Header Ads



தாம் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக, ஆப்பிள் கூறுகிறது


தங்கள் நிறுவனம் தயாரித்த ஐஃபோன்கள், ஐபேடுகள் மற்றும் மேக் கணிப்பொறிகளின் சிப்புகள் அனைத்தும் 'மெல்ட் டவுன்' (Meltdown ) மற்றும் 'ஸ்பெக்டர்' (Spectre) ஆகிய கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

இணைய ஊடுருவிகள், இணையத்தில் தரவுகளைத் திருட இந்தக் கோளாறுகள் உதவுவதால், இவற்றைச் சரி செய்ய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் முனைப்பு காட்டி வருகின்றன.

"அனைத்து மேக் கணிப்பொறிகள் மற்றும் ஐஃபோன்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனினும், இந்தக் கோளாறுகளால் தரவுகள் எதுவும் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை," என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்தக் கோளாறு அனைத்து நவீன பிராசசர்களுக்கும் பொருந்தும். எல்லாக் கணிப்பொறிகள் மற்றும் இயங்குதளங்களுக்கும் இது பொருந்தும்," என்றும் ஆப்பிள் கூறியுள்ளது.

இப்பிரச்சனையை சமாளிப்பதற்கான, சில மென்பொருள் 'அப்டேட்டுகளை' வெளியிட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்ராய்டு ஃபோன்கள், விண்டோஸ் ஆகிய கருவிகள் மற்றும் இயங்குதளங்களை போல் அல்லாமல் தங்கள் கருவிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று மேக் பயன்பாட்டாளர்கள் நம்பி வந்தனர்.

கிட்டத்தட்ட உலகின் அனைத்து கணிப்பொறி மற்றும் போன்களின் சிப்புகளைத் தயாரிக்கும் இன்டெல் மற்றும் ஏ.ஆர்.எம் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த சிப்புகளில் 'மெல்ட் டவுன்' மற்றும் 'ஸ்பெக்டர்' ஆகிய கோளாறுகள் கண்டறியப்பட்டன.

தங்களின் எந்தெந்த தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் ஏற்கனவே கூறியுள்ளன.

உலகில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களில் சுமார் 80% பங்கைக் கொண்டிருக்கும் ஆண்ராய்டு போன்கள், சமீபத்திய மென்பொருள் அப்டேட்டுகளைக் கொண்டுள்ள பயனாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூகுள் கூறியுள்ளது.

தான் வழங்கும் பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணிப்பொறி சேவைகளுக்கு, பாதுகாப்பு அம்சங்களை விண்டோஸ் இயங்குதளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எனினும், விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டாளர்கள், ஆன்டி-வைரஸ் மற்றும் அங்கீகரிக்கப்படாத மென்பொருட்கள் ஆகியவற்றை சமீப அப்டேட்டுகள் மூலம் புதுப்பித்த பின்னரே இந்தப் பாதுகாப்பு அம்சங்களை தங்கள் கணிப்பொறியில் நிறுவ முடியும்.

'மெல்ட் டவுன்' மற்றும் 'ஸ்பெக்டர்' குறித்த விவரங்கள் அறிந்த பின்னர், விவகாரம் வெளியில் தெரியும் முன்பே இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் குசேனிக் தனது வசம் இருந்த அந்நிறுவனத்தின் 2,40,000 பங்குகளை கடந்த அக்டோபர் மாதம் மாதம் விற்றுவிட்டார்.

"இந்தக் கணிப்பொறிக் கோளாறுகளுக்கும், அவரது விற்பனைக்கும் தொடர்பில்லை," என்று இன்டெல் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.