Header Ads



ரணிலின் தலை தப்புமா..? (யானைகளின் கூட்டதில் பேசப்பட்டவை)


ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சி சகாக்களே கூட்டாக வலியுறுத்தியுள்ளதால் ரணிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டரசின் பயணம் 2020ஆம் ஆண்டுவரை தொடர வேண்டுமானால் பிரதமர் பதவியையும் அவர் துறக்கவேண்டுமென விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையும் பேரிடியாக  அமைந்துள்ளது. எனவே, அடுத்துவரும் 48 மணிநேரத்துக்குள் தீர்க்கமானதொரு முடிவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுப்பாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் மண்கவ்விய மஹிந்த அணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் விஸ்வரூபமெடுத்துள்ளதால் தெற்கில் பெரும் அரசியல் புயல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிலும் மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு அதன் தாக்கம் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது தேர்தல் முடிவுகள் பற்றியும், கட்சியின் எதிர்காலம் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அவ்வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டுமானால் கட்சி தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியமென வலியுறுத்தப்பட்டது என்றும், இரண்டாம் அணிக்கு அதற்குரிய வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். அத்துடன், அரசிலும் மாற்றமொன்று ஏற்படவேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது எனவும் அவர் கூறினார்.

"மேற்படி கோரிக்கைக்கு பிரதமர் செவிமடுத்தார். வழமையைவிடவும் இளம் உறுப்பினர்களின் கருத்துகளை அவர் செவிமடுத்தார்.

தலைவரை என்னால் உருவாக்கமுடியாது. தலைமைத்துவம் என்பது தானாக உருவாக வேண்டும் என்று பிரதமர் எம்மிடம் கூறினார். கட்சியின் வெற்றிக்காக அவர் தலைமைப் பதவியைத் துறப்பதற்கு இணங்குவார் என்றே நம்புகின்றோம்'' என்று சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு தெரிவித்தார்.

அத்துடன், கட்சிக்குள் ஏற்படவேண்டிய மறுசீரமைப்புகள் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் கருத்து வெளியிட்டுள்ளார். விமர்சனங்களைத் தனிப்பட்டவையாகக் கருதாது, மாற்றமொன்று வேண்டுமென்ற மக்கள் ஆணையாக கருதுமாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைவரினதும் கருத்துகளையும் கேட்டறிந்த பிரதமர், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திவிட்டு முடிவொன்றை அறிவிப்பதாகக் கூறிவிட்டு ஜனாதிபதியை சந்திக்கச் சென்றுள்ளார். ஐ.தே.கவின் தவிசாளர் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

ஜனாதிபதியுடன் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார். நேற்றிரவு 8.45 மணியளவில் சந்திப்பு ஆரம்பமாகியது. இரவு 10 மணி தாண்டியும் அது தொடர்ந்து.

இதன்போது பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவேண்டுமென்ற சு.க. அமைச்சர்களின் நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாளை (இன்று) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்றும், தான் முடிவொன்றை எடுத்து அறிவிப்பதற்குள் நீங்கள் முடிவொன்றை எடுங்கள் என்று ஜனாதிபதி பிரதமருக்கு ஆலோசனை வழங்கினார் என்றும் அறியமுடிகின்றது.

அனைத்துத் தரப்புகளும் இவ்வாறு கைவிரித்துள்ளால் பிரதமர் ரணில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பை ரணில் துறக்கும் பட்சத்தில் கட்சியின் தலைமைப் பதவிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரமேதாஷ ஆகிய இருவரில் ஒருவர் தெரிவுசெய்யப்படலாம் என்றும், பிரதமர் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. பிரதமர் பதவியில் மாற்றம் வரும் பட்சத்தில் கூட்டரசு தொடரும் என்றே கருதப்படுகின்றது.

No comments

Powered by Blogger.