Header Ads



சுதந்திர கட்சியின் அரசாங்கத்தை அமைக்க, ஜனாதிபதிக்கு ஆதரவு - கூட்டு எதிர்கட்சி

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினால் ஜனாதிபதிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கமொன்றை அமைக்க நிபந்தனைகள் இன்றி ஆதரவு வழங்க தயார் என கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் இன்று -15- முற்பகல் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு அறிவித்தனர்.

கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகளுக்கு மத்தியில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமாயின், அதற்கு ஆதரவளிப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலொன்றை உடனடியாக நடத்துவற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது.

அத்துடன், பிற்பகல் மூன்று மணியளவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுடான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புதிய அரசாங்கத்தின் பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களதும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரதும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.