Header Ads



முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் செய்ய வக்கில்லாத அரசியல்வாதிகள், என்னை வீழ்த்த கேவல அரசியல் செய்கிறார்கள்

-சுஐப் எம்.காசிம்- 

எங்களால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளிலும், கட்டிடங்களிலும் அமர்ந்துகொண்டு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு உதவியையும் செய்யாத அரசியல்வாதிகளின் படங்களைக் கொளுவிக்கொண்டு, எமக்கெதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களை பார்த்து, தான் சிரித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் இன்று (06) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  அவர் மேலும் கூறியதாவது,

வடக்கு முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் செய்யாத, செய்யவும் வக்கில்லாத அரசியல்வாதிகள் என்னை வீழ்த்துவதற்காக, எனது அரசியல் பலத்தை தகர்ப்பதற்காக, ஒவ்வொரு ஊரிலும் வேட்பாளர்களை நிறுத்தி, எமது கட்சிக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், கேவலமான அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

முற்றாக அழிந்துபோன வன்னிப் பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதில் துளியளவும் உதவி செய்யாத, இந்த அகதி மக்களின் அவல வாழ்வு தொடர்பில், எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் தேர்தலுக்கு மட்டும் இங்கே வந்து, நமது மக்களின் வேதனைகுறித்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

அகதி மக்களின் வாக்குகளினால், கடந்த காலங்களில் ஏமாற்றிப் பெற்ற அதிகாரங்களால் தமது சுகபோகத்தை தேடிக்கொண்டவர்கள். இப்போது மீண்டும் அதே அதிகாரத்தைப் பெறுவதற்காக பாடாய்ப்படுகின்றனர்.

பெரியமடு, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற எமது பிரதேசங்களில், காடழித்து முஸ்லிம்கள் அடாத்தாகக் குடியேறுகின்றனர் என்று இனவாதிகள் கொக்கரித்த போது, பேசாது இருந்தவர்கள், அவற்றைத் தட்டிக் கேட்காது இருந்தவர்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இனவாதிகளிடம் எமது சமூகத்தையும், அவர்களின் பிரதிநிதிகளான என்னையும் காட்டிக் கொடுத்தவர்கள், இப்போது பசப்பு வார்த்தைகளைக் கூறி வாக்குகளை கறக்க முயல்கின்றார்கள். இவர்களின் முஸ்லிம்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள், “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது.

மக்கள் காங்கிரஸ் செய்த பணிகளை குற்றங்கூறுபவர்கள் – விமர்சிப்பவர்கள் – குறை காண்பவர்கள் இந்த மக்களின் விடிவுக்காக என்னதான் செய்திருக்கின்றார்கள்? நாங்கள் செய்வது பிழை என்றால் அவர்கள் செய்த அபிவிருத்திகள் என்ன?

எத்தனை பாதைகளை அமைத்துள்ளார்கள்? எத்தனை பேருக்கு தொழில் வழங்கியுள்ளார்கள்? அகதிகளினதும், அனாதைகளினதும், விதவைகளினதும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இவர்கள் அமுல்படுத்திய சமூகநலத் திட்டங்கள் ஒன்றையாவது கூற முடியுமா?

எத்தனையோ பலமான அமைச்சுப் பதவிகளை தம்வசம் வைத்திருந்தும், உருப்படியாக எதையுமே செய்ய முடியாதவர்கள் நம்மிடம் வந்து வாக்குகள் கேட்பது வெட்கக் கேடானது அல்லவா?

இவர்களின் இந்த ஏமாற்று அரசியல் செயற்பாடுகள் இப்படியிருக்க, வன்னியைச் சேர்ந்த புதிய அரசியல்வாதி ஒருவர் எம்மை இப்போது மோசமாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார். இல்லாத பொல்லாத அபாண்டங்களை எல்லாம் அவர் பரப்புகின்றார்.

தாங்கள் அரசியல் செய்வதற்காக என்னையும், எனது பணிகளையும் கொச்சைப்படுத்தி குளிர்காய நினைக்கும் இவர்கள் தொடர்பில், வாக்காளர்களாகிய நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றேன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.           

2 comments:

Powered by Blogger.