Header Ads



சதுரங்க ஆட்டம் ஆரம்பம்

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றிபெற்றதையடுத்து தெற்கு அரசியலில் குழப்பநிலை உருவாகியுள்ளது. கூட்டரசையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

தேர்தல் முடிவு வெளியான தினத்திலிருந்து ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திவருவதாலும், இரகசிய சந்திப்புகளாலும் தெற்கு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் கொந்தளிப்பை தணிப்பதற்காக அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளும் சமரச முயற்சியில் இறங்கியுள்ளன.

தேசிய அரசிலிருந்து வெளியேறும் முடிவில் உறுதியாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால் கூட்டாட்சி பற்றி பரீசிலிக்கலாமென அறிவித்துள்ளது. ஆனால், பிரதமர் பதவியைத் துறப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. இதையடுத்து கட்சியின் உயர்மட்டப் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அத்துடன், தனியாட்சி அமைக்கவேண்டும் என ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருதரப்பும் இவ்வாறு விட்டுக்கொடுப்பின்றி செயற்படுவதால் ஜனாதிபதி மைத்திரிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேசிய அரசிலிருந்து விலகினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயாரென மஹிந்த அணியும் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய முயற்சியில் இருதரப்பும் இறங்கியுள்ளன. குறிப்பாக, தம்முடன் கைகோக்குமாறு மஹிந்த அணிக்கு சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அந்தத் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைவென்ற எம்.பியொருவரை பிரமராக அறிவிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் நேற்று மாலை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2017 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தலா ஓர் ஆசனம் வீதம் கைப்பற்றின. எனினும், நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.

(113 ஆசனங்கள்) இதையடுத்தே கூட்டாட்சி அமைக்கப்பட்டது. தற்போது கூட்டரசு குழம்பியுள்ளதால் 106 ஆசனங்களை வைத்துள்ள ஐ.தே.க. இன்னும் 7 ஆசனங்களைத் திரட்டி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று பிரதமர் உறுதியாக நம்புகிறார். இதற்கிடையில் மைத்திரி பக்கமுள்ள உறுப்பினர்களுடனும் இரகசியப் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன.

இதேவேளை, ஆளுங்கட்சியில் இணையமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் ஐ.தே.கவுக்குப் பெரும் தலையிடி ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் 95 ஆசனங்களை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க. பக்கமுள்ள எம்.பிக்களுக்கு வலைவிரித்துள்ளது. இதனால் அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் ஒவ்வொரு நிமிடமும் கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.