February 01, 2018

அரசியலில் 3 ஆம் சக்தியாக முயன்று, தோற்றுப்போன ராஜித - அவரே ஒப்புக்கொண்டார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு யாரை தோற்கடிக்க வேண்டியுள்ளது? ரணிலையா அல்லது மைத்திரியையா? குட்டையை குழப்பி வெற்றி காண முயல்கிறார் மகிந்த. இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன விசேட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்

அவர் வழங்கிய கேள்வி பதில் வடிவிலான நேர்காணல் வருமாறு,

கேள்வி: இரண்டு முக்கிய கட்சிகளும் தேர்தல் களத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கூட்டு அரசு தொடர்ந்து செயற்படுவது சாத்தியமா?

பதில்: அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை. நான் தன்னைக் கைவிடுவேன் என்றோ, சுதந்திரக் கட்சியை விட்டுத் தாம் வெளியேற வேண்டியிருக்கும் என்றோ மகிந்த ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அரசியல் மாற்றங்களினால் நாங்கள் மீண்டும் இணைவதும் கூட சாத்தியம் என்ற நிலையில் எந்த வேளையிலும் எதுவும் இடம்பெறுவது சாத்தியம் தான்.

கேள்வி: பிணைமுறி ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

பதில்: நாங்கள் உண்மையில் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, இந்தப் பிணைமுறி மோசடி காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் என்ன என்பது பற்றித்தான்.

கேள்வி: வீடுகள் கொள்வனவு செய்யப்பட்டமையும், அந்த தொலைபேசி அழைப்புகளும் சரியானவை என நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்: அவை யாவும் இரண்டாம் பட்சமே. எங்கள் எதிர்பார்ப்பு, ஆணைக்குழு விசாரணை மூலம் இந்த மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்ட மொத்த நட்டம் எவ்வளவு என்பதனை அறிந்து கொள்வது தான். அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி 11 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஆனால் அலோசியஸ் மகேந்திரன் குடும்பத்தின் 12 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம் மோசடி செய்யப்பட்ட தொகை முழுவதையும் அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இதனால் நாட்டுக்கு இழப்பேதும் ஏற்படப் போவதில்லை.

கேள்வி: அப்படியானால் அரசுக்கு இது ஒரு சாதாரண பிரச்சினை எனக் காட்ட நீங்கள் முயல்கிறீர்களா?

பதில்: இல்லை. ஒரு நீதியான, நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமென்பதற்காகவே பிரதமர் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெட்டியை கோப் குழுவில் தலைவராக நியமித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் அல்லது சுதந்திரக் கட்சியில் இந்தத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என்பதால் அவ்விதம் செய்யவில்லை. தன்னுடைய நேர்மை நிரூபிக்கப்பட வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம். அதைத் தவிர ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளிவந்து விட்ட நிலையில் ஏன் சிலர் குழப்பமடைகிறார்கள்?

கேள்வி: நாடாளுமன்றத்தைக் கூட்டிய பிரதமர், குறித்த அறிக்கையை முன்வைக்காமை சரியென்று கூறுகிறீர்களா?


பதில்: அந்த அறிக்கை 1257 பக்கங்களை கொண்டு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே வெளியிட முடியாது. சிங்களத்திலும் தமிழிலும் தான் வெளியிட முடியும். இவையிரண்டும் தான் தேசிய மொழிகள். ஆகவே சட்டவல்லுநர்களின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி அந்த அறி்ககையின்சாராம்சத்தைத்தான் சபையில் சமர்ப்பித்தார். கடந்த அரசின் 2008–2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 4 ஆயிரம் பில்லியன் பெறுமதியான பிணைமுறி மோசடி இடம்பெற்றிருந்தது. இந்தத் தொகையை மீளப்பெற மற்றொரு விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.

கேள்வி: தூய்மையான, ஊழல்அற்ற நல்லாட்சிக்காக உருவாக்கப்பட்ட தற்போதைய அரசும் ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளதே?

பதில்: ஊழல், மோசடிகள் இல்லாத அரசு என்று இந்த உலகத்தில் எங்குமே கிடையாது. 2002ஆம் ஆண்டிலேயே நிதி மோசடியில் ஈடுபட்டவர் அர்ஜூன மகேந்திரன், அவரை இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டாமென நான் பிரதமரிடம் கூறினேன். அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மகேந்திரனை பதவி நீக்கம் செய்த வேளை, அவர் ஏற்கனவே அரசின் முகத்தில் கரிபூசி விட்டிருந்தார்.

கேள்வி: ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: ஜனாதிபதிக்கும் பிரதருக்குமிடையில் சுமுகமான உறவு தான் நீடிக்கிறது. இருவரும் கலந்து ஆலோசித்த பின்னர்தான் அநேகமான தீர்மானங்கள் எட்டப்படுகின்றன. ஜனாதிபதியினது முக்கிய எதிரிகள் ராஜபக்சமார்தானே தவிர ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதற்கு எதுவித காரணமும் இல்லை.

கேள்வி: இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர், புதிய அரசு ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறதே. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: ஆரம்பத்திலேயே இதனை அவர்கள் செய்திருக்கலாமே? ஏன் அப்படிச் செய்ய அவர்களால் முடியவில்லை. இது அரசியல் அனுபவமில்லாத சிலரின் கருத்தாகத்தான் இருக்க முடியும்.

கேள்வி: இது சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான கூட்டு எதிரணியினரது முயற்சியாக இருக்கக் கூடுமா?

பதில்: சில இடங்களில் மகிந்தவின் கூட்டு எதிரணியின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட போது நீங்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவீர்களா எனக் கேட்கப்பட்ட போது அது சாத்தியமில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவருக்கு யாரை தோற்கடிக்க வேண்டியுள்ளது? ரணிலையா அல்லது மைத்திரியையா? குட்டையை குழப்பி வெற்றி காண முயல்கிறார் மகிந்த.

கேள்வி: இந்தத் தேர்தலில் எந்தத் தரப்பினர் வெற்றி பெறுவார்கள் எனக் கருதுகிறீர்கள்?

பதில்: இப்பொழுது அதுபற்றி எதுவுமே உறுதியாகக் கூற இயலாது. ஊடங்களின் பரப்புரை நடவடிக்கைகளால் நாங்கள் பெரிதும் நசுக்கப்படுகிறோம். ஆனாலும் எங்களுக்குள்ள ஆதரவு குறையவில்லை.

கேள்வி: இதுவரையில் ஒரு மூன்றாம் தரப்பு சக்தி யொன்றுக்கு இலங்கை அரசியலில் இடம்கிட்டவில்லை. ஆனால் தாமரை மொட்டு அந்த இடத்தைக் கைப்பற்றக்கூடுமா?

பதில்: அது சாத்தியமில்லை. ஏன் நான் கூட அத்தகையதொரு முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் அது கைகூடவில்லை. லலித், காமினி திசநாயக்க என்று பலர் அத்தகைய முயற்சியில் தோல்வி கண்டவர்கள் தானே?

கேள்வி: தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் கீழ் மட்டத்திலும் இதே கூட்டணி தொடரும் தானே?

பதில்: ஆம்! மீண்டும் அதே கூட்டணி தொடரும்.

கேள்வி: நல்லாட்சி அரசின் மூன்று வருட ஆட்சி உங்களுக்கு திருப்திகரமாக அமைந்துள்ளதா?

பதில்: ஆம்! பிரதமரை கூட பிணைமுறி ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அழைக்கும் விதத்திலான செயற்பாடு இந்த நல்லாட்சியின் நேர்மைக்குப் பொருத்தமானதோர் உதாரணம் என அமைச்சர் தெரிவித்தார்.

- Uthayan

0 கருத்துரைகள்:

Post a Comment