Header Ads



ஜனாதிபதியின் சுதந்திர தின உரை...!

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு தேசத்தின் சுயபாதுகாப்பாகும் என்றும் அது இந்த யுகத்தின் தவிர்க்க முடியாத தேவையாகும் என்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாக உள்ள சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில் ஊழல் பிரதான தடையாக உள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

கொழும்பு காலி முகத்திடலில் இன்று (04) இடம்பெற்ற 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். நாட்டின் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில் ஊழலுக்கெதிரான விரிவானதோர் தேசிய இயக்கம் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகள் நாட்டின் பொருளாதார சுதந்திரத்தின் மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து அரசியல்வாதிகளும் அவர்களது கடமைகளை முன்னுதாரணமிக்க வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அபிவிருத்தி முன்னுரிமைகளை அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தி மூலோபாயங்களில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நடைமுறைப்படுத்துவதன் காரணமாக மோசமான எதிர்விளைவுகள் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார்.

நிதி ஒழுங்குகளுக்கான தேவையை வலியுறுத்திய ஜனாதிபதி, அரசியல்வாதிகளும் அனைத்து திணைக்களத் தலைவர்களையும் உள்ளடக்கிய அரசாங்க ஊழியர்களும் மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றும்போது நிதி ஒழுங்குகளை முழுமையாக பேணி செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

தூய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கு ஊழலுக்கெதிரான தேசிய இயக்கமொன்றின் தேவை குறித்து விளக்கிய ஜனாதிபதி அத்தகையதொரு கூட்டு இயக்கம் நாட்டின் கல்விமான்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 70 வருட காலப்பகுதியில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களை எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமை முக்கியமானதொரு சவாலாகும் என்றும் மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக அனைத்து அரசாங்கங்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, சாதகமான பங்களிப்புகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அந்த அனுபவங்களுடன் அதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பித்திருப்பதாகவும் அதனை மிகவும் வினைத்திறன் மிக்கவகையில் நடைமுறைப்படுத்தி இந்த சவாலை நாம் வெற்றிபெற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். 

எல் ரி ரி ஈ பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு பாரிய தியாகங்களை செய்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எல் ரி ரி ஈ பயங்கரவாதிகள் எமது நாட்டை துண்டாட முயற்சித்தவேளையில் எமது முப்படையினரும் பொலிஸாரும் சிவில் பாதுகாப்புப்படையினரும் பாரிய தியாகங்களைச் செய்தனர் என்றும் தேசத்தின் எதிர்காலம், சுதந்திரம், ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காகவே அவர்கள் இந்த வலி நிறைந்த அனுபவங்களை தாங்கிக்கொண்டனர் என்றும் தெரிவித்தார்.

தேசத்தை கட்டியெழுப்புவதில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பரங்கியர் ஆகிய அனைத்து இனங்களுக்கும் மத்தியிலான ஐக்கியத்தையும் அனைத்து மக்களும் சமமான பிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உண்மையான நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதற்கு அனைத்து தரப்பினரதும் முழுமையான அர்ப்பணிப்பும்  ஒத்துழைப்பும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018-02-04

No comments

Powered by Blogger.