Header Ads



'அடுத்த அரசாங்கத்தை, கோடிகாட்டும் தேர்தல்'

இப்போது நடக்கவிருப்பது உள்ளூராட்சி தேர்தலாக இருக்கின்ற போதிலும் தேசிய மட்டத்தில் முக்கிய கட்சிகளின் எதிர்கால பலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் மூத்த செய்தியாளரான வித்தியாதரன், அடுத்த அரசு யார் என்பதை இந்த தேர்தல் கோடிகாட்டும் என்கிறார்.

இதனால், அனைத்துக்கட்சிகளும் இதனை ஒரு தேசிய மட்ட போட்டிக்கான களமாக கருதுவதாகவும், ஆனாலும் சில இடங்களில் மாத்திரம் இங்கு உள்ளூர்மட்ட அபிவிருத்தி குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

இவற்றைவிட இலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தமிழ் தோட்டதொழிலாளர்கள் மத்தியிலும் இரு தரப்பு மோதல்கள் நடக்கின்றன. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை கொண்ட தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி காணப்படுகின்றது.

அங்கு ஐக்கிய தேசியக் கட்சியும் கணிசமான ஆதரவை கொண்டுள்ளது. அங்கு அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விசயங்கள் பிரசாரத்தில் ஓரளவு முன்னிலை பெறுகின்றன என்று கூறலாம். அதேபோல குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் முன்னணி பெறுகின்றன.

இலங்கையில் 1977க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் அல்லாமல் நேரடி தேர்தல் முறையையும் சேர்த்து ஒரு கலப்பு முறையில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. ஆகவே கடந்த காலங்களில் கட்சிகளுக்கு இருக்கும் நேரடி ஆதரவை கணக்கில் கொண்டு அவற்றின் பலத்தை கணித்துக் கூறியது போல இந்த முறை செய்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.

ஒவ்வொரு வட்டாரத்திலும் (வட்டம்) தனிப்பட்ட வேட்பாளரின் செல்வாக்கும் இந்த முறை செல்வாக்கு செலுத்தும் என்பதால், யார் வெற்றி பெறுவார் என்பதை அறுதியிட்டு முன்கூட்டியே கணிப்பதிலும் அரசியல் பார்வையாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் சில புதிய கட்டுப்பாடுகளால் ஆட்கள் அளவுக்கு அதிகமாக பிரசாரத்துக்காக ஊர்வலமாக செல்வது போன்றவை இந்த முறை குறைந்திருக்கிறது. இது தேர்தல் பிரசாரத்தை சுவாரஸ்யமற்றதாக்கிவிட்டதாக கூறுவோரும் உண்டு. ஆனால், இந்த கட்டுப்பாடுகள் ஒப்பீட்டளவில் இதுவரை வன்செயல்களை குறைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கூறுகின்றன.

இதுவரை தேர்தல் பிரசாரங்கள் சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம், இனிவரும் நாட்களில் அவை சூடு பிடிக்கலாம், வன்முறைகள் குறைவாக இருக்கலாம், ஆனால், இதன் முடிவுகள் அரசியல் பார்வையாளர்கள் கூறுவதுபோல மத்திய ஆட்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். bbc

No comments

Powered by Blogger.