Header Ads



அஹ்மத் அஷ்ரப், பேராசிரியர் பட்டம் பெற்றார்

~அ(z)ஸ்ஹான் ஹனீபா~

இலங்கையில் ஹதீஸ் துறையில் முதல் கலாநிதி பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் எனும் பெயருக்கு சொந்தக்காரரான மதிப்புக்குரிய உஸ்தாத், கலாநிதி அஷ்ஷைக் அஹ்மத் அஷ்ரப் அவர்கள் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

தனது பாடசாலைக் கல்வியை சொந்த ஊரான காத்தான்குடியில் கற்ற ஷைக், ஷரீஆத் துறைக் கல்வியை அட்டாளச்சேனையில் அமைந்திருக்கும் ஷர்கிய்யா அரபுக் கலாசாலையில் சிறப்பாகக் கற்று ஆலிமாக பட்டம் பெற்று வெளியேறினார், தொடர்ந்து கற்ற கல்வியை கற்பிக்கும் பொருட்டு சம்மாந்துறையிலுள்ள தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கல்வித் தாகத்தின் அடுத்த கட்டமாக உலகில் ஷரீஆ கற்கைகளுக்கான பழமையும் முன்னணியும் வாய்ந்த அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி, மிகச் சிறந்த பெறுபேறுகளுடன் ஹதீஸ் துறையில் கலைமாணி, முதுமாணி, கலாநிதி என்ற அனைத்து கற்கைகளையும் நிறைவு செய்து தனது குடும்பம், மத்ரஸா, ஊர் மற்றும் நாட்டுக்குப் பெருமை சேர்த்தது பாராட்டத்தக்கதாகும்.

கலாநிதி பட்டத்துடன் ஊருக்குத் திரும்பிய வேளையில் ஊர் மக்கள் அனைவரும் பெரும் முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்து அமோகமாக வரவேற்றனர், பின்னர் கற்ற ஹதீஸ் துறையை அரபிகளுக்கு கற்பிப்பதற்காக சஊதியிலுள்ள அப்ஹா பிரதேச பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

அதனையடுத்து தற்பொழுது நஜ்ரான் பிலதேச பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறை விரிவுரையாளராக விளங்கும் கலாநிதி அவர்கள், குடும்பம் பிள்ளைகளுடன் வாழ்ந்த போதும் தனது கல்வித் தேடலில் எள்ளளவும் பின்னடைவைக் காணாது, அனைவரது பங்களிப்புடன் பற்பல ஆய்வுகளை மேற்கொண்டு விஷேட திறமை சித்தி பெறுபேறுகள் பெற்று இன்று (28/02/2018) இதே பல்கலைக்கழகத்தில் “பேராசிரியர்” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
الحمد لله الذي بنعمته تتم الصالحات .
மேற்குறித்த இப்பட்டம் உண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு பெருமை சேர்க்கும் ஓர் வரலாற்று நிகழ்வாக அமையும் இதேவேளை இலங்கைக்கு கிடைத்திருக்கும் அரும்பெரும் பொக்கிசம் என்றால் ஒருபோதும் மிகையாகாது. ஷைக் அவர்கள் கற்ற கல்வியை கல்வியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நிமித்தம் கொழும்பில் “தாருல் ஹதீஸ்” எனும் நிலையத்தை நிறுவியதோடு, மார்க்க விளக்க வகுப்புகள் நடாத்துதல் மற்றும் தமிழ், அரபு மொழிகளில் பல புத்தகங்களையும், ஆக்கங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுக்கு மார்க்க விளக்கங்களை அளிப்பது மாத்திரமன்றி, ஹதீஸ் அறிவிப்பாளர்களை தரம் பிரித்து சரியாக ஆய்வுகளை மேற்கொள்வதில் இலங்கையில் முன்னணியில் நிற்பவர் ஷைக் என்பது மறுப்பதற்கில்லை.
இத்தருணத்தில் இலங்கை மக்களாகிய நாமும் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பேரானந்தம் அடைகிறோம்.
ஷைக் அவர்களது கல்விப் பாதைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் நற்கூலிகளை வழங்குவதோடு ஷைக் அவர்களது வாழ்க்கை மேலும் கல்வியால் ஒளிமயமாகி, நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழும் பேற்றைப் பெற்று, மக்களும் மென்மேலும் உங்களது அறிவுக் கடலினால் பயன்பெற அருள் புரிய வேண்டுமென பிரார்த்திக்கிறோம்.
ولله الحمد و المنة في الأول والآخر
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
28/02/2018

No comments

Powered by Blogger.