Header Ads



மைத்திரி மீது, அரசியல்வாதிகள் பாய்ச்சல் - முகஸ்துதி பாடப்போய், வாங்கிக்கட்டிய மகிந்த சமரசிங்க


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகப் பேசப் போய் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது தேர்தல் தோல்விக்கு ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, தான் எதிர்க்கட்சியில் அமர அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பண்டாரநாயக்க கட்சியை ஆரம்பித்த பின்னர் எந்தவொரு தலைவரின் காலத்திலும் கட்சி இவ்வாறான தோல்வியொன்றை எதிர்கொள்ளவில்லை என்று விமர்சித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, கட்சியின் தலைமைப் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர் என்று அவரின் முகத்துக்கு நேரே விமர்சித்துள்ளார்.

கட்சியின் அடிமட்ட அங்கத்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி குறித்த அறவே நம்பிக்கை இல்லை என்றும் அதுவே ​தோல்விக்கான அடிப்படைக் காரணம் என்றும் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம குற்றம் சாட்டியுள்ளார்.

அதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, மேற்குறித்த கருத்துக்களை ஆமோதித்ததுடன், தேசிய அரசாங்கம் காரணமாக சுதந்திரக் கட்சிக்கு கடுமையான பாதிப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து வௌியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதி மைத்திரி போன்று நேர்மையான ஒருவரை தன் வாழ்நாளில் கண்டதில்லை என்றும், அதன் காரணமாகவே தற்போதைய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் தலைமையில் தொடர்ந்தும் பயணிப்பதன் மூலமே எதிர்காலத்தில் வெற்றிகளை அடைய முடியும் என்றும் வாதிட்டுள்ளார்.

இதனையடுத்து சுசந்த புஞ்சிநிலமே, திலங்க சுமதிபால உள்ளிட்ட குழுவொன்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதிக்கு முகஸ்துதி செய்வதாக குற்றம் சாட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே அமைச்சர் சமரசிங்கவை சாடியுள்ளனர்.

இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, குறித்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடையும் வரை அதன் பின்னர் எந்தவொரு வார்த்தையும் பேசாது மௌனம் காத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.