Header Ads



பண்டாரநாயக்க இருந்திருந்தால், இதயம் வெடித்து இறந்திருப்பார் - நாமல்

"விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பான இயக்கப்பாடல்களை கட்சி அலுவலகத்தில் ஒலிபரப்புவதுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையா'' என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பியான நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான பண்டாரநாயக்க இருந்திருந்தால், இதைப் பார்த்து கேட்டு இதயம் வெடித்து இறந்திருப்பார் என்றும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

வத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கில்லை. அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு கூட்டரசில் இருப்பவர்களே கட்சியைக் காட்டிக்கொடுக்கின்றனர்.

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்வதுதான் பண்டாரநாயக்கவின் கொள்கையா? இன்று சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் பிரபாகரனின் பாடல் ஒலிபரப்பப்படுகின்றது. இதுவா பண்டாரநாயக்கவின் கொள்கை? வெட்கமில்லாமல் கூட்டரசில் இருப்பவர்கள் இதற்குப் பதிலளிக்கவேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவை பிக்பொக்கட் ஜனாதிபதியென ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், ரணில் விக்கிரமசிங்கவைப் புண்ணியத்தால் பிரதமரானவர் என்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் விமர்சித்துவருகின்றனர். இருதரப்பும் இவ்வாறு மோதிக்கொண்டால் ஆட்சியை எப்படி முன்னெடுப்பது?

எனவே, கூட்டரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். தேர்தலில் 99 சதவீதமான சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகள் எமது அணிக்கே கிடைக்கும். இது உறுதி'' என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பட்டுள்ளன என தமது அமைப்புக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என கபே அமைப்பு அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.