February 21, 2018

பாராளுமன்றத்தில் நஸீரின் கன்னியுரை இது

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, இவ் உயரிய சபை உறுப்பினர்களே,

இந்த உயரிய சபையின் ஓர் அங்கத்தவனாக வருவதற்கு எனக்கும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கும் எனது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் MHM. அஸ்ரப் அவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தவனாக

எனது கட்சியின் தலைவர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி கூறியவனாக,

இந்தச்சபையிலே இன்று எனது கன்னி உரையினை ஆற்றுவதற்குச் சந்தர்ப்பத்தை வழங்கிய உங்களுக்கு முதற் கண் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் எனது அரசியல் பயணதில் அணைத்துப் பங்களிப்புகளையும் செய்து வரும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு குறிப்பாக எனது பிரதேசமான அட்டாளைச்சேனை மக்களை நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இன்றைய நாள் எனது வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு நாள்.

தற்போது இந்த நாட்டின் மிக முக்கியமான உள்ளுராட்சி தேர்தலை சந்தித்து விட்டு, அதன் விளைவாக தேசிய அரசியலில் பல தளம்பல்களும்,மாற்றங்களும் நடைபெற்று விடுமோ என்று அரசியல்வாதிகளாகிய நாங்களும் இந்த  நாட்டின் மக்களும் குழப்பமடைந்திருக்கின்ற இந்த சூழலில் நான் உறையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, எப்போதும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற நாம் எப்போதும் மக்கள் எதிர்பார்கின்ற ஜனநாயகம், நல்லாட்சி, சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி,நல்வாழ்வு என்பவற்றை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. இந்த நாட்டில் வேரூன்றியுள்ள சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டியது எமது பொறுப்பாகும்.

கடந்த 30 வருடங்களாக ஜனநாயகம் சுதந்திரம் நல்லாட்சி என்பவற்றுக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையை நாங்கள் மறந்து விட முடியாது. இப்படியான சூழ்நிலை கடந்த பாரளுமன்றத் தேர்தலோடு முடிந்து விடும் என்று நம்பிக்கை கொண்டிருந்த இந்தக் கால கட்டத்தில் தான் நாம் மீண்டும் ஒரு தேர்தலை சந்தித்தோம்.

இத்தேர்தல் மூலமாக மக்கள் எமக்கு ஒரு செய்தியை கூறியிருக்கிறார்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே, எனவே அவர்களின் அபிலாசைகளை மதித்து மீண்டும் தமது சுய சுக போக அரசியலுக்காக இந்த நாட்டை அரசியல் ஸ்தீரனமற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி சுயலாப அரசியலுக்காக நாட்டில் குழப்பமான நிலையினை தொடரவிடாமல் மக்கள் தமக்கு தந்த அமானிதத்தை பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி இந்நாட்டை சுபீட்சமுள்ள நாடாக மாற்ற நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, ஒரு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படும் போதுதான் மக்கள் எதிர்பார்க்கின்ற வளர்ச்சி ஜனநாயகம் சுபீட்சம் பெறும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
இந்த நாட்டில் ஊழல், துஸ்பிரயோகங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

இனவாதம், மதவாதம் என்பவற்றை பேசி இன்னும் இந்த நாட்டை குட்டிச்சுவராக்கும் நிலையை அனுமதிக்க முடியாது. சுயலாப அரசியலை தூக்கி எறிந்து விட்டு நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஒரு தேர்தலில் மக்கள் எம்மை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதற்கு கடந்த தேர்தல் எமக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது பிரதேசமான அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான
மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, மத்தியமுகாம், சாய்ந்தமருது, மாளிகைக்காடு, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை, ஓலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில்
என காணப்படுகின்ற அனைத்து பிரதேசங்களிலும்  பொருளாதார,கல்வி விவசாய, மீன்பிடி, காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.
இங்கிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும், அமைச்சர்களும் இதற்காக ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே, விஷேடமாக ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் தற்போது கடலிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது.

இதற்காக கௌரவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களே விஷேட கவணமொன்றினை இப்பிரதேசத்தின் மீது காட்டுங்கள். அத்துடன் எமது மீனவர்களின் படகு கட்டுமிட வசதியினை அதில் மேம்படுத்த நடவடிக்களை தாமதியாது மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போன்று சில வெற்றுக் காரணங்களுக்காக தீர்க்கப்படாமல் இருக்கின்ற காணிப் பிரச்சினைகளுக்கும் இந்த உயரிய சபை முடிவு காண வேண்டியுள்ளது. ​
1 வட்டமடு, பாலையடிவட்டை, பள்ளியடி வட்டை ,   கிராங்கோ, கிராங்கோமாறி,  வாங்காமம், இறத்தல் வட்டைபோன்ற பிரதேசங்களிலுள்ள விவசாயக் காணிகள் விவசாயிகளிடம் கையளிக்க அதிகாரிகள் செயட்பட வேண்டும் இதற்காக இச் சபை ஆவண செய்ய வேண்டும்.
விசேடமாக எமது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப் படாமல் உள்ள காணிகள் தொடர்பில் இச்சபை கூடுதல் கவனம் கொள்ள வேண்டியுள்ளது.


அத்துடன் கௌரவ சபாநாயகர் அவர்களே, மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற ஒழுங்கு வசதிகள் சம்மந்தமாக சில விடயங்களை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

நமது நாட்டின்  பல பகுதிகளிலும் சீரான காபட் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவற்றை பயன்படுத்தும் பாதசாரிகள் பாதை ஒழுங்கு வசதிகளை சரியாக பின் பற்றுபவர்களாக இல்லை.

அத்துடன் எனது மாவட்டமான அம்பாறையில் பிரதான பாதைகள் காபட் இடப்பட்டிருக்கின்ற போதிலும் பாதைகளின் வழிகாட்டல் பதாதைகள் இல்லாமலிருப்பது பெரும் குறைபாடாகும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, அநேக நகரங்களை அண்டிய பகுதிகளில் பாதை மின் விளக்குகள் இல்லாமலிருப்பதுவும்,இருக்கின்ற விளக்குகளில் வெளிச்சம் போதாதிருப்பதுவும் அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்றமையை நாம் அறிவோம்.

இவற்றை ஒழுங்கமைக்க போக்குவரத்து  மற்றும்   சிவில் விமான சேவைகள்  அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, அம்பாறை மாவட்டத்தில் இரண்டு மாநகர சபைகளும், ஒரு நகர சபையும், 17 பிரதேச சபைகளும் உள்ளபோதிலும் அவற்றில் எந்தப் பாதைகளிலும் வீதி நிறுத்தற் சமிக்ஞைகளுக்கான விளக்குகள் கிடையாது. இக்குறைபாடுகளை நிவர்த்திக்க இவ்வமைச்சு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,
அத்துடன் எனக்கு இந்த வாய்ப்பினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் எனது கட்சித்தலைவருக்கும் மீண்டும் நன்றிகளை சமர்ப்பித்து எனது உரையை முடித்துக் கொள்கின்றேன்.

வஸ்ஸலாம்

1 கருத்துரைகள்:

Post a Comment