Header Ads



இலங்கையில் தொடரும் ஊழல் - ட்ரான்பரன்சி கவலை

இலங்கை ஊழல் கருத்துச் சுட்டி (CPI) 2017ல் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் காட்டுவதற்கு தவறியுள்ளது என உலக ஊழலுக்கெதிரான கூட்டணி ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் கூறியுள்ளது. 

இது தொடர்பாக ட்ரான்பரன்சி இன்டர்நெஷனல் வௌியிட்டுள்ள அறிக்கையில், 

180 நாடுகளை கொண்ட தரவரிசையில் இலங்கை 95வது இடத்திலிருந்து 91வது இடத்திற்கு, அதாவது 4 இடத்திற்கு முன்னேறியிருந்த போதும் மிகக் குறைந்த முன்னேற்ற வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 36 லிருந்து 38 இற்கு, அதாவது 2புள்ளிகள் மாத்திரமே அதிகரித்துள்ளது. 

உலகலாவிய இயக்கத்தின் உள்ளூர் அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) இலங்கையின் தற்போதைய CPI (Corruption Perception Index) சுட்டியான 38 ஆனது 2014 ல் பெற்ற அதே புள்ளி என்ற உண்மையினைக் கருத்திலெடுக்கின்றது. 

இலங்கையின் 2017 CPI செயற்றிறன் பற்றி TISL ன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர கருத்துத் தெரிவிக்கையில், “2012 – 2017 வரையான காலப்பகுதியில் இலங்கையின் CPI இடங்களை மிக உன்னிப்பாக ஆராய்ந்தால் 19வது திருத்தத்தின் பிரகாரம் ஊழலுக்கெதிரான அமைப்புக்களின் நிறுவன ரீதியான பலப்படுத்தல் இருந்த போதும் நடைமுறைப்படுத்தலில் தொடர்ச்சியாகத் தவறியதால் மிகக் குறைந்த பெறுபேற்றை ஏற்படுத்தியுள்ளது”. 

கடந்த 5 வருடங்களாக ஒவ்வொரு ஆண்டிலும் CPI ல் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை தவறியுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது 6 அல்லது அதற்கு அதிகமான புள்ளிகள் கூடுவது அல்லது குறைவதாகும். “ஊழலுக்கெதிரான இயக்கி மிகக் குறைவான வேகத்தைக் கொண்டிருப்பதை காணமுடிகின்றது. 

கழிவகற்றல் தொடக்கம் பாடசாலையில் சேர்ப்பது வரை அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு குடிமக்கள் ஊழலுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே பொதுமக்களின் பார்வையில் பொதுச் சேவையின் CPI யில் மிகக்குறைந்த மாற்றமானது பொதுமக்களின் நாளாந்த வாழ்வில் அரசுடனான சேவைகளைப் பெறுவதில் அனுபவிப்பதில் மிகக் குறைந்த மாற்றத்தையே காட்டுகின்றது” என ஒபேசேகர மேலும் தெரிவித்தார். 

பொதுப் பிரதிநிதிகளின் சொத்து வெளிவிடுகையை இலகுவாக அணுகுவதற்கு குடிமக்களிற்கான உரிமை மற்றும் அத்தியாவசிய தேசிய கணக்காய்வு சட்டவரைவு அமைச்சரவையில் முடங்கியிருத்தல் போன்ற முற்போக்கான சட்டத்திருத்தங்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் விருப்பின்மையைக் காட்டுகின்றது. 

உலகளாவிய ரீதியில் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 89, 88 புள்ளிகளைப் பெற்று முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்துள்ளது. இந்த சுட்டியானது பூச்சியத்திலிருந்து 100 வரையான அளவீட்டில் வல்லுனர்கள் மற்றும் வர்த்தகத் துறையினரின் பார்வையில் பொதுச்சேவையில் காணப்படும் 180 நாடுகளின் ஊழல் நிலைமைகளை அளவிடுகின்றது. இங்கு 0 என்பது மிக அதிகளவு ஊழலையும் 100 என்பது மிகத் தூய்மையான நிலையையும் குறிக்கின்றது. 

இந்த வருடம் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நாடுகள் 50ற்குக் குறைவான புள்ளிகளையே பெற்றிருந்தன. சராசரி 43 புள்ளிகள் ஆகும். இலங்கையின் சுட்டியான 38ஆனது ஆசிய பசிபிக் நாடுகளின் சராசரியான 44ஐ விட மிகக்குறைவாகும். சார்க் அங்கத்துவ நாடுகளில் பூட்டான் 67 பெற்று முன்னிலை வகிக்கின்றது தொடர்ந்து இந்தியா (40), இலங்கை (38), மாலைதீவுகள் (33), பாகிஸ்தான் (32),நேபால் (31), பங்களாதேஷ் (28) ஆப்கானிஸ்தான் (15) ஆகியவை உள்ளன. 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் தனது CPI 2017 ஊடக வெளியீட்டில் பெறுபேற்றின் ஆய்வு ஊழல் நிலை, ஊடகச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஈடுபாடு ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பை எடுத்துக்காட்டுகின்றது. 

2012லிருந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட அனைத்து நாடுகளும் மிக அதிகளவில் ஊழல் இடம் பெறுவதாக கருதப்பட்ட நாடுகளாகும். கடந்த 6 ஆண்டுகால ஆய்வின்படி 45 அல்லது அதற்குக் குறைவான ஊழல் சுட்டி பெற்றுள்ள நாடுகளில் பத்தில் ஒன்பதற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

அதாவது அதிகளவான ஊழல் இடம்பெறும் நாடுகளில் சராசரியாக ஒவ்வொரு கிழமையும் ஒரு ஊடகவியலாளர் கொல்லப்படுகின்றனர். மேலும் கொல்லப்பட்ட ஐந்தில் ஒரு ஊடகவியலாளர் ஊழல் பற்றி கதைத்தவர்களாவர். அனேகமான சம்பவங்களில் நீதி கிடைக்கவில்லை என்பது கவலையான விடயமாகும். 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் முதன்மை வெளியீடாகிய CPI ஆனது இது ஆரம்பித்த 1995ம் ஆண்டிலிருந்து பொதுத் துறையின் ஊழலுக்கான அளவீட்டில் உலகலாவிய ரீதியில் முதன்மையான சுட்டியாகும். இச் சுட்டியானது உலக முழுமையும் உள்ள நாடுகளின் ஊழல் சார் நிலைகளின் வருடாந்த படத்தை தருகின்றது. மேலதிக தகவலுக்கு, www.transparency.org/research/cpi இணையத்தளத்தை நாடவும்.

No comments

Powered by Blogger.