Header Ads



ரவிக்கும், லக்‌ஷ்மனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நல்லாட்சி அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் அமைச்சராக நியமிக்கப்படவில்லை.

ரவி கருணாநாயக்க அமைச்சராக நியமிக்கப்படுவது பொருத்தமானது என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்திருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயர் இடம்பெறவில்லை.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவின் பெயர் பேசப்பட்டதன் காரணமாக, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக பின்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ரவி மீது நேரடியாக குற்றம் சுமத்தப்படவில்லை.

ரவி கருணாநாயக்க மீது குற்றம் சுமத்தப்படாமை மற்றும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்படாத நிலையில், அமைச்சராக நியமிக்கப்படாதது அநீதியானது என ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரிடம் கூறியுள்ளனர்.

2

அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவுக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம் கிடைத்த அதிர்ச்சிக்கு மேல் இன்னுமொரு அதிர்ச்சி காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பெருந்தெருக்கள் அபிவிருத்தி மற்றும் உயர்கல்வி அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சரவை மாற்றத்தின் போது அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அமைச்சுப் பதவியை இதுவரை அமைச்சர் கபீர் ஹாசிம் வகித்து வந்த காலத்தில் அரசாங்கத்தின் வங்கிகள் அனைத்தும் அவரின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன.

எனினும் இன்றைய அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து அரச வங்கிகள் மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு அமைச்சுக்களின் பொறுப்புகள் மற்றும் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தில் தயாராகி வரும் நிலையில், அரச வங்கிகள் நிதியமைச்சின் விடயதானத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

No comments

Powered by Blogger.