Header Ads



ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம், மே மாதம் திறப்பு - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அதிரடியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்கா தனது தூதரகத்தை மாற்றுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அப்போது கூறப்பட்டது.

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை ஒரு தலைப்பட்சமாக இஸ்ரேலின் தலைநகர் என டிரம்ப் அறிவித்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.

இந்த நிலையில், ஜெருசலேம் நகரில் அமெரிக்கா தனது தூதரகத்தை வரும் மே மாதம் திறக்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் நாட்டின் 70–வது ஆண்டு விழாவும், இந்த நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் அமையும் என அவர் குறிப்பிட்டார்.

தற்காலிகமாக அமைகிற தூதரக கட்டிடத்தில் தூதர், சிறிய அளவிலான ஊழியர்கள் இடம் பெறுவர் என்றும், அடுத்த ஆண்டு இறுதியில் அர்னோனா வளாகத்தில் விரிவாக்க கட்டிடம் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாசின் செய்தி தொடர்பாளர் நபில் அபு ரடைநஹ் கருத்து தெரிவிக்கையில், ‘‘இதை ஏற்க முடியாது. ஒருதலைப்பட்சமான எந்த முடிவும், யாருக்கும் சட்டப்பூர்வ அந்தஸ்தை தந்து விடாது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இது தடையாக அமையும்’’ என குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.