Header Ads



மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி, கோத்தாவை பிரதமராக்க திட்டம்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை பிரதமராக நியமித்து விட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் பதவியில் நியமிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஜனாதிபதியின் உள்ளக அரசியல் தேவை என்பது அவர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் சமயத்தில் நடந்து கொண்ட விதம் மூலம் தெளிவாக காணமுடிந்தது.

மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மாட்டார். அது மிகவும் தெளிவானது. மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அவருக்கு மகிந்த ராஜபக்சவிடம் இருக்கும் வாக்கு வங்கி அவசியம்.

இதனால், மகிந்த ராஜபக்சவை தவிர ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரது ஆதரவை பெற ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.

கோத்தபாய ராஜபக்சவை இணைத்து கொண்டு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே மைத்திரிபால சிறிசேனவின் திட்டம் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் தான் தோல்வியடைந்திருந்தால், தான், தனது குடும்பத்தினர், தனக்கு உதவியவர்கள் என பலர் நிலத்தில் 6 அடிக்குள் புதைக்கப்படும் ஆபத்து இருந்ததாக கூறியிருந்தார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் உயிர் பாதுகாப்பு கருதி தான் நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

1 comment:

  1. இனம் இனத்தோடுதான்  சேரும்.

    பேரினவாதம் இலங்கையில் இருந்து  ஒழிக்கப்பட வேண்டும்.  பேரினவாதக் கட்சிகளை சிறுபான்மையினர் நிராகரிக்க வேண்டும்.  அப்போதுதான் இலங்கை உருப்படும்.

    இலங்கையின் பேரிரு கட்சிகளுக்கும்  சீரிய ஆட்சிக்கான சந்தர்ப்பம் கொடுத்து பார்த்து விட்டோம், எஞ்சியுள்ள ஓர் கட்சியைத் தவிர:

    அதுதான் ஜேவிபிக்கான சந்தர்ப்பம் இப்போது கணிந்துள்ளது.

    அம்பாறையிலிருந்து ஹரீஸ் எம்.பி. கூறியதற்கமைய முஸ்லிம்  தலைவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

    பின்பு, தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து  தத்தம் பாதுகாப்பு உரிமைகள் விடயத்தில்  ஓர் பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.

    அதன் பின், நிபந்தனை அடிப்படையில்  2020 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி தலைவரை ஆதரித்து வளர்த்தெடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இக்கூட்டுக்குள் பேரினவாதக் கட்சிகள் உள் நுழைய விடாமல் இருப்பது அதி முக்கிய நிபந்தனையாக இருக்க வேண்டும்.

    இலங்கையில் சமுகங்களிடையே  நீதியை நிலைநாட்டுவதற்கான மனித சட்டங்களின் இறுதி வாய்ப்பாக இதனைக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.