Header Ads



தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபையில் சிக்கல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய தெஹிவளை –கல்கிஸ்சை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில், ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக்கட்சி 36 ஆயிரத்து 85 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 36 ஆயிரத்து 29 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

விகிதாசார அடிப்படையில், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 மேலதிக ஆசனங்களும், பொதுஜன பெரமுனவுக்கு 5 மேலதிக ஆசனங்களும் கிடைத்துள்ளன. இதற்கு அமைய இரண்டு கட்சிகளுக்கும் தலா 19 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை இந்த மாநகர சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 10 ஆயிரத்து 956 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன பெரமுனவுடனோ கூட்டணி சேர்ந்தால் மாத்திரமே மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியும்.

எவ்வாறாயினும் எந்தகட்சியுடனும் கூட்டணி அமைக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் எந்த கருத்துக்களை வெளியிடவில்லை.

தெஹிவளை –கல்கிஸ்சை மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமையானது தேர்தல் முறையில் காணப்படும் அடிப்படையான சிக்கலை வெளிக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே மாநகர சபையில் ஆட்சியமைக்கும் பலம் கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் நிலைமையானது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.