Header Ads



சாய்ந்தமரு பள்ளிவாசல், நிர்வாகம் கலைப்பின் பின்னணி


(ஆதில் அலி சப்ரி)

நான் சாய்ந்தமருதைச் சேர்ந்தவன் என்பதால் மாத்திரம் தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளை நிராகரித்துவிட முடியாது. இது ஒரு சபையின் தீர்மானம்.  நான் ஒரு தனிநபர் என்றவகையில் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவரும், வக்பு சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்தார். சாய்ந்தமருது பள்ளிவாசல் விடயம் தொடர்பாக அவர் நவமணிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்தார். அவரது முழுமையான நேர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தையும் சாய்ந்தமருது  பள்ளிவாயிலுக்கும் உங்களுக்குமான உறவையும் கூறமுடியுமா?

பதில்: நான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்உப தலைவராகவும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராகவும் கடந்த 20 வருடங்களாக கடமையாற்றி வருகின்றேன். சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் உப தலைவராக நான் நீண்ட காலம் செயற்பட்டேன். அந்தக் காலத்தில் நாம் அதிகமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். பள்ளிவாசல் சபை அதிகமான வழக்குகளை சந்திக்க நேரிட்டது. அத்தனை பிரச்சினைகளையும் நாம் வெற்றிகரமாக முகங்கொடுத்தோம். பள்ளிவாசலின் தலைவராக வை.எம்.ஹனீபா இருக்கும்போது 6 மாதங்களுக்கு வெளிநாடு சென்றார். அவ்வேளை நான் பதில் தலைவராக கடமை புரிந்தேன். அப்போது நான் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தமையால் விரிவுரைக்கான பாடங்களை தயார் செய்வதோடு பள்ளிவாசலுக்கான தலைமையை வழங்குவது நெருக்கடி மிக்கதாக அமைந்தது. பின்னர் நான் வக்பு சபை அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்டேன். நான் நிர்வாகத்தில் இருந்தபோது இந்த ஊர் மக்களும் பள்ளிவாசலும் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டேன். முதலாவது நிர்வாக தெரிவு, நிதி, யாப்பு போன்றவற்றை அங்கீகரித்தல் காணிகளை விற்பதற்கான அனுமதி போன்றவற்றில் உதவினேன். எனது காலத்தில் எமது ஊர்ப்பள்ளி நிர்வாகம் வக்பு நீதிமன்றப்படி ஏறக்கூடாது என்ற வகையில் செயற்பட்டேன். கடந்த வருடம் நிர்வாகத்தின் பதவி காலாவதியானபோது புதிய தெரிவைச் செய்துதந்தால் உடன் நியமனம் வழங்குவேன் எனக் கூறியும் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பின் இப்பிரச்சினை வந்திராது.  
கேள்வி: தேர்தல் விடயத்தில் வக்பு சபையில் நடந்தது என்ன?


பதில்: பள்ளிவாசல் விடயத்தில் வக்பு சபைக்கு தேர்தல் ஆணையகத்திலிருந்து கடிதமொன்று வந்தது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அது விடயமாக கூட்டமொன்றுக்கு அழைத்திருந்தார். அங்கு தேர்தல் ஆணையாளரின் கண்டிப்பான கடிதம் எங்களுக்கு வாசித்துகாட்டப்பட்டது. அதில் உடனடியாக செயற்படும் வகையில் சபை கலைக்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்திருந்தார். எமக்கு முன் சகல பத்திரிகைகளிலும் இச்செய்தி பிரசுரமாகியிருந்தது. இந்த அறிவிப்பு எமக்கு மிகவும் சங்கடமாக அமைந்தது. ஆனால் தேர்தல் காலம் பள்ளிவாசல் சார்பில் போட்டியிடுவோருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்டாது என்பதற்காக இடைக்கால் நிர்வாகமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்காகவே இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். எனினும் இவ்விடயத்தில் 45 நாட்களுக்கு மட்டும் இடைக்கால நிர்வாகம் நியமிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களிலே புதிய சபையைத் தேர்வதற்கான வகையிலே ஏற்பாட்டை மேற்கொண்டோம்.

இடைக்கால நிர்வாகத்துக்கு யார் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தேர்தல் ஆணையாளர் கேட்பார். எனவே மிகப் பொருத்தமானவர்களை நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டது. எங்கள் ஊரில் உள்ள உயர் பதவி வகிக்கின்றவர்களை தெரிவுசெய்தோம். இந்த பள்ளிவாசல் சங்கடமடையக் கூடாது என்பதோடு தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளை நிராகரிக்கவும் முடியாது என்ற நிலை இருந்தது. நான் சாய்ந்தமருதைச் சேர்ந்தவன் என்பதால் மாத்திரம் தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளை நிராகரித்துவிட முடியாது. இது ஓர் சபையின் தீர்மானம். சபையின் முடிவுகளுக்கு நான் ஒரு தனிநபர் என்றவகையில் கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

கேள்வி: வக்பு சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஊர்மக்கள்  எவ்வாறு பார்க்கின்றனர்?

பதில்: தேர்தல் ஆணையாளருக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தை களைக்கும் அதிகாரம் இல்லாதபோது வக்பு சபை வேண்டுமென்றே தான் நிர்வாகத்தை களைத்துள்ளது என்றும் நானே இதற்கு காரணமென்றும் போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையாளருக்கு நேரடியாக களைக்கின்ற அதிகாரம் இல்லை. ஆனால் வக்பு சபைக்கு கட்டளையிடும் அதிகாரமுள்ளது. வக்பு சபையினுடாக விடயத்தை செயற்படுத்தும் அதிகாரமுள்ளது. இதனைசரியாக புரிந்துகொள்ளாத சாதாரண மக்கள் என்னை கோபிக்கின்றனர்.

கேள்வி: பள்ளிவாசல் நிர்வாகத்தை கலைத்த விடயத்தில்  ஏதாவது அரசியல் பின்னணி காணப்படுகின்றதா?

பதில்: அண்மையில் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஒரு கூட்டத்தில் நாங்கள் இவ்வாறு செய்யப்போகின்றோம் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த உரையையும் இந்த செயற்பாட்டையும் இணைத்துப் பார்த்தவர்களுக்கு இது ஒரு திட்டமிட்ட செயலாக தெரிகின்றது. வக்பு சபை அரசியல்வாதிகளின் பின்னால் செல்பவர்கள் அல்ல. தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு செயற்பட வேண்டிய கடமை எங்களுக்குள்ளது. கடந்த தேர்தலின்போது முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் செயலாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரால் பதவி நீக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. நான் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அரசியல் விவகாரங்களுக்கான சபையிலும் அங்கம் வகிக்கின்றேன். முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிநடத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம். அனைத்து அரசியல்வாதிகளுடனும் நாம் நெருக்கமான உறவை பேணவேண்டிய தேவையுள்ளது. எனினும் ஒரு கட்சியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அமைப்பல்ல வகுப் சபை.

கேள்வி: நீங்கள் சாய்ந்தமருது பள்ளி வாசலின் முன்னாள் உபதலைவராகவும் இப்போது ஜம்இய்யதுல் உலமாவின்  உப தலைவராகவும் வக்பு சபை உறுப்பினராகவும்  செயற்பட்டு வருகின்றீர்கள். சாய்ந்தமருது மக்களிடம்  வேண்டிக்கொள்வதென்ன?

பதில்: சாய்ந்தமருதென்பது எனது ஊர். சாய்ந்தமருதின் பல விடயங்களிலும் நான் முன்னின்று உழைத்தவன். ஆரம்பத்தில் இப்பள்ளிவாசல் அமைக்கப்படுகின்றபோது நிதியுதவிகள் திரட்டுவதிலும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் நிலவியபோது ஊரைக் காப்பாற்றும் வேலைகளிலும் உழைத்தவன். இந்த ஊருக்கோர் பிரதேச சபை வேண்டுமென்ற விடயத்தில் நான் எடுத்த முயற்சிகள் போன்று எந்தவொரு தனிநபரும் முயற்சித்திருக்க முடியாது. பிரதேச சபையைத் தாண்டி நகர சபையை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நான் தொடர்ந்தும் உழைப்பேன். போலி முகப்புத்தக பிரசாரங்களை நம்பவேண்டாம். பொய்களை பரப்புவோர் விடயத்திற்கு அல்லாஹ் போதுமானவன்.

No comments

Powered by Blogger.