Header Ads



சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தி, கொலை செய்தவனுக்கு 4 மரண தண்டனை

பாகிஸ்தானில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த இம்ரான் அலி (24) என்பவருக்கு நான்கு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி லாகூரின் தெற்கே உள்ள கசூர் நகரில் ஷைனப் அன்சாரி எனும் சிறுமியின் சடலம் குப்பையிலிருந்து மீட்கப்பட்டது.

அச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த கொலை வழக்கில் ஜனவரி 23 ஆம் திகதி இம்ரான் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த குற்றங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் அவருக்கு நான்கு மரண தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஷைனப் படுகொலை வழக்கில் DNA பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது இம்ரான் அலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஷைனப் கொலை வழக்கில் அவர் கடத்தப்பட்டபோது பதிவான கண்காணிப்பு கெமரா காட்சி முக்கிய சாட்சியமாக அமைந்துள்ளது.

ஷைனப்பின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குற்றவாளியைக் கைது செய்யுமாறு கோரியும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் இருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.