January 23, 2018

அஷ்ரப் பெற்றுத்தந்த பேரம்பேசும் சக்தியை, மீண்டும் பெற்றுக்கொள்ள ஆதரவு தாருங்கள்

-சுஐப் எம்.காசிம்-

மர்ஹூம் அஷ்ரப் பெற்றுத் தந்த பேரம் பேசும் சக்தியை இழந்து தவிக்கும் நமது சமூகத்துக்கு மீண்டும், வாக்குப்பலத்தின் மூலம் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இடம்பெற்றபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியாதாவது,

பெருந்தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டவர்களின் பணிகளை, பெருந்தலைவரின் பணிகளுடன் ஒப்பிட்டு சீர்தூக்கி பார்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். அவர் குறுகிய காலத்தில் மேற்கொண்ட சேவையுடன் ஒப்பிடும்போது, பதினேழு வருடங்களாக இருந்தவர்கள் எதையுமே செய்யவில்லை. எனவேதான், மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து சமூக சிந்தனையுடன் செயல்பட்டவர்கள், இப்போது இன்னுமொரு மையப்புள்ளியில் இணைந்து மக்கள் பணிக்காகவும் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் புறப்பட்டுள்ளனர். 

முஸ்லிம் சமூகத்தை அந்தத் தலைமையிடம் இருந்து காப்பாற்றி அதற்கு விமோசனம் பெற்றுக்கொடுப்பதற்காகவே, நேர்மையான முறையில் இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். முஸ்லிம் காங்கிரஸிடமிருந்து நமது சமுகத்தை மீட்டெடுக்கவில்லை என்றால் “சாரதியும் நானே நடத்துனரும் நானே” எனக் கூறிக்கொண்டு இருப்பவர்கள், சமுதாயம் என்ற இந்த வாகனத்தை நடுக்கடலில் கொண்டுசென்று தள்ளிவிடும் ஆபத்து நமக்குத் தெரிகின்றது. சுததிந்திரம் கிடைத்து 70 வருட காலத்துக்கு பின்னர் நமது சமூகத்துக்கு இப்போது ஏதோ கிடைத்துக்கொண்டிருக்கும் கொஞ்சநஞ்ச சலுகைகளையும், உரிமைகளையும் நாம் இழந்து விடுவோமோ! என்ற அச்சம் இருக்கின்றது.


வாக்குரிமை என்ற அரிய பொக்கிஷத்தை கொள்ளையடிப்பதற்காக, எலும்புத் துண்டுகளுடன் வருபவர்களுக்கு நீங்கள் சரியான பாடத்தை புகட்டுங்கள். இந்த அமானிதத்தை விலை பேசுவோரை விரட்டியடியுங்கள்.

மர்ஹூம் அஷ்ரப் நமது சமூகத்தின் வாக்குப்பலத்தை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கின்றார். பேரம் பேசும் சக்தியை இந்தச் சமூகத்துக்குப் பெற்றுத் தந்து ஒரு “கிங் மேக்கராக” இருந்துகொண்டு, நமது அரசியல் உரிமைகளை வென்று தந்த பல சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்க்கின்றோம்.

நமது மக்களின் வாக்குகளை மர்ஹூம் அஷ்ரப் மிகவும் நூதனமாகப் பயன்படுத்தி  முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸா, சந்திரிக்கா ஆகியோரை ஜனாதிபதியாக உருவாக்கியதில் மர்ஹூம் அஷ்ரப் பெரும்பங்கு வகித்தார். அதன்மூலம் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்காக உழைத்தார். 

ஆனால், தற்போது சிறுபான்மை மக்களின் வாக்குகளை பேரினவாதிகள் மலினப்படுத்த தொடங்கியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவதிலும், இந்நாள் ஜானதிபதி மைத்திரியை நாட்டுத் தலைவராக்கியதிலும், சிறுபான்மை சமூகம் வகித்த பெரும்பங்கை இல்லாமலாக்க அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நிறுத்த திராணியில்லாத நமது சமூகத்தில் உள்ள கட்சிகளை உங்கள் வாக்குப் பலத்தினால் தூக்கி எறியுங்கள்.  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரையில், எவருக்கும் பயந்து அரசியல் நடத்தாது, எவர் பிழை விட்டாலும் தட்டிக் கேட்போம். சமூகத்துக்கு நடக்கும் அநியாயங்களைக் கண்டு பெட்டிப்பாம்பாக இருக்கமாட்டோம். நாங்கள் எவருக்கும் சோரம் போகும் கட்சியல்ல. தலைமைத்துவத்தை பாதுகாக்க வேண்டிய எந்தவொரு அவசியம் எமக்கு கிடையாது.  கதிரையையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. முஸ்லிம்களின் எதிர்காலம், பாதுகாப்பு ஆகியவற்றை நோக்காகக் கொண்டே நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். 

தலைமைத்துவ மோகம் எமக்கு இல்லாததனாலேயே ஹஸன் அலியை கூட்டமைப்பின்  தலைவராக்கினோம். சகோதரர் அதாவுல்லா உட்பட இன்னும் பலரை இந்தக் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்காக பல பேச்சுவார்த்தைகளை ஹசன் அலி மேற்கொண்டார். ஆனால், அவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு இறைவன் நாடவில்லை. பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் இந்தக் கூட்டமைப்பு ஓர் இலக்கை நோக்கி பயணிக்கின்றது. தலைமைத்துவ வெறி எங்களிடம் இல்லாததனால் உரிய இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது. 

யாப்புத் திட்டம், தீர்வு முயற்சிகளில் இந்தச் சமுதாயம் மொத்தமாக பலிக்கடாவாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதனால்தான் உங்களிடம் இந்தத் தேர்தலில் மக்கள் ஆணையைக் கோருகின்றோம். இந்த மக்கள் ஆணையின் மூலம் பாதிக்கப்படப் போகும் ஏனைய சமூகங்களும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குண்டு. 

கடந்த காலங்களில் உங்களைப் பயன்படுத்தி வாக்குகளைக் கொள்ளையடித்துவிட்டு, சமூகத்தின் மீது அக்கறைகொள்ளாது வாளாவிருந்தவர்களுக்கு நல்ல பாடத்தை நாங்கள் சொல்லிக் கொடுப்போம்.

நீங்கள் எங்களுக்கு வழங்கும் வாக்குகளை அமானிதமாகவே நாம் பார்க்கின்றோம். எமது கட்சியின் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் உங்கள் பிரச்சினைகளை, அவர்களின் பிரச்சினைகளகாகவே சுமக்கச் செய்வோம். உங்கள் தேவைகளை அவர்கள் நிறைவேற்றுகின்றார்களா? என்பதையும் கண்காணிப்போம் என அமைச்சர் கூறினார். 

1 கருத்துரைகள்:

1994 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மர்ஹூம் அஸ்ரப்
அவர்களின் தலைமையில் முஸ்லீம்
காங்கிரஸ் இலங்கை முழுவதும் மரச்
சின்னத்திலே போட்டியிட்டு 12 ஆசனங்களை பெற்றது மட்டுமல்லாமல்
சந்திரிகா அம்மையாரின் ஆட்சியை
அமைப்பதற்கு இந்த பனிரெண்டுண்டு
ஆசனங்களே தேவையாகவும் இருந்தது
அன்றய காலகட்டத்தில் ஒரு மகத்தான சந்தர்ப்பம் .இதைவிட பேரம் பேசும் சக்தி மு.கா. க்கு
இனி ஒரு போதும் கிடைத்துமில்லை. கிடைக்கப்போவதுமில்லை என்பது அன்றே உணரப்பட்டது.
அன்றய போராளிகளின் அர்பணிப்பு
தலைமைத்துவத்தின் மீது கொண்ட நம்பிக்கை சமூகம் சார்ந் விடயங்களுக்கு கொடுத்த முன்னுருமை பிரதேச வாதங்கள் ,
தகர்த்தெறியப்பட்டு ஒரே தலைமைத்துவத்தின்கீழ் சமூகம் ஒற்றுமைப்பட்டு எங்களுக்கு சலுகைகள் தேவையில்லை உரிமைகள்தான் வேண்டும், அபிவருத்திகள் தேவையில்லை,அதிகாரமிழந்து அநாதைகளாக எமது இளம் சந்ததிக்கு
ஏற்பட்டுவிடக்கூடாது என்பவைகள்தான் அன்றய தேர்தல்
பிரச்சாரமாக இருந்தது இதுபற்றி றிசாட்பதியுத்தீனுக்கோ,றஊப்ஹக்கீம்
உட்பட தற்பேதுள்ள மு.கா. தலைமைகளுக்கோ அல்லது போராளிகள் என்று கூவித்திரியும்
கோமாளிகளுக்கோ என்ன தெரியும்.
இவ்வாறு 12 எம்பிமாரை கொண்ட
அந்தபேரம்பேசும் சக்தியை வைத்துக்
கொண்டு தலைவர் சந்திரிக்கா அம்மையாரோடு பேச்சுவார்த்தைக்கு
சென்ற அன்றய இரவில் போராளிகளும் மக்களும் தூக்கம் மறந்து கண்விழித்து தலைவர் என்ன கேட்கப்போகின்றார் சந்திரிகா
எதைவழங்கப்போகின்றார் என ஆவலுடன் எதிர்பார்த்த எமக்கு விடிந்தவுடன்
பலத்த ஏமாற்றறம், ஒரு முழுமந்திரி
இரண்டு அரை மந்திரிகளோடு பேரம்
பேசும் சக்தி புஸ்வாணமானது. எதை
கேட்டாலும் வழங்கவேண்டிய ஒரு
சூழ்நிலை சநிரிக்கா அம்மையாருக்கு
இருந்தும் தலைவர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என அன்றய பத்தரிகைகள் பலகேள்விகளையும்
விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் தலைவர் மீது
தொடுத்திருந்ததை அவதானிக்க
முடிந்தது. அன்றிலிந்தே எமது சமுகத்தை உண்மையாக நேசிக்கின்ற
போராளிகள் தொண்டர்கள் புத்திஜீவிகள் கல்விமான்கள் மதத்தலைவர்கள் போன்றோர் படிப்படியாக முஸ்லீம் காங்ரஸில் இருந்து ஒதிங்கிக்கொண்டார்கள்
அல்லது ஒதுக்கப்பட்டாடார்கள்.இன்று
முஸ்லீம் காங்ரஸில் அதன் கொள்கையை விளங்கியவர் எவருமில்லை.

எமது சரித்திரம் இவ்வாறு இருக்க
அன்று மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கு
வழங்கிய பேரம் பேசும் சக்தியை
தனக்கு வழங்குமாறு றிசாட் பதியுத்தீன்
கேட்கின்றாரே ! முழுமுஸ்லீம் சமூகத்தை ஏமாற்றவா ? யானையிலும் மயிலிலும் வெத்திலையிலும் கலர் மாறும் இவர்களால் சமூகத்திற்கு எதை சாதிக்க முடியும்?

Post a Comment