Header Ads



இலங்கையில் இனப்பதற்றமும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் நீங்கவில்லை - ஹுசேன்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை மேற்கொள்வதற்கான ஏனைய வழிகளை ஆராயும்படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் ஐ.நா  மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடருக்குச் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான அறிக்கையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டில் இருந்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மற்றும்  ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளுடனான  சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் செயிட் ராட் அல் ஹுசேன், வரவேற்றுள்ளார்.

எனினும்,  2017 மார்ச்சில் தாம் குறிப்பிட்டவாறு,  இந்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்புடன், முக்கியமான கடப்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் கீழான,  நிலைமாறுகால நீதி கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக முடங்கிப் போயுள்ளது.

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும், சில நடவடிக்கைகளின் முன்னேற்றம் போதுமானதாகவும், தீர்மானகரமானதாகவும் இல்லை. அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகள் இல்லை. இதனை முன்னோக்கி நகர்த்துவதற்கு அரசியல் ஆதரவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை” என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

“2015ஆம் ஆண்டில் இருந்து, அறிக்கைகளிலும், உரைகளிலும், பொறுப்புக்கூறல் மற்றும் மறுசீரமைப்புகளில் போதுமான  முன்னேற்றங்கள் இல்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கவலை வெளியிட்டு வருகின்ற போதிலும், பொதுவான மனித உரிமைகள் நிலைமைகளின் சாதகமான முன்னேற்றங்களினால் ஊக்குவிக்கப்பட்டு வந்தது.

எனினும், இனப்பதற்றம் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் 2017இலும், முற்றிலுமாக நீங்கவில்லை.

கண்காணிப்பு  மற்றும் சித்திரவதைகள் தொடர்வதான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

சிக்கலான நம்பிக்கையைக் கட்டியெழுப்பும்  செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவதில்  போதுமான முன்னேற்றமில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளுக்கு தீர்வு வழங்குவது, போன்றவற்றிலும் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

எனவே, சிறிலங்காவில் பொறுப்புக்கூறலையும். நல்லிணக்கத்தையும் ஊக்குவிப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக உலகளாவிய அதிகார வரம்பை பயன்படுத்துவது உள்ளிட்ட ஏனைய வழிகளை ஆராயும்படி, உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்வதாகவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.