Header Ads



மார்ச் 2 இல், உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு மார்ச் 2 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

“முன்னதாக, புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் முதலாவது அமர்வு, பெப்ரவரி 15ஆம் நாள் நடைபெறும் என்று அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், முதல் அமர்வு மார்ச் 2ஆம் நாளே நடைபெறும். இதுதொடர்பான புதிய அரசிதழ் அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும்.

கடந்தவாரம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பெப்ரவரி 15ஆம் நாள் முதல் அமர்வை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளினதும் உறுப்பினர்களின் பட்டியலைத் தயார் செய்வதற்கு நீண்ட காலஅவகாசம் தேவை.

நேரடியாக வட்டார ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் ஏற்கனவே தெரியவந்துள்ளது. ஆனால், விகிதாசார முறையில் கிடைத்துள்ள ஆசனங்களுக்கான தமது பிரதிநிதிகளின் பட்டியலை அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும்.

இதனை கட்சிகளின் பொதுச்செயலர்கள் தான் செய்ய வேண்டும். அதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் தேவை.

இதனால், முதல் அமர்வை பெப்ரவரி 15ஆம் நாளில் நடத்துவதற்குப் பதிலாக மார்ச் 2ஆம் நாளுக்கு பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை உள்ளூராட்சி சபைகளின் அமர்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.