Header Ads



ஆனல்ட் மேயரானதன் பின்னணி, கண்ணீர் விட்டழுத சொலமன் சிறில் - சுமந்திரன் அணியினால் அநீதி

-Fs-

தமிழரசுக்கட்சியின் யாழ் மாநகரசபை முதல்வர் யார் என்பதை இன்று சுமந்திரன் அறிவித்துள்ளார். ஆனல்ட்டை முதல்வரென சுமந்திரனே தீர்மானித்து, கட்சியை சம்மதிக்க வைத்து, இன்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் மௌனமாக இருக்க, சுமந்திரனே அறிவித்தார். ஆனல்ட்டை முதல்வராக்குவதற்காக ஈ.பி.டி.பியுடன் இரகசிய “எழுதப்படாத உடன்படிக்கையை“யும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் ஆனல்ட்டை முதல்வராக சுமந்திரன் அறிவித்தார். எனினும், கூட்ட ஆரம்பத்தில், முதல்வர் யாரென்பதை இப்போது அறிவிக்காமல் விடலாமென மாவை சேனாதிராசா கூறினார். ஆனால், காலதாமதம் ஆனல்ட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாமென்பதால், சுமந்திரன் உடனடியாக அறிவித்தார்.

இதையடுத்து உரையாற்றிய சொலமன் சிறில், உணர்ச்சிவசப்பட்டு ஒருகட்டத்தில் குரல் தழுதழுத்து அழ ஆரம்பித்தார். தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணி (வெளிப்படையாக அதை குறிப்பிடாமல், ஒரு அணி என குறிப்பிட்டார்) எப்படி தனக்கு அநீதி இழைத்தது என்பதை விலாவாரியாக குறிப்பிட்டார். முதல்வர் தெரிவை சுமந்திரன் தனியே செய்து, மாநாகரசபை பிரதேச கூட்டங்களில் தன்னை அழைக்காமல், கூட்டங்களில் தனது பெயரையே பாவிக்காமல் கட்சியால் ஒதுக்கப்பட்டதாக குமுறினார். அவரது குற்றச்சாட்டு சரியென சீ.வீ.கே.சிவஞானம் வழிமொழிந்தார். ஆனல்ட் முதல்வரான பின்னரும் இப்படியான அணி அமைக்கும் வேலைகளை செய்யக்கூடாதென ஆலோசனை வழங்கினார்.

சிறில் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தபோது மாவை சேனாதிராசாவோ, சுமந்திரனோ எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் வாயடைத்திருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தான் இணையப்போவதாக சுமந்திரன் அணி கதை கட்டித்திரிவதாக குற்றம்சாட்டிய சிறில், தனது இரத்தத்தில தமிழரசுக்கட்சி இரத்தமே ஓடுவதாகவும், எந்தக்காலத்திலும் கட்சியை விட்டு செல்லப்போவதில்லையென்றும் கூறினார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைக்கும், தவிசாளருக்கும் எதிராக செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டது.

நாளைய தினம் முல்லைத்தீவில் ஒன்றுகூடும் கூட்டமைப்பின் தலைவர்கள், அங்குள்ள சபைகளின் தவிசாளர்களை தீர்மானிக்கவுள்ளனர். நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடும் தலைவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சபைகளின் தவிசாளர்களை தீர்மானிக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.