Header Ads



மைத்திரிக்கு அம்போ, பிரதமரை நீக்கமுடியாது - சட்டத்தரணிகள் சங்கம் அதிரடி


19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி,  பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று கூட்டு எதிரணியினருக்கு உறுதியளித்திருந்தார்.

இதுதொடர்பாக ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர்கள் லால் விஜேநாயக்க, கே.எஸ்.இரத்னவேலு,  சுதத் நெத்சிங்க,  பிரபோத ரத்நாயக்க, ஹரின் கோமிஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் “19 ஆவது திருத்தத்துக்கு முன்னர், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இருந்தது. ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், அந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது,

எனவே நாடாளுமன்ற வழக்கத்தின்படி, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலமே, சிறிலங்கா பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இதில் சிறிலங்கா அதிபர் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளரான கலாநிதி பிரதீப மகாநாமஹேவவும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.

இதற்கிடையே பிரதமரை சிறிலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பது பற்றிய சட்ட விளக்கத்தைக் கோர, உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான நடவடிக்கை நாளை மறுநாள் மேற்கொள்ளப்படவுள்ளது.

2 comments:

  1. ரணில் சூடு கண்ட பூனை இவர் ஏற்கனவே ஒரு பருப்பு சந்திரிக்க அம்யாரிடம் உண்டார்.அதனால்தான் யாருக்கும் கை வைக்க முடியாத படி 19ம் சட்ட திருத்தம் செய்தார்.

    ReplyDelete
  2. ஜனாதிபதியால் நீக்க முடியாது. ஆனால் தேசிய அரசு காலாவதியாகினால் அமைச்சரவையும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.