February 08, 2018

ஒரு தடவை, எமக்கு வாக்களியுங்கள் - றிசாட் பதியுதீன்


-ஊடகப்பிரிவு- 

ஆயிரம் விளக்குகள் பாடலை வெறுமனே ஒலிக்கவிட்டுக் கொண்டு முழ சமூகத்தையும் இருட்டுக்குள் வைத்திருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றிவைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிக்கவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, பொத்துவில், நற்பிட்டிமுனை, மருதமுனை பிரதேசங்களில் கடந்த 06 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். 

இக் கூட்டங்களில் அமைச்சர் றிசாட் தொடர்ந்து உரையாற்றுகையில், 

மறைந்த தலைவர் அஷ்ரப் ஒரு உயரிய நோக்கத்தோடு முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். அவரது கொள்கைப் பிடிப்பிலும் விடுதலையுணர்விலும் உந்தப்பட்டு நீங்களும் நானும் இந்த தனித்துவ அரசியல் பயணத்தை ஆரம்பித்தோம். ஆனால், அந்தக் கட்;சி அவரது மறைவுக்குப் பின்னர் தனிமனிதர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவும் பெருந்தேசியக் கட்சிகளுடனும் வேறு சக்திகளுடனும் உறவு கொண்டாடுவதற்கான ஒரு கருவியாகவே பாவிக்கப்பட்டு வருகின்றது. 

அதைவிடுத்து முஸ்லிம் சமூகத்திற்கு இந்த 17 வருடங்களில் றவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சிக்காரர்கள் இந்த சமூகத்திற்கு எந்த உரிமையை பெற்றுத் தந்திருக்கின்றார்கள்? எத்தனை அபிவிருத்திகளை செய்து தந்திருக்கின்றார்கள் என்று மக்கள் இன்று கேள்வி கேட்கின்றனர். ஆயிரம் விளக்கு பாடலைப் போட்டு கோஷம் எழுப்பியதும், போலி வாக்குறுதிகளை வழங்கிய மக்களை ஏமாற்றியதையும் அன்றி வேறு எதைச் செய்திருக்கின்றார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதனால் இறைவனின் உதவியால் மாற்றம் உருவாகி வருகின்றது. 

அஷ்ரஃபோடு தோள்நின்று கட்சியை வளர்த்தவர்கள் ஹக்கீமின் அநியாயத்திற்கு எதிராக கட்சிக்குள் குரல் கொடுத்தால், வெளியில் நின்று போராடினால் அவர்கள் எல்லோரையும் துரோகி என்று சொல்கின்றார் ஹக்கீம். நேற்று போராளியாக இருந்தவர் இன்று ஹக்கீமை தட்டிக் கேட்டால் உடனே மறுநாள் துரோகியாக மாறி விடுகின்ற ஒரு கேவலமான அரசியலை வேறு எங்கும் காணமுடியாது. 

எனவே ஹக்கீமோடு பயணிக்க முடியாது என்று தெரிந்த பல மூத்த அரசியல் செயற்பாட்டாளர்கள் இன்று எம்மோடு இணைந்திருக்கின்றார்கள். மக்களும் கூட இன்று எம்மோடு சாரைசாரையாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள். மக்களை தொடர்ச்சியாக ஹக்கீம் மடையர்களாக, அடிமைகளைப் போல நடத்தியதால் அந்த மக்கள் இன்று பொங்கி எழுந்திருக்கின்றார்கள். வாகனங்களை மறித்து ஹக்கீம் இருக்கின்றாரா?என்று தேடுகின்றார்கள். ஆயிரக்கணக்கான தும்புத்தடிகளுடன் மக்கள் ஒரு தலைவரின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் இதுவரை வேறு எங்கும் நடந்ததில்லை. 

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்று சேர வேண்டும் என்று மக்களாகிய நீங்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்தீர்கள். அதற்கு விருப்பம் தெரிவித்த தரப்பினர் இணைந்து இன்று முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றோம். அந்த கூட்டமைப்பின் ஊடாக இந்த தேர்தலில் உங்கள் முன் வந்திருக்கின்றோம். நீங்கள் அவர்களுக்கு வாக்களித்து ஏமாறியிருக்கின்றீர்கள். அந்த ஏமாற்றங்கள் போதும், ஒரு தடவை எமக்கு வாக்களியுங்கள். உள்ளுராட்சி சபை என்றால் என்னவென்று நாங்கள் செயலில் காட்டுவோம். 

இந்த சமூகம் கேட்பார் பார்ப்பார் அற்ற ஒரு அனாதைச் சமூகமாக இன்று மாறியிருக்கின்றது. எனவேதான் அஷ்ரஃபின் சிந்தனையுடனான ஒரு தனித்துவ அரசியல் விடுதலைப் போராட்டத்தை கிழக்கிலிருந்து ஆரம்பித்திருக்கின்றோம். சும்மா ஆயிரம்விளக்கு ஆயிரம் விளக்கு என்று பாட்டுப் போட்டு மேடையில் நடனமாடுவதை விட, இந்த சமூகத்திற்காக, எதிர்கால சந்ததிக்காக ஒரு மெழுகுவர்த்தியையாவது ஏற்றி வைப்பதற்காகவே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம். தேர்தல் வாக்களிப்பின் மூலம் அதற்கான ஆணையை நீங்கள் தரவேண்டும் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment