Header Ads



பெண் அதிபர்கள் ஆசிரியைகளும் துன்புறுத்தப்படுகின்றனர்

பெண் அதிபர்களும், பெண் ஆசிரியைகளும் உயர்அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதனை ஆதாரத்துடன் வெளிப்படுத்தவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை….

மலையத்தில் அதிபர் பவானி அவர்களை முழந்தாழிடச்செய்த நிகழ்வுக்கு உரியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தோம். படிப்படியாக தண்டனை வழங்கப்படுகின்றது. நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் திருப்தியாக உள்ளது.

அதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அதிபர்களும் பெண் ஆசிரியைகளும் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனை பலர் நாகரிகம் கருதி வெளிப்படுத்தாமலும், வெளிப்படுத்தினால் தாங்கள் இன்னும் பாதிப்படையும் நிலை ஏற்படும் என்ற அச்ச உணர்வு காரணமாக மூடிமறைத்து மனச்சுமைகளுக்கு உள்ளாகியுள்ளனர். சிலர் அத்தகைய விடயங்கள் தொடர்பில் எம்மிடம் முறையிட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயங்கமாட்டோம்.

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒரு ஆசியையை பாடசாலைக்குத் தேடிச்சென்று மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் மிகமோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரின் பிறப்பிடம் அவ்வாசிரியை சார்ந்த சமூகம் என்பன பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். அவ்வாசிரியை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சிசெய்து எம்மால் தடுக்கப்பட்டார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய உயர்நிலைத் தலைமைகளிடம் எடுத்துரைத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே பிறிதொரு வலயக் கல்விப் பணிப்பாளர் ஒரு பெண் ஆசிரியையை மாலை 5 மணியின் பின்னர் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு அவ்வாசிரியையின் கணவரிடமே கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பிலும் உரிய உயர்நிலைத் தலைமைகளிடம் எடுத்துரைத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான பல நிகழ்வுகள் வடகிழக்கு மாகாணங்களில் இப்போது தலைதூக்கியள்ளமை தொடர்பில் பெண் அதிபர்களும், ஆசிரியைகளும் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளதோடு, அவாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாக தங்களின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் தொர்பில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித்தேர்தல் முடிந்தவுடன் உரியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பிலும் சங்கம் எச்சரித்துள்ளது.

சிலர் தமக்கு இசைவான அரசியல்வாதிகளின் பின்னணியில் தொழிற்படுவது தொடர்பிலும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவை தொடர்பிலும் நாம் உண்மைகளை வெளிப்டுத்த தயங்கமாட்டோம். என்றுள்ளது.

No comments

Powered by Blogger.