February 15, 2018

தாக்குப் பிடிப்பாரா ரணில்? பரபரப்பாகும் வெள்ளிக்கிழமை


கொழும்பு குழம்பிப் போய் இருக்கிறது என்கிறார்கள் இங்குள்ள அரசியல் நகர்வுகளை பார்க்கும் ஆய்வாளர்கள்.

நடந்து முடிந்தது வெறுமனே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்தான். ஆனால், இதுவரை காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த உள்ளூராட்சி தேர்தல்கள், பிபிசி ஆரம்பத்தில் இருந்தே கூறியது போல, தேசிய மட்ட அரசியலில் உடனடியாகவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிட்டத்தட்ட தேசிய மட்ட அரசியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சி இந்த தேர்தலில் பெற்ற வெற்றி, மத்தியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் மீண்டும் தேர்தல் நடக்க வேண்டும் என்று ராஜபக்ஷ வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், அரசியலமைப்பின் விதிகள் இப்போதே தேர்தலை நடத்துவதற்கு சிரமமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன.

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆதரவாளர்களோ ரணில் விக்கிரமசிங்க தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினால், அவரது கட்சியில் வேறு யாரையாவது தலைவராக, பிரதமராக கொண்டு ஆட்சியமைக்க வேண்டும் என்றும் அப்படியான அரசுக்கு தாம் ஆதரவு வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.

இங்கு அண்மையில் பிரபலமாக பேசப்பட்ட பிணைமுறி ஊழல் விவகாரத்துக்கு பிரதமர் ரணில் மீது குறை கூறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அவரை நிராகரிக்கிறார்கள்.

அவர்களால் ஐக்கிய தேசியக் கட்சியின் இன்னுமொரு முக்கிய தலைவரான கரு ஜயசூரிய கோடி காட்டப்பட்டாலும், அவர் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாமே தனியாக ஆட்சியமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டிருக்கிறது.


தமது கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இங்கு யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்ற போட்டி ஆரம்பமானது. அதாவது இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் இருப்பது 225 உறுப்பினர்கள். அதனடிப்படையில் ஒருவர் ஆட்சியமைக்க 113 இடங்களாவது குறைந்த பட்சம் தேவை.

பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் இருக்கின்றன. இன்னும் 7 பேரின் ஆதரவு அவர்களுக்கு இருந்தால் அரசாங்கத்தை அமைக்க முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஆதரவு வழங்குமானால் அவர்களால் எளிதாக ஆட்சியை தொடர முடியும்.

ஆனால், அண்மையை தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, சிங்கள கட்சிகளாக அவர்களால் வர்ணிக்கப்படும் தேசியக் கட்சிகளை நோக்கி அவர்கள் செல்வதை தடுத்திருப்பதாக தென்படுகிறது. ஐக்கியதேசிய கட்சி ஆட்சியமைக்க ஆதரவுதர அது மறுத்துவிட்டது.

எந்தவொரு சிங்கள கட்சியின் அரசிலும் தாம் அங்கம் வகிக்கமாட்டோம் என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழருக்கு நலன் தரும் திட்டங்களுக்கு மாத்திரமே ஆதரவு என்று கூறியுள்ளார்.

மறுபுறம் பார்த்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி ஆகியவற்றின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95மட்டுமே.

ஆகவே அவர்கள் ஆட்சியமைக்க மேலும் பல உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ரணில் அதிருப்தியாளர்களை ஈர்க்க முடியும் என்பது அந்தக் கட்சியின் எதிர்பார்ப்பு.

இதற்காக சில நடவடிக்கைகளை அது ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. மலையகத்தில் ஆறுமுகம் தொண்டைமானின் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், அந்தக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கம் அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை.

ஆனால், இப்போது அவர்களை அழைத்துப் பேசிய ஜனாதிபதி அதற்கான வாக்குறுதியை வழங்கியிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

அந்தக் கட்சியின் முத்து சிவலிங்கம் அவர்கள் துணை அமைச்சராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பும் தாம் யாருக்கு ஆதரவு என்பதை மீள் பரிசீலனை செய்வது போல தென்படுகிறது. ரணில் தரப்பு, மைத்திரி தரப்பு என்று நான்கு தெரிவுகள் தமக்கு முன்பாக இருப்பதாக கூறிய அமைச்சர் மனோகணேசன், தமிழருக்கு நன்மை தரும் தரப்பு எது என்பது குறித்து தாம் ஆராய்வதாக கூறுகிறார்.

இவ்வளவு நாளும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததாக இவர்கள் பார்க்கப்பட்ட நிலையில், இது அவர்களுக்கு கொஞ்சம் பாதகந்தான்.

இன்றைய இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆட்சியை அப்படியே தொடர்வதா, ஆளை மாற்றுவதா என்பதை ஆராய்ந்து சொல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு குழுவை அமைத்துள்ளார்.

அந்தக்குழுவின் முடிவு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. ஆகவே நாளைய தினம் கொஞ்சம் பரப்பானதாகத்தான் இருக்கப்போகின்றது. கொழும்பின் குழப்பங்கள் நாளை தீருமா அல்லது இன்னும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a Comment