February 28, 2018

சிரியா அழுகிறது, இறைவனுக்கு கொஞ்சம்கூட இரக்கம் வராதா என்ன..?

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

மனிதர்கள் கொலை செய்யப்படும் காட்சிகளைப் பார்த்து சகித்துக்கொள்ளும் சக்தியை இயல்பிலே இறைவன் அதிகமானவர்களுக்குக் கொடுக்கவில்லை, அதனைப் பார்த்து தாங்கிக் கொள்ளும் அளவிற்கு என் மனதுக்கும் சக்தி கிடையாது, அப்படிப் பார்த்து விட்டால் அதே நினைவில் வேறு வேலைகளில் ஈடுபட முடியாத ஒரு சூழ் நிலை என்னையறியாமலே உருவாகிவிடுகிறது, ஆதலால் இந்த விடயத்தில் என் கண்களை குருடாக்கிக் கொள்ளவே முயற்சிக்கிறேன்.

கடந்து செல்லும் வேளை என்னை அறியாமலே சில படங்களை பார்க்க நேரிடும் போது எனக்குள் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நான் பெற்றெடுத்த எனது ஒரு வயது மகளை ஓர் ஊசியால் முதுகில் நானே துளையிடுவேனா ? அதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறதல்லவா ? அப்படியாயின் அந்த குழந்தையை பிரசவித்த தாய் ஈவிரக்கமற்ற அந்த ஈனச் செயலை செய்ய முற்படுவாளா ? செய்வதென்ன அதனை நினைக்கையிலே மயக்கமுற்றுவிடுவாள். 

அப்படியாயின் என்னை விட அந்த தாயை விட பலபத்து மடங்குகள் கருணையுள்ள ரஹ்மான் முன்னிலையில் தானே இவையெல்லாம் நடக்கின்றன அவன் பார்வைகளற்றவனா ? அல்லது சிரியா மக்களின் கதறலையே கேட்க முடியாத செவிடனா ? அநியாயங்களையும், அரங்கேறும் அவலங்களையும் கண்டும் காணாமல் இருக்க அவனென்ன அரக்கனா ?

கருணையில் 100 ல் ஒரு பகுதியை உலக மக்களுக்கு வழங்கிவிட்டு மீதி 99 அவனிடம் வைத்துக் கொண்டது இந்த காட்டு மிராண்டித் தனங்களையெல்லாம்

பார்த்து ரசிக்கவா ?

இல்லவே இல்லை ..... 

அவன் ரஹ்மான் அவன் ரஹீம் அவன் ஹகீம் எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டுமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும்,

எனக்கும் உங்களுக்கும் வலிக்கும் போது என்னை விட உலக மக்களை விட கருணையுள்ள ரஹ்மானுக்கு கொஞ்சம் கூட இரக்கம் வராதா என்ன ? 

அவனது இரக்கத்தின் வெளிப்பாடு ஈயின் இறக்கையை விட பெறுமதியற்ற உலக வாழ்வின் சுகபோகங்களில் திளைக்க வைப்பதா ? வானம் பூமியை விட விசாலமான சுவனத்தின் சுகந்தங்களை மரணித்த மறு கனமே சுவைக்கச் செய்வதா ?

எனக்குத் தெரியாது ஏன் அவன், இன்னும்  மௌனித்திருக்கிறான் என்று ...

அவனது மௌனத்திலும் ஞானமிருக்கிறது என்பதைத்தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது...

ஒரு வேளை சிரியா தேசத்தினருக்காக சித்தப்படுத்தி வைக்கப்பட்ட சுவனத்து சுகந்தங்களெல்லாம் வீணாகி விரயமாகி விடக் கூடாதென்பதனாலோ ? அல்லது அரக்கர்களை அடக்க அபாபீல்களை தரையிறக்க காத்திருக்கிறானோ?

உன்னை முழுமையாக அறிய நான் என்னையே அறியாதுள்ளேன் நீயே அனைத்தும் அறிவாய் என்பது மட்டுமே நானறிவேன்.

உன்னைத்தான் இறைவா!

0 கருத்துரைகள்:

Post a Comment