Header Ads



இன்றும் பாராளுமன்றத்தில் வாக்குவாதம்

தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை வெளிபடுத்தக்கூறி இன்றும் பாராளுமன்றத்தில் ஆளும் எதிர் தரப்பினரிடையே வாக்குவாதம் நிலவியது. ஒப்பந்தத்தை பிரசித்திபடுத்த  முடியாவிடின் இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள் என  கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று -22- ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும் போதே கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது பல கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்த முன்னணியாகும். அவ்வாறு இருக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தை  முன்னெடுப்பதில் ஐக்கிய  தேசிய கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது என கூறியுள்ளது. அரசியல் அமைப்பின் 46/4 உறுப்புரிமையின் பிரகாரம் இரண்டு தரப்பினரும் உடன்படிக்கையினை முன்னெடுத்து செல்வதாக இன்றும் சபையில் தெரிவித்தனர். எனினும் இந்த விடயத்தில் மேலும் குழப்பங்கள் உள்ளன. 

இதில் பிரதான கட்சியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து செயற்படுமாயின் பாராளுமன்றத்தில் உடன்படிக்கை குறித்து வெளிப்படுத்த வேண்டும். அதேபோல் சபை அனுமதியினை பெற வேண்டும். எனினும் இவ்வாறு தேசிய அரசாங்கம் ஒன்றினை முன்னெடுப்பது குறித்து எந்தவொரு எழுத்துரு ஆவணமும் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இருக்கும் பட்சத்தில் மட்டுமே தேசிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆகவே அவ்வாறான  ஆவணம் ஒன்று இருக்குமாயின் அதனை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும். சட்ட விரோதமாக அமைச்சரவையை நடத்த முடியாது. இவ்வாறு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இரகசியத்தன்மை இருக்குமாயின் சபாநாயகரிடம்  ஒப்படைத்து ஆவணத்தை பார்க்க கோரிக்கைவிடும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் வெளிபடுத்துவது சபாநாயகரின் கடமையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் இது அரசியல் அமைப்பினை முழுமையாக மீறி செயற்படும் வகையில் அமைச்சரவையினை கொண்டு நடத்தும் அரசியல் அமைப்புக்கு முரண்பட்ட செயற்பாடாக நாம் கருதுகின்றோம். எமது கோரிக்கைக்கு தெளிவான தீர்வு ஒன்றினை சபாநாயகர் பெற்றுத்தர வேண்டும். அரசியல்வாதிகளின் தீர்மானம் அல்ல எமக்கு அவசியமானது சபாநாயகரின் தீர்மானமாகும். அதனையே நாம் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.