Header Ads



இந்த பித்த வெடிப்புக் காலுக்குக் கீழேயா, சுவர்க்கம் இருக்கிறது..?


புதிதாகத் திருமணம் முடித்த ஒரு இளைஞனிடம், "தாயின் காலடியில்தான் சுவர்க்கம் இருக்கிறது என்பது நபிமொழி, தாயை நன்கு கவனித்துக் கொள், நோகடித்து விடாதே!" என்று கூறியபோது "இந்த பித்த வெடிப்புக் காலுக்குக் கீழேயா சுவர்க்கம் இருக்கிறது?" என்று நக்கலாகக் கேட்டுவிட்டு, அவன் தன் மனைவியின் கால்களை நோக்கினான். அவன் கண்களுக்கு இப்போது சுவர்க்கம் அவனது இளம் மனைவியின் காலுக்குக் கீழேதான் தெரிந்தது.

நாட்கள் நகர்ந்தன. ஒரு குழந்தைக்குத் தந்தையானான். அப்போது அவனது சுவர்க்கம் குழந்தையாகவே தெரிந்தது. தாயோ எட்டிக்காயாகத் தெரிந்தாள்.

காலங்கள் கடந்தன. நடுத்தர வயதை எட்டினான். மனைவியின் எடுத்தெறிந்த பேச்சும், பெற்ற பிள்ளையின் அலட்சியப் போக்கும் அவன் மனதை வாட்டியது.

வாடிய முகத்துடன் தூங்கச் சென்று, தூக்கம் வராமல் புரண்டபொழுது, சொர சொரப்பான கைகள் அவனது தலையை வருடிக்கொடுத்ததைக் கண்டு, கண்களைத் திறந்து பார்த்தான்.

அருகே அவனது தாய். கண்களில் கனிவு. "ஏம்ப்பா முகம் வாடியிருக்க...? சாப்பிட்டியா? உன்னைக் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டுதான் இருக்கேன், முகமே சரியில்ல....! உடம்பும் மெலிஞ்சிட்டு இருக்கு.. ஏம்ப்பா?"

தாயை ஏறெடுத்துப் பார்த்தான். கண்களில் கண்ணீர். அவனை அறியாமலேயே தாயின் மடியில் தலை வைத்துப் படுத்து அழுது, இருந்த துக்கத்தை எல்லாம் கொட்டினான்.

தான் அவமதித்த தாய், தன்னை இன்னும் தன்னை குழந்தையாகவே மதித்து அரவணைக்கிறாள். நான் பேச மாட்டேனா என்று என் முகத்தைப் பலமுறை ஏக்கத்துடன் பார்த்த அந்த தாயின் கண்களில் குழி விழுந்து விட்டதை அன்றுதான் பார்க்கிறான்.

தனது கைகளால் சோறு ஊட்டினால் அதிகமாக சாப்பிடுவானே என்று, தனது திருமணம் வரையிலும் கூட சிரத்தையோடு தனக்கு சோறு ஊட்டிய அந்தப் பாசக் கரங்களை அன்றுதான் மீண்டும் பார்க்கிறான். கைகளில் சுருக்கு விழுந்து மெலிந்திருந்தது.

அம்மா...! அம்மா...! அம்மா...!!! அன்று தான் புதிதாகப் பிறந்ததுபோல் தாயை நோக்குகிறான். நிச்சயமாக உன் காலடியில் தான் சொர்க்கம் அம்மா...! மனைவிதான் சுவர்க்கம் என்று நினைத்தேன்! அன்று அறிவில்லையம்மா... அது தற்காலிகமானது என்பதை! குழந்தைதான் சுவர்க்கம் என்று நினைத்தேன்! தவறம்மா!

நான்தான் அவர்களின் கண்களிலிருந்து நரகத்தை (உலக துன்பங்களை) மறைத்தேன். நரக வேதனையை நீங்கள் அனுபவிக்கச் செய்தேன். எத்தனை முறை என்னிடம், ''உடம்புக்கு முடியலப்பா... மாத்திரை வாங்கித் தாப்பா" என்று கேட்டிருப்பாய். நானும், காதில் விழாதது மாதிரி அந்த இடத்தை விட்டு நகர்ந்திருப்பேன். ஆனால் அன்றே, மனைவி, எனக்கு லேசாக தலை வலிக்கிறது என்று கூறியவுடன், துடித்துப்போய் டாக்டரிடம் அழைத்துச் சென்று, ஆயிரம் கணக்கில் செலவழித்திருப்பேன்!

''எனது சட்டை கிழிந்துவிட்டதப்பா.., கொறைஞ்ச வெலயில ஒரு சட்டைத்துணி எடுத்துத் தாரியாப்பா...?'' என்று தயங்கித் தயங்கி நீ பரிதாபமாகக் கேட்டபோது, இப்போ செலவுக்கே திண்டாடுறேன்... சட்டைத்துணிக்கு ரூபாய் ஏது? என்று கடுமையாய்ப் பேசியிருப்பேன்! அடுத்த நாளே மனைவி தன் சொந்தக்கார வீட்டுத் திருமணத்துக்குப் போக பட்டுச்சேலை கேட்டபோது, தயங்காமல் பல ஆயிரங்களைத் தூக்கிக் கொடுத்துவிட்டு, அவள் சந்தோஷப்படுக்கிறாளா? என்று மனைவி முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்ததும், ஆனால் அவளோ சிறிதுகூட முகத்தில் சந்தோஷத்தைக் காட்டாமல், அலட்சியமாகப் போனதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன் அம்மா...!

ஒரு நாளாவது உன் முகம் பார்த்து சாப்பிட்டியாமா...? என்று கேட்டிருப்பேனா?ஆனால், வீட்டிற்கு விருந்தினர் முன்பாக, உன்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்வது போல் நடிப்பேனே...! அப்போதும் கூட நீயும் என்னோடு சேர்ந்து நடிப்பாயே! எப்படியம்மா...?

நீண்ட நாள் இடைவெளிக்குப்பின் அம்மாவின் கைகளை எடுத்து தடவிப் பார்க்கிறேன். "ஏனம்மா.. உன் கைகள் இப்படி இருக்கு?" என்னுள் பதுங்கியிருந்த பாசம் பேச ஆரம்பித்தது.

சம்பளம் இல்லாத வேலைக்காரியாக இருந்த அம்மா, அப்போதும் விட்டுக் கொடுக்காமல் கூறுகிறாள்: ''வயதாகிவிட்டதப்பா.. அப்படித்தான் இருக்கும்''.

முதம் முதலாக, அம்மாவிற்கு நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்து, நல்ல மருத்துவரிடம் அழைத்துச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. மனைவி முறைத்தாள். முதன் முதலாக அவளை அலட்சியப்படுத்தினேன்.

என் தாய்...! இவ்வளவு நாட்கள் மனைவி-மக்களுக்காக எவ்வளவு பெரிய பாவ காரியத்தைச் செய்து கொண்டிருந்தேன்! இனி என் மகனும் என்னைப் பார்த்துப் பழக வேண்டும். நான் செய்த தவறை என் பிள்ளை செய்யக்க்கூடாது. (அங்கும் சுயநலம் எட்டிப் பார்த்தது).

என் பிள்ளைகளுக்கு சிறிதளவு சுகவீனம் ஏற்பட்டால் கூட துடித்துப் போவேனே! அப்படித்தானே என் பெற்றோரும் துடித்திருப்பார்கள்! அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்தேன்? எனக்காகத் துடித்த அவர்களை நான் எனது சொல்லாலும், செயலாலும் எவ்வளவு வேதனைப் படுத்தித் துடிக்க வைத்து இருப்பேன்!

ஆனால், பிள்ளைகள் எவ்வளவு தவறு செய்தாலும், வேதனைகளைக் கொடுத்தாலும், அவைகளைப் பிரதியுபகாரம் பாராது மன்னிக்கும் ஒரே நீதிமன்றம், தாயின் இதயம் மட்டுமே!

நான் சிறு வயதில் மலஜலம் கழிக்கும்போது, அதை முகம் சுளிக்காது, அருவருப்படையாது சுத்தப்படுத்துவதும், பிள்ளைகளின் மகிழ்ச்சியே அவர்களின் சந்தோஷமும், வாழ்க்கையுமாக வாழ்ந்த அந்தப் பெற்றோருக்கு, வயதான காலத்தில், உடல்நலம் சரியில்லை என்றால் நாம் அவர்களை முகம் சுளிக்காது, மற்றவர்களை எதிர்பார்க்காது நாமே கவனித்துக் கொள்வது கடமை என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக்கூறி அவர்களது மனதைக் குளிர வைத்துப் பாருங்கள், அதில் கிடைக்கும் மகிழ்ழ்ச்சிக்கு அளவே இருக்காது. மேலும் அல்லாஹ்விடம் இதற்குக்கிடைக்கும் கூலியோ அளப்பரியது. இம்மை-மறுமை வாழ்வு சிறப்பாக அமைய, பெற்றோரைப் பேணுவது ஒரு அற்புதமான சந்தர்ப்பம்.

விலைகொடுத்து வாங்க முடியாத பொக்கிஷம்தான் பெற்றோர்கள் என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர வேண்டும்.

"தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது" "தந்தையின் பொருத்தமே இறைவனின் பொருத்தம்" என்ற நபிமொழிகளை ஒவ்வொரு பிள்ளைகளும் நினைவில் கொள்ள வேண்டும்.

- ஆயிஷா சித்தீக்கா

''ஜமா அத்துல் உலமா'' மாத இதழ், நவம்பர் 2017

No comments

Powered by Blogger.