Header Ads



மலைப் பாம்புகளால் நிரம்பிவழியும் திருகோணமலை எண்ணெய் கொள்கலன் மீது, விமானத்தை மோதி அழிவையேற்படுத்திய ஜப்பானியர்கள்

இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் திருகோணமலையின் மேற்குப் பக்கத்தில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட எண்ணெய் கொள்கலன் தாங்கிப் பண்ணை (oil tank farm ) ஒன்று காட்டில் மறைந்து காணப்படுகிறது.

ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கிழக்கிந்திய பாதுகாப்பு நடவடிக்கை இடம்பெற்ற போது பிரித்தானியக் கடற்படை மற்றும் பிரித்தானிய விமானப் படையினர் தமக்குத் தேவையான எரிபொருட்களை நிரப்புவதற்காக திருகோணமலையில் அமைக்கப்பட்ட எண்ணெய் கொள்கலன் தாங்கியைப் பிரதானமாகப் பயன்படுத்தினர்.  சிங்கப்பூரை ஜப்பான் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர், இப்பிராந்தியத்திற்கான பிரதான எரிபொருள் நிரப்பு நிலையமாக திருகோணமலை விளங்கியது.

தற்போது இக்கொள்கலன் தாங்கியானது பழுதடைந்த நிலையில் காணப்பட்டாலும் கூட, இங்கு பெற்றோலிய சேமிப்பு வசதியைச் செய்வதற்கான தனது ஆர்வத்தை இந்தியா வெளியிட்டுள்ளது. இது தொடர்பான இந்திய-சிறிலங்கா கூட்டு உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான சமரசப் பேச்சுக்கள் தற்போது இடம்பெற்று வருவதாக பெற்றோலிய அமைச்சர் சந்திம வீரக்கொடி உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2015ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட போது பெற்றோலிய கொள்கலன் தாங்கிகள் தொடர்பாகப் பேச்சுக்கள் நடத்தியதாகவும் திருகோணமலையில் பாழடைந்த நிலையில் காணப்படும் பிரித்தானிய காலத்து எண்ணெய் தாங்கிப் பண்ணையை அபிவிருத்தி செய்வதன் மூலம் திருகோணமலையானது பிராந்திய பெற்றோலிய மையமாகத் திகழ்வதற்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

திருகோணமலையில் பாழடைந்த நிலையில் காணப்படும் எண்ணெய் கொள்கலன் தாங்கிப் பண்ணையானது தற்போது காடுகளால் சூழப்பட்ட நிலையில் உள்ளது. 850 ஏக்கர் நிலப்பரப்பில் 101 கொள்கலன் தாங்கிகள் கட்டப்பட்டிருந்தன.

சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததன் பிற்பாடு இந்தக் கொள்கலன் தாங்கிகள் பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டன. அதன் பின்னர் இந்தப் பண்ணையைச் சூழவும் மரங்கள் வளர்ந்து இறுதியில் காட்டுப் பிரதேசமாக மாறியுள்ளது. இங்கு மலைப்பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இந்த எண்ணெய் கொள்கலன் தாங்கிப் பண்ணைக்கான ஆரம்ப கட்டப் பணிகள் 1924ல் மேற்கொள்ளப்பட்டு 1930ல் நிறைவடைந்தன. இக்கொள்கலன் தாங்கிகள் ஒரு அங்குல தடிப்பிலான உருக்கினால் வார்க்கப்பட்டுள்ளன. அத்துடன் திருகோணமலைத் துறைமுகத்திற்கு அருகிலுள்ள தாங்கிகள் ஒரு அடி தடிப்பில் மிகவும் பலமாகக் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கொள்கலன் தாங்கியும் 12,000 தொன் எரிபொருளை சேமித்து வைக்கக் கூடியவாறு கட்டப்பட்டன. திருகோணமலையில் பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட எண்ணெய் கொள்கலன் தாங்கிப் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துத் தாங்கிகளும் 1.2 மில்லியன் தொன் வரையான எரிபொருளை சேமித்து வைக்கக்கூடிய திறனைக் கொண்டிருந்தன.

தற்போது 15 தாங்கிகள் மட்டும் பயன்படுத்தத்தக்க நிலையில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் ஆளுகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் அனைத்து உரிமையும் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளன. இக்கொள்கலன் தாங்கிகளைச் சென்று பார்வையிடுவதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் அனுமதி தேவைப்படுகிறது.

இக்கொள்கலன் தாங்கிகளில் இரண்டு,   விமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று திட்டமிட்ட ரீதியில் ஜப்பானிய விமானத்தால் அழிக்கப்பட்டது. மற்றையது 1960ல் பிரித்தானியாவின் றோயல் விமானப்படை விமானம் தற்செயலாக இதில் மோதியதால் அழிவடைந்தது.

91வது கொள்கலன் தாங்கியானது ஏப்ரல் 09, 1942 இல் திருகோணமலைத் துறைமுகம் மீது ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அழிவுற்றது.  அனைத்து கொள்கலன் தாங்கிகளிலும் மிகவும் தொலைவில்  காணப்பட்ட 91வது தாங்கியானது எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. இத்தாங்கியைச் சூழ மேலதிக பாதுகாப்புத் தடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஜப்பானிய விமானப் படையைச் சேர்ந்த விமானிகளான சிகெனோரி வற்றனபே, ருயகோற்றோ மற்றும் சுற்றோமு றொசிரா ( Shigenori Watanabe, Tuyagoto, and Sutomu Toshira) ஆகியோர் 91வது தாங்கி மீது தமது விமானத்தை மோதி அழிவையேற்படுத்தினர். இத்தற்கொலைத் தாக்குதலால் ஏற்பட்ட தீச்சுவாலையானது ஏழு நாட்கள் வரை நீடித்தது. இறுதியில் உருக்கால் அமைக்கப்பட்ட இத்தாங்கி தீயால் உருகியது.

இந்த அழிவின் எச்சத்தை இன்றும் பார்க்கமுடியும். இக்கொள்கலன் தாங்கியைச் சூழவிருந்த பிரதேசம் தீயால் எரிந்து சாம்பலாகியது. இதனையும் இன்றும் நேரில் பார்க்க முடியும். இதன் நிலப்பகுதி கறுப்பு நிற சாம்பல் மேடுகளாகக் காணப்படுகின்றன. இக்கொள்கலன் தாங்கியில் மோதிய விமானத்தின் இயந்திரப் பகுதியின் எச்சங்களை கொழும்பிலுள்ள விமானப் படையின் அருங்காட்சியகத்தில் பார்க்க முடியும்.

91வது தாங்கியைச் சூழவுள்ள பிரதேசமானது எவ்வித மாற்றமில்லாது பழைய நிலையில் பாதுகாக்கப்படுகிறது. இக்கொள்கலன் தாங்கிக்குள் பாசி படர்ந்த நீர்க் குட்டை ஒன்றையும் காணமுடியும். இத்தாங்கிக்குள் உள்ளவற்றைப் பார்வையிடுவதற்காக அண்மையில் படிக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன.

91வது தாங்கிக்குச் செல்லும் வழியில் மேலும் பல தாங்கிகள் மறைந்து காணப்படுகின்றன.

இப்பகுதியானது மரங்கள் நிறைந்த வனாந்தரமாக மாறியுள்ளது. பழைய வீதிகள் மற்றும் நடைபாதைகள் தற்போது புதர்களால் சூழப்பட்டுள்ளன.

வழிமூலம்       – Roar ஆங்கிலத்தில் – MUDITHA KATUWAWALA மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.