Header Ads



மியன்மாருக்கு திரும்பிச்செல்வதற்கு எதிராக, ரோஹின்யர்கள் போரட்டம்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள தங்களை மியான்மருக்குத் திரும்ப அனுப்ப இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ரோஹிங்கயா அகதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வங்கதேசத்தில் நுற்றுக்கணக்கான அகதிகள் ஒன்றுகூடி, வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மியான்மரில் தங்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என பதாகைகளை ஏந்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், தாங்கள் மியான்மர் திரும்புவதற்கு முன்னதாக, ராக்கைன் மாகாணத்தில் தங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், அதற்காக அங்கு ஐ.நா. அமைதிப்படை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் ரோஹிங்கயா முஸ்லிம் இனத்தவர்கள், வங்கதேசத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.

பல தலைமுறைகளாக மியான்மரில் வசித்து வந்தாலும், அந்த நாட்டில் அவர்கள் சட்டவிரோத வங்கதேச அகதிகளாகவே பரவலாகக் கருதப்படுகின்றனர்.

மியான்மர் அரசும், ரோஹிங்கயா இனத்தவருக்கு முழுமையான குடியுரிமை அளிப்பதைத் தவிர்த்து வருகிறது.

இதன் காரணமாக, தங்களது உரிமையை நிலைநாட்ட ரோஹிங்கயாக்களில் ஒரு பிரிவினர் தீவிரவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் சில பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மியான்மர் ராணுவம் நடத்திய கடுமையான பதிலடித் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், உள்ளூர் கலவரக்காரர்களுடன் இணைந்து ரோஹிங்கயா கிராமங்களுக்கு ராணுவம் தீவைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வன்முறைக்கு அஞ்சி, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மட்டும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலையில், ரோஹிங்கயா அகதிகளை திரும்ப அனுப்பவதற்கான உடன்பாட்டை மியான்மருடன் வங்கதேசம் மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த மாதம் 23-ஆம் தேதி முதல் ரோஹிங்கயா அகதிகள் திரும்ப அனுப்பப்பட வேண்டும்.

எனினும், அந்தக் கெடு தேதிக்குள் அகதிகளை மியான்மருக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கான சாத்தியம் இல்லை என்று வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர். 

எனினும், இரண்டு ஆண்டுகளுக்குள் அகதிகள் அனைவரையும் மியான்மருக்கு அனுப்புவதற்கான உடன்பாடு 2 நாள்களுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டது. 

No comments

Powered by Blogger.