Header Ads



டுபாயை விட்டு வெளியேற, உதயங்கவுக்கு தடை

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், விசாரணைகள் முடியும் வரை, உதயங்க வீரதுங்கவை ஐக்கிய அரசு எமிரேட்சை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துலக காவல்துறைக்கு வெளியிடப்பட்ட நீல அறிவிப்பின் அடிப்படையிலேயே உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார். குற்றவியல் விசாரணைக்காக, உதயங்க வீரதுங்கவின் இருப்பிடத்தை தேடிப் பிடிக்கும் நோக்கிலேயே இந்த நீல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டத்தின்படியும், அனைத்துலக காவல்துறை விதிமுறைகளின்படியும், உதயங்க வீரதுங்கவை தொடர்ந்து தடுத்து வைக்க முடியாது. இந்தச் சூழலில், அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்னமும் ஐக்கிய அரபு எமிரேட்சிலேயே தங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைகள் முடியும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உதயங்க வீரதுங்க தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அபுதாபியில் இந்த விவகாரத்தைக் கையாளும் அனைத்துலக காவல்துறையினருடன், இணைந்து பணியாற்றுகின்றனர்.

சிறிலங்காவில் இருந்து சென்ற வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இந்த விவகாரம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.