை கொல்கிறார்கள்.

எங்களை காப்பாற்றுங்கள் ஏற்கனவே மிகுந்த தாமதமாகிவிட்டது’ என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவில் குழந்தைகள் பலரும், சர்வதேச சமூகத்தினரிடம் எங்களுக்கு உதவுங்கள் என்று உதவி கேட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.