January 19, 2018

"நிலாமை வெற்றி பெறச்செய்வது, யாழ்ப்பாண முஸ்லிம்களின் கடமை"


-பாறுக் ஷிஹான்-

எமது யாழ் முஸ்லீம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டி இடுகின்றேன் என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் யாழ் மாநகர சபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் வேட்பாளராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  ஐக்கிய தேசிய கட்சி   கூட்டணியில் இணைந்து போட்டி இடும் இவர் ஜப்னா முஸ்லீம் இணையத்திற்கு வழங்கிய விசேட நேர்காணல் பின்வருமாறு

கேள்வி-  உங்களை பற்றி குறிப்பிடுங்கள்   மற்றும்  அரசியலில் திடிரென இறங்குவதற்கு காரணம்   ?

பதில்-எனது பெயர் கே.எம் நிலாம்(நியாஸ்).தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ்ப்பாண கிளைத்தலைவராக உள்ளேன். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து யுத்தத்தினால் 1990 ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 2009 ஆண்டு யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்து இன்று வரை வாழ்ந்து வருகின்றேன்.கடந்த காலங்களில் எமது மக்களிற்காக அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றேன்.நொந்து போயுள்ள எமது மக்களை தொடர்ந்து சிலர் பகடைக்காயாக வைத்து ஏமாற்றி அவர்களது வாழ்வுரிமையை பறிக்க ஆரம்பித்துள்ளனர்.இவற்றை என்னால் கைகட்டி பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.மக்கள் சேவை என்றால் என்ன என்பதை அவர்களுக்கு மிக விரைவில் தெளிவு படுத்துவேன்.என்னை போன்ற யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அதற்காகவே அன்றில் இருந்து இன்று வரை உறுதியாக இருந்து கொண்டு அரசியல் அதிகாரத்தின் ஊடாக அவற்றை செயற்படுத்த உறுதி எடுத்துள்ளேன்.

கேள்வி-மக்கள் சேவைகள் பலவற்றை செய்துள்ள நீங்கள் ஏன் கடந்தகால தேர்தல்களில் பங்கு பற்றவில்லை?

பதில்-கடந்த காலங்களில் பள்ளிவாசல் ஒன்றில் தலைமைத்துவ பதவி ஒன்றில் இருந்துள்ள காரணத்தினாலும் இப்பிரதேசத்தில் அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றினைந்து உருவாக்கிய சிவில் அமைப்பு ஒன்றின் தலைவராகவும் உபதலைவராகவும் இருந்து மக்களிற்கு சேவை செய்தமையினால் அரசியலில் ஈடுபட முடியவில்லை.எனினும் எமது யாழ் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது அரசியலில் கால்பதித்துள்ளேன்.

கேள்வி-அரசியலில் தற்போது இறங்கியுள்ள நீங்கள் மக்களிற்கு எவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பீர்கள்.?

பதில்- உள்ளுராட்சி சபை தேர்தல் ஊடாக  மிக நீண்டகாலமாக  எமது பிரதேசத்தில்  அபிவிருத்தி செய்யப்படாமலிருக்கும் பகுதிகளை  அபிவிருத்தி செய்யவேண்டிய அவசியம் உள்ளது. நீண்டகாலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக எமது  கிராமங்களில் வாழ்வதுடன்  அக்கிராமங்களில் இன்றளவும் வீதிகள் புனரமைக்கப்படாமலும்  குடிநீர் இல்லாமலும்  போக்குவரத்து வசதிகள் இல்லாமலும் என பல்வேறு பிரச் சினைகளும் இருந்து வருகின்றது. இவற்றை தீர்ப்பதனை இலக்காக கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கின்றேன்.நான் இந்த தேர்தலில் வெற்றியடைவதன் ஊடாக நான் வாழும் கிராமத்தின் அல்லது யாழ்.மாநகரசபை க்குள் உள்ள கிராமங்களின் அபிவிருத்திக்காக உழைப்பேன் என உறுதி அளிக்கின்றேன்.

கேள்வி-  உங்கள் பிரதேசத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை கூறி என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்?

பதில்- எமது கிராம சேவகர் பிரிவுகளான ஜே-86 ஜே -87  பிரதேசத்திலுள்ள  பாதைகள் கால்வாய்கள் புனரமைத்தல்  மற்றும் நூல் நிலையங்கள் முன்பள்ளிகள் பொது  மலசலகூட வசதிகள் ஏற்படுத்தல்  குறைந்த வருமானமுள்ளோருக்காக வீட்டு வசதி ஏனைய வசதிகளை எமது கட்சி  தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனின் அனுசரணை ஊடாக  ஏற்படுத்தல்.

எனது  பிரதேசத்தின் அபிவிருத்திக்கு  தேவையான திட்டங்களைத் தயாரித்து செயற்படுத்துவேன்.

 எமது பிரதேசத்திற்கு என்று பொது  சந்தை ஒன்றை   ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

எமது மக்களின் தொழில் வாய்ப்பிற்கென குறைந்த  குத்தகைக்கு  கடைகள் மற்றும்  வாடகைக்கு பெற்று கொடுக்கவுள்ளேன்.

சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள நடமாடும் சுகாதார நிலையங்களை உருவாக்குவேன்.

அத்துடன்  பிரதேசத்தின் வளங்களை இனங்  கண்டு மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வேன்.எனக்குரிய  உத்தியோகபூர்வ கடமைகளை உரியவாறு நிறைவேற்றி  மக்களின் குறைபாடுகளுக்குச் செவிமடுப்பேன்.

தொடர்ந்தும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து அவர்களின் அபிவிருத்தியில் பங்கெடுப்பேன்.

மோசடி, ஊழல் என்பவற்றைத் தடுத்து நிறுத்தி பொது பாதுகாப்பிற்கு பங்களிப்பு வழங்குவேன்.

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தலைத் தவிர்த்து அர்ப்பணிப்புடன் பொதுமக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பேன்.எமது பகுதி குப்பைகளையும் கழிவுகளையும் உரியவாறு அகற்ற நடவடிக்கை மேற்கொள்வேன்.

கேள்வி-யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்தில் உங்கள் பங்களிப்பு பற்றி சொல்லுங்கள்?

பதில்-எமது மக்கள் கடந்த கால யுத்த நிலைமையினால் இடம்பெயர்ந்து தற்போது 8 வருடங்களாக மீள்குடியேறி வருகின்றனர்.எனினும் மீள்குடியேற்ற நடவடிக்கை மந்த கதியில் தான் செல்கின்றது.எமது கட்சி தலைவர் கூறுவது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிலர் தங்கள் அரசியல் உத்திக்காக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ளார்கள்.உதாரணத்திற்கு பரச்சேரி காணிப்பிரச்சினை இந்திய வீட்டுத்திட்ட பிரச்சினை சிறந்த எடுத்து காட்டு.எமது தலைவர் அண்மையில் தெரிவித்ததன் படி சுமார் 300 வீடுகள் மிக விரைவில் கட்டப்பட இருக்கின்றது.அதற்கு சகல தரப்பினரும் அரசியலுக்கு அப்பால் ஒத்துழைப்பு வழங்க என்னால் ஆன நடவடிக்கை மேற்கொள்வேன்.சோலைவரிப்பிரச்சினைக்கும் அடுத்ததாக தீர்வு பெற்று கொடுக்கப்படும்.எமது மக்களை நிம்மதியாக வாழ வைக்கனும்.

கேள்வி-எதிர்காலத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினராக வந்தால் உங்கள் முதல் நடவடிக்கை என்ன?

பதில்-குடிநீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வை பெற நடவடிக்கை எடுப்பேன்.எங்கள் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பேன்.இதை ஏன் கூறுகின்றேன் என்றால் பழைய இரும்பு இறைச்சிக்கடைகளை இனியும் நம்பி இருக்காமல் எங்கள் சமூகம் படிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு படித்தசமூகமாக வருவதற்கு உதவி செய்வேன்.

கேள்வி-தேர்தலில் வெற்றி பெறுவீர்களா?

பதில்-இன்ஷா அல்லாஹ்.நிச்சயமாக மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெறுவேன்.

கேள்வி-ஏனைய கட்சிகள் உங்களிற்கு போட்டியாக உள்ளதா?

பதில்-அவ்வாறு நினைக்கவில்லை.மக்கள் எனது பக்கமே அன்றும் இன்றும் இருக்கின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் எமது மக்களை தவறாக திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.முகநூல்களில் பொய்யான அறிக்கைகளை வெளியிடகின்றனர்.இவ்வாறான நடவடிக்கைக்கு மக்கள் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி உரிய பதிலை வழங்குவார்கள்.

கேள்வி-உங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கூறுங்கள்?

பதில்-ஒவ்வொரு மக்களும் எனக்காக வீடு வீடாக சென்று  பாடுபடுவதை பார்க்கின்ற போது அவர்களுக்காக ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என தோன்றுகின்றது.மிக விரைவில் அதனை செயற்படுத்துவேன்.வழமையாக அரசியல்வாதிகள் தான் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவார்கள் எனக்கு மக்கள் தான் அதிகமாக வாக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

கேள்வி-உங்களை மக்கள் ஏன் பண்ணையார் என்று அழைக்கின்றனர்?

பதில்-(சிரிக்கின்றார்) மக்களிடம் தான் கேட்க வேண்டும். மக்கள் சேவைக்கு நிலாமிற்கு அவர்கள் கூறும் பெயர் என தெரிய வந்தது

0 கருத்துரைகள்:

Post a Comment