Header Ads



மோதலை குறைக்குமாறு சபாநாயகர் உருக்கமான அறிவுரை - மைத்திரி, ரணில் இணக்கம்


ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கிடையிலான அரசியல் மோதலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த அரசியல் மோதல்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கங்களை அடைவதற்கு, தடையாக அமையும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் சபாநாயகர் கரு ஜெயசூரிய எடுத்துக் கூறியுள்ளார்.

சபாநாயகரின் அழைப்பின் பேரில் கொழும்பில் சிறப்பு இடம் ஒன்றில் நடந்த சந்திப்பின் போதே, இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

”அதிபரிடமும், பிரதமரிடமும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இங்கு அரசியல் எதுவும் கிடையாது. ஒரு சபாநாயகராக, நான் சுதந்திரமானவன்.

நாங்கள் அடைய வேண்டிய திட்டம் ஒன்று உள்ளது. மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

சில அரசியல் பேச்சுக்களால் பொருளாதாரம் உறுதியற்ற நிலையை அடைந்துள்ளது.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. பங்கு வணிகம் சரிந்துள்ளது.  தேர்தலுக்குப் பின்னர் நாடு உறுதியற்ற நிலைக்குத் தள்ளப்படும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.

இதனால், எமக்கு நெருக்கமான அனைத்துலக சமூகமும் அண்மையில் இதனால் பிரச்சினையை எதிர்கொள்கிறது. இத்தகைய பிரச்சினைகள், நாட்டுக்கு நல்லதல்ல.

நீங்கள் இருவரும், அரசியல் தளங்களில் மோதல்களை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இதனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த நேரத்தில் இது அவசியமான தேவை.” என்று சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு இரண்டு அரசியல் தலைவர்களும் இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.