Header Ads



இடியப்பம் சாப்பிட்டுவிட்டு, அரசை கவிழ்க்கமாட்டேன் - மஹிந்த

2015 நவம்பர் 21ஆம் திகதிக்குப் பிறகு இலங்கை அரசியல் களத்தில் "முட்டை அப்பம்' என்பது பேசுபொருளாக மாறியது. பிரதான அரசியல் மேடைகளில்கூட, ஏன் சர்வதேச ஊடங்களில்கூட இந்த முட்டை அப்ப விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது. மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன 2014ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி இரவு அலரிமாளிகையில் மஹிந்தவுடன் ஒன்றாக அமர்ந்து "முட்டை அப்பம்' சாப்பிட்டுவிட்டே மறுநாள் காலை பொதுவேட்பாளராக களமிறங்கும் அறிவிப்பை விடுத்தார்.

"அட, நேற்று இரவுதானே ஒன்றாக அப்பம் சாப்பிட்டோம். திடீரென இப்படி செய்துவிட்டாரே'' என்று மஹிந்த ஆதங்கம் வெளியிட்டிருந்தார். அதன்பின்னரே அப்பம் கதை ஹிட்டானது. அமெரிக்காவின் இராஜதந்திரியாக இருந்த நிஷா பிஷ்வால் இலங்கை வந்திருந்தபோது, வெளிவிவகார அமைச்சில் அவருக்கு முட்டை அப்பம் வழங்கப்பட்டது. அது சுவையான உணவு என அவர் டுவிட் பண்ணியிருந்தார். இதையடுத்து இந்த விடயம் சூப்பர் ஹிட்டானது.

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி பெரு வெற்றிபெற்றுள்ளது. இதுபற்றி அறிவிப்பு விடுப்பதற்காக கொழும்பில்  ஊடகவியலாளர் மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிக்கு கிண்டலடிக்கும் வகையில் மஹிந்த கருத்து வெளியிட்டிருந்தார். "அரசை இடியப்பம் சாப்பிட்டுவிட்டோ அல்லது வேறு எதையாவது சாப்பிட்டுவிட்டோ சூழ்ச்சிமூலம் கவிழ்க்க மாட்டேன்'' என்பதே மஹிந்தவின் கருத்தாகும்.

அதாவது, அன்று முட்டை அப்பம் சாப்பிட்டுவிட்டு பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரி தனக்கு துரோகமிழைத்தார் என்பதை மறைமுகமாக குத்திக்காட்டிப் பேசியுள்ளார் மஹிந்த.

மஹிந்த இவ்வாறு கருத்துவெளியிட்டதும் அவருக்கு அருகிலிருந்த தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, கெஹலிய ரம்புக்வெல ஆகிய எம்.பிக்கள் சிரித்துவிட்டனர்.

No comments

Powered by Blogger.