Header Ads



அம்பாறையில் பதற்றம், அச்சம் நீடிக்கிறது - கோதுமைமாவின் அவியாத பகுதி, மலட்டு மருந்து என வாதம்


-BBC-

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை நகரில் ஒரு குழுவினரால் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகளும் ஒரு பள்ளிவாசலும் தாக்கபட்டதை அடுத்து அங்கு ஒரு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை நகரில் கடந்த இரவு நடந்த இச் சம்பவம் குறித்து புலன் விசாரணகள் நடப்பதாக இலங்கை போலிஸின் ஊடகப் பிரிவு பிபிசிக்கு தெரிவித்துள்ளது.

அப்பகுதி முஸ்லிம்கள் வழங்கிய தகவலின்படி கடந்த இரவு அங்கிருக்கும் முஸ்லிம்களின் உணவு விடுதி ஒன்றுக்கு வந்த சிங்கள மொழியில் பேசிய சிலர், உணவு அருந்திவிட்டு, உணவில் இருந்த கோதுமை மாவின் அவியாத சில பகுதிகளை காண்பித்து "கடைக்காரர்கள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்திருப்பதாக" கூறி குற்றஞ்சாட்டியுள்னர்.

அதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து அங்கு கூடிய பலர் அந்தக் கடையை மட்டுமல்லாமல் வேறு சில கடைகளையும், அங்கிருந்த பள்ளிவாசல் ஒன்றையும் தாக்கியதாக கூறப்படுகின்றது.

வாக்குவாதம் நடந்து முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு வாகனங்களில் வந்தவர்களே தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.

இதனால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடப்பதாக கூறியுள்ள இலங்கை போலிஸார் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இன்றும் அங்கு ஒருவிதமான பதற்ற நிலைமை காணப்படுவதாகவும் முஸ்லிம்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அங்கு சென்றுவந்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பல பகுதிகளில் கணிசமாக வாழ்ந்தாலும் அம்பாறை நகரைப் பொறுத்தவரையில் அங்கு சிங்கள மக்களே அதிகம் வசிக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.