February 25, 2018

இப்படி வாழ்ந்தால், இறையருள் பொங்கி வழியுமே..!

பெண், குடும்ப வாழ்வு என்று வருகின்றபோது நம்மில் பலரது குடும்பங்கள் வரலாற்றில் இடம்பெற்ற அரிதான நிகழ்வுகளைத் தேடிச் சென்று அதனை இன்றைய உலகுடன் தொடர்புபடுத்தி இஸ்லாமும் நவீன உலகுக்கு பொருத்தமான வகையில் பெண், குடும்பம் பற்றி பேசியுள்ளது என்ற தோற்றத்தை காட்ட முனைகின்றனர்.

இது இஸ்லாம் ஏதோ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது போன்றும் அதனை விடுதலை செய்வதற்காக நாமும் உங்களைப் போன்றுதான் எனக் கூறி அதன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்க முனைவது போன்றும் உள்ளது.

எனவேதான், நவீன காலத்தில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்வுபற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.
உமருக்கு அப்போது 20 வயது. அவன் நான்காம் வருடத்தில் உயர்கல்வியை தொடர்ந்துகொண்டிருந்தான். ஒரு நாள் அவன் பாடசாலை விட்டு வந்தபோது அவனது தாய் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவனுக்கு சொன்னாள். எல்லா இளைஞர்களும் தமது இளமைப் பருவத்தில் எதிர்பார்க்கும் இனிமையான செய்திதான் அது.

‘உனது தந்தை உனக்கு திருமணம் செய்து வைக்க யோசிக்கின்றார்’ என்று அவனது தாய் கூறியதும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. எனினும், திருமணத்தில் மணப்பெண்ணைத் தெரிவுசெய்கின்ற அதிகாரம் தனக்குத் தான் இருக்கின்றது. அதனை தந்தை எப்படி செய்ய முடியும் என அவனது இளமை அவனுக்குள் கர்வம்கொள்ள ஆரம்பித்தாலும் இறுதியில் தந்தையின் கண்டிப்பான வேண்டுகோளினால் மணப்பெண்ணைப் பார்ப்பதற்கு உமர் சம்மதித்தான். மணப்பெண்ணைப் பார்த்தபோது அவள் அவனுக்கு பொருத்தமாகவே இருந்தாள்.

தந்தை பேசிய திருமணம் நிகழ்ந்து ஆறு மாதத்தில் அவர் மரணித்துவிட்டார். நமது மார்க்கத்தின் அரை வாசியை பூரணப்படுத்துவதற்கு உதவி செய்து விட்டு அவர் அல்லாஹ்விடம் சென்றுவிட்டார். எனது திருமணத்தின் பின்னர் எனது மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் எனது உள்ளம் விரும்பியது கிடையாது. வேறு யாரையும் திருமணம் முடித்துக் கொள்வது பற்றி நான் சிந்தித்ததுமில்லை.

நான் எனது மனைவியுடனேயே எனது குடும்ப வாழ்வை போதுமாக்கிக் கொண்டேன். நானும் மனைவி யும் 53 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். 1989 ஆம் ஆண்டு ரமழான் மாத அதிகாலை ஒன்றில் நாம் ஒன்றாக ஸஹர் செய்து ஒன்றாக சுபஹ் தொழுததன் பின்னர் எனக்கு பூரண விசுவாசமாக வாழ்ந்த மனைவி அல்லாஹ்விடம் சென்றுவிட்டாள். ஏழு வருடங்களாக அவளுக்கு ஏற்பட்டிருந்த தீராத நோயினால் படுக்கையிலே இருந்தாள்.

இப்போதும் அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கின்றபோது எனது உள்ளம் வேதனைப் படுகின்றது. அவளது ஞாபகம் வரும்போது நான் அழுது விடுகின்றேன். காரணம் அவள் ஒரு முன்மாதிரிமிக்க மனைவியாக வாழ்ந்தாள். அவள் எனக்கு சுவையாக சமைத்துத் தருவாள். எனது உடைகளை கழுவித் தருவாள். பணிப்பெண்ணுடன் இணைந்து வீட்டை சுத்தமாக வைத்திருப்பாள். நான் ஏதாவது செய்தால் ‘ஏன் நீங்கள் அவ்வாறு செய்தீர்கள்’ எனக் கேட்க மாட்டாள். நான் ஏதாவது செய்யாமல் விட்டுவிட்டால் ‘ஏன் செய்யவில்லை’ என்றும் கேட்க மாட்டாள்.
அவள் என்னிடம், அவளுக்காக என்று எதனையும் கேட்டது கிடையாது. ஏனெனில், நான் ஒரு மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் அனைத்தையும் அவளுக்குப் பெற்றுக் கொடுத்தேன். திருமணத்தின் பின்னர் சுமார் 17 வருடங்களாக அவள் தனது உறவுகளை சந்திப்பதற்கு அல்லது மரண வீடுகளுக்கு அல்லது வைபவங்களுக்கு என்னோடு கூடவே வாகனத்தில் வருபவளாக இருந்தாள்.

அந்த நாட்களில் பொது வாகனத்திலோ பிற வாகனங்களிலோ அவள் பயணித்தது கிடையாது. அல்லது பாதையில் தனியாக நடந்து சென்றதும் கிடையாது. ஏனெனில் நான் அவளது விஷயத்தில் கடும் ரோசமுடையவனாக இருப்பதை அவள் அறிந்து வைத்திருந்தாள். சூரியன் அதனது கதிர்களை அவள்மீது ஒளிரச் செய்வதைக் கூட நான் விரும்புவதில்லை என்பது அவளுக்குத் தெரியும். காற்று அவளது ஆடையின்மீது படுவதைக் கூட நான் விரும்புவதில்லை என்பதை அவள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்.
இதற்காக அவள் என்னைக் கடிந்துகொள்ளவோ அதனை சங்கடமாகப் பார்க்கவோ இல்லை. என்னிடம் காணப்பட்ட ரோஷ உணர்வு பலபோது அவளுக்குப் பிடிக்காதபோதும் அவள் அதனைப் பேணிக் கொண்டாள். அவள் மூலம் எனக்கு நிறைய குழந்தைச் செல்வங்களை அல்லாஹ் தந்தான். எனினும் அவர்களில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே எமக்கு எஞ்சினர். அவர்கள் நால்வரும் நல்லொழுக்கம் நிறைந்த பணிவான பிள்ளைகள்.

எனது ரோஷ உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு இருக்கின்றது. அதனை இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். 1954 ஒக்டோபர் தொடக்கம் 1971 ஜூலை வரை அப்துந் நாஸரின் ஆட்சியில் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன். சிறையில் 17 வருடங்களைக் கழித்தேன். இந்தக் காலப் பகுதியில் எனது மனைவி மிகவும் பொறுமையுடன் தனது வாழ்வைக் கழித்தாள். சிறையில் நான் பத்து வருடங்களாக அவளைக் காணாமலேயே இருந்தேன்.

என்னை சந்திக்க அவள் சிறைக்கு வரும்போது என்னுடன் சிறையில் இருந்தவர்கள் அவளைக் கண்டுவிடுவார்கள் என்ற ரோஷ உணர்வினால் அவளை அங்கு வருமாறு நான் அழைக்கவில்லை. எனினும் சிறையில் இருந்த எமது சகோதரர்கள் நான் இவ்வாறு இருப்பதைக் கண்டித்தபோது அவளை அங்கு வருமாறு அழைத்தேன். நானும் அவளும் பத்து வருடங்களின் பின்னர் சிறைக்கூடத்தில் சந்தித்த போது இருவரும் சில நாட்களாவது பிரிந்திருக்க வில்லை என்பது போன்றிருந்தது அந்த சந்திப்பு.

எனக்கு ஞாபகமிருக்கின்றது. 1936 ஆம் ஆண்டு நான் வீட்டுக்கு வானொலி ஒன்றை வாங்கிவந்தேன். அப்போது அவள் அதில் ரியாழ் ஸன்பாதி என்ற பாடகருடைய ஒரு பாடலைக் கேட்டுவிட்டு அது நன்றாக இருப்பதாக என்னி டம் கூறினாள். அந்தப் பாடகரின் பெயரைக் கேட்டதும் எனது ரோசம் மேலெ ழுந்தது. அதன் பிறகு ‘நீங்கள் வானொலியை மூடி வைத்துவிடுங்கள்’ என்று கூறினேன். அவள் எந்த மறுப்புமின்றி அதற்கு செவிமடுத்தாள். ஏனெனில் எனது உணர்வுகள் பற்றி அவள் நன்கு விளங்கி வைத்திருந்தாள்.
எனது வாழ்வில் எனது மனைவியைத் தவிர வேறு பெண்களுக்கு இடம் கிடையாது. ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ள சபைகளுக்குச் சென்றால் நான் அங்கு தலை குனிந்துவிடுவேன். அங்கு இருப்பது எனக்கு சிரமமாக இருக்கும். எனக்கு எந்தப் பெண்ணினதும் முகத்தைப் பார்ப்பதோ நோக்கிப் பேசுவதோ சிரமமானது. நான் அதிகமான பெண்களுடன் பேசுவதை விரும்புவதே இல்லை.

இதனை நாகரிக உலகில் வாழ்வோர் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் குறைபாடாகக் கருதலாம். கோழைத்தனமாக நினைக்கலாம். எனினும் ஆண், பெண் சமத்துவம் பற்றிய, கலந்து பழகுவது பற்றிய இந்த நவீன சித்தாந்தங்கள் பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்வதே இல்லை. எனது பார்வையில் ஆண் என்பவன் ஆண்தான். பெண் என்பவள் பெண் தான். ஆணுக்கென்று அவனது உலகும் பெண்ணுக்கென்று அவளது உலகும் காணப்படுகிறது. அல்லாஹ் அப்படித்தான் படைத்துள்ளான்.

இந்த அமைப்பை யாராலும் மாற்ற முடியாது. பெண்கள் ஆண்களுடன் சமமாக, சகஜமாகப் பேசிப்பழகுவது நாகரிகம் எனக் கருதும் பெண் அதன் விளைவாக தனது கற்பையும் கண்ணியத்தையும் இழக்கும் முன்னர் அவள் தனது பெண்மையை இழந்துவிட்டவள் ஆவாள்.
நான் எனது அலுவலக உதவியாளனிடம் அலுவலகத் திலுள்ள பெண்களை தனியாக அனுப்பக் கூடாது என்றும் யாராவது தனியாக வந்தால் கூடவே அவனும் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தேன்.

ஒருமுறை நான் இத்தாலிக்கு அலுவலக விஷயமாக சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்திற்கு முடி வெட்டுவதற்காக சென்றேன். அங்கு வேலைக்காக பெண்கள் மட்டுமே இருந்தனர். அங்கிருந்த வர்களிடம் ‘எனக்கு முடிவெட்டுவது யார்’ என்று கேட்டேன். அவர்கள் ஒரு யுவதியைக் காட்டினார்கள். அதற்கு ‘நான் ஆண்கள் யாரேனும் இல்லையா’ என்று கேட்டேன். அவர்கள் இல்லையென்றதும் ‘அப்படியாயின் நான் முடி வெட்டமாட்டேன்’ என்று திரும்பிவிட்டேன்.

எனது வாழ்வில் பெண்களுக்கும் எனக்குமான தொடர்பு இப்படித்தான் இருந்தது. எனக்கு விசுவாசமாய் வாழ்ந்த ஒரே மனைவிதான் எனது வாழ்விலும் குடும்பத்திலும் சந்தோசத்தைப் பூரணமாகத் தந்தவள். எனது இந்த நடத்தைகளைப் பார்த்துவிட்டு நான் பெண்களை இழிவாகக் கருதுவதாக யாரும் நிணைக்க வேண்டாம். அவர்கள் என்னிடம் எவ்வளவு கண்ணியத்திற்குரியவர்கள் என்பதை அல்லாஹ்வே அறிந்தவன். எனது நடத்தைகளும் அவர்களை கண்ணியப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.
பெண்கள் தமது இயல்புக்கும் பெண்மைக்கும் பொருத்தமான வகையில் தேவை ஏற்படும்போது தொழில் செய்யலாம் எனும் கருத்தை நான் கொண்டிருக்கின்றேன். எனினும், அவள் எப்போதும் தன்னையும் தனது பெண்மையையும் பொய் புரளிகளிலிருந்து பேணிக்கொள்ள வேண்டும். இஸ்லாம் உரிமையிலும் கடமையிலும் விமோசனத்திலும் தண்டனையிலும் ஆணையும் பெண்ணையும் சமப்படுத்தி வைத்திருப்பதுவே போதுமானது.

இதுவரையும் குடும்பவாழ்வின் சில நிகழ்வுகளையும் பெண்கள் பற்றிய தனது நிலைப்பாட்டையும் எங்களுடன் பகிர்ந்துகொண்ட அந்த உமர் யாராக இருக் கும்? அது யாருமல்ல நவீனகால இஸ்லாமிய இயக்கங்களின் தாய் இயக்கமாகிய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் மூன்றாவது முர்ஷிதுல் ஆம் உமர் தில்மிஸானி ஆவார்.

இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பை அதன் வரலாற்றில் மிகவும் சிரமமான ஒரு காலப்பகுதியில் வழிநடாத்தியவர். இஹ்வான்களின் சர்வதேச ஒழுங்கை ஒரே நிர்வாகத் தொடர்பின் கீழ் ஒழுங்கமைத்தவர். உலகின் பல் வேறு நாடுகளுக்கும் பிரயாணம் செய்து இஹ்வான்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தியவர்.

அந்த அறிஞர் பெண்களுடன் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். இந்த அறிஞர் பெண்களுடன் சகஜமாகப் பழகுகின்றார். பெண்களுடன் இச்சையின்றி சகஜமாகப் பேசலாம். அவர்களுடன் தொலைபேசியில் சாதாரணமாக உரையாடலாம் என்று தமது மனோ இச்சைகளை நியாயப்படுத்திக் கொள்பவர்கள் எத்தனைப் பேர்? உஸ்தாத் உமர் தில்மிஸானியின் இத்தகைய வாழ்வு அவரது இலட்சியப் போராட்டத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தியதா? இல்லை. அவர் தனது இலட்சிய வாழ்வை சங்கடங்களின்றி வழிநடாத்திச் செல்ல, இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பை ஓர் இக்கட்டான சூழலில் கட்டியெழுப்ப இத்தகைய அவரது நிலைப்பாடுகள்தான் உதவிற்று.
இது அவர் சொல்வது போன்று பிற்போக்குத் தனமல்ல. நாம் உலகம் போகும் போக்கில் எல்லாத் தாளத்தையும் போடவேண்டியதில்லை. இஸ்லாம் ஆண், பெண் வேறுபாட்டையும் அவர்கள் எங்கு சந்திக்கலாம். எங்கு சந்திக்கக் கூடாது. எங்கு கலக்கலாம், எங்கு கலக்கக் கூடாது என்பதையெல்லாம் சந்தேகங்களுக்கு அப்பால் நின்று சொல்லித் தந்திருக்கிறது.

நான் நினைக்கின்றேன் இஸ்லாம் இவ்விஷயங்களில் மனித அறிவுக்கு இடம் வைக்கவில்லை. அல்லாஹ்வே ஆணையும், பெண்ணையும் படைத்தவன். அவர்கள் உலகில் எப்படி வாழ வேண்டும் என வழிகாட்ட அவனே போதுமானவன். அதற்கப்பாலான வழிகாட்டலால் உலகம் எங்கு செல்கின்றதென்பதற்கு நமது கண்களே நமக்கு சாட்சி. நமது உள்ளமே நமக்கு உண்மை. நமது உணர்வுகளே நமக்கு வெளிச்சம். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

vaikarai + meelparvai

0 கருத்துரைகள்:

Post a Comment