January 02, 2018

உலமாக்களுக்கு வேட்டுவைத்த துரோகிகள்

-அபூ அம்மார்-  

ஏனைய பதிவுகளைப் போன்று படித்து விட்டு அழித்துவிடும் பதிவல்ல இது. உலமா சமூகத்துக்கு  வேட்டுவைத்த துரோகிகளை உலகுக்குச் சொல்லிக் கொடுக்கும் வரலாற்றுப் பதிவு. பத்திரமாய் பாதுகாத்து வையுங்கள். 

காலத்துக்குக் காலம் எமது இலங்கை வாழ் முஸ்லிம் உம்மத் விதவிதமான சோதனைகளை சந்தித்து வருகின்றது. அவற்றில் சிலதை நாம்  பேராபத்தாகப் பார்க்கும் அதே நேரம் மற்றும் சிலதை கண்டுகொள்ளத் தவறுகின்றோம். சிங்கம் மனிதனைக் கடித்துக் கொலை செய்யும் பயங்கர மிருகம் என்பதில் அணுவளவும் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் சிங்கம் கடித்து இறந்தவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? நுளம்பை யாரும் கண்டு கொள்வதில்லை ஆனால் அதன் கடியால் மரணித்தவர்களின் பெயர் பட்டியல் உங்களிடமும் இருக்கிறதல்லவா? அத்தகைய நிகழ்வே இன்று உலமாக்களுக்கும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உதாரணமாகும். 

அல் குர்ஆனையும், சுன்னாவையும் உள்ளத்தில் சுமந்து அதன்படி வாழ்வை அமைத்த உலமாக்கள்  நபிமார்களின் வாரிசுகள். அல்லாஹ்வின் இறை நேசர்கள், அவனை அஞ்சி வாழும் உத்தமர்கள். முஸ்லிம் உம்மா கண்ட எழுச்சிகளுக்கும்; வளர்ச்சிகளுக்கும் வேராய் நின்று உந்து சக்தி வழங்கியவர்கள் ஆலிம்கள் என்பதற்கு வரலாறு சாட்சி. உலமாக்கள் இல்லாத சமூகம் முன்னேறியதாய் வரலாறே கிடையாது. உண்மையில் உலமாக்கள் உம்மத்துக்காய் உருகும் மெழுகுவர்த்திகள். இன்று நாம் நம் மண்ணில் காணும் பல சுதந்திரங்களுக்கு தன்னலம் பாராது உழைத்து மண் மறைந்த அந்த உத்தமர்களே காரணம்.  

ஒரு மனிதன் எந்நிலையிலும் வாழலாம் ஆனால் அவன் சுவர்க்கம் செல்ல வேண்டுமெனில் உலமாக்களின் வழிகாட்டல் வேண்டும். பலகோடிகளுக்குச் சொந்தக் காரனாக மகனிருந்தும் தனது வாப்பாவின் ஜனாஸாக் கடமைகளைக் கூட சீராக நிறைவேற்றத் தெரியாத அவல நிலையும், ஆலிம்கள் மனமுவந்து முன் வந்து பெற்ற குழந்தைகளை விட அக்கறை கொண்டு அக்கடமைகளை நிறைவேற்றும் காட்சியும் அன்றாடம் எமக்குப் பழகிப் போனவை. 

இத்தகைய உத்தமர்களுடன் உதாசீனமாய் நடந்து கொள்ளும்; நிலை அண்மைக்காலமாக நம் நாட்டில் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மஸ்ஜித்களின் இமாம்கள், முஅத்தின்கள், மத்ரசா உஸ்தாதுமார்கள் விடயத்தில் சில நிருவாகிகளின் நடவடிக்கைகள் மிகவும் கவலைக்குரியதாய் அமைகிறது. 

தீனைக் கற்க எட்டு வருடங்கள் செலவழித்து, சமூக வளர்ச்சிக்காக தன் சுய இலாபங்களை இழந்து, தீன் பணியில் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள்தான் உலமாக்கள். அவர்களுக்கு மற்றவர்களைப் போன்று கை நிறைய சம்பாதிக்கத் தெரியாமலில்லை. ஆனால் புனித தீன் பணிக்காக கடமை உணர்வோடும் தம்மை அதற்காக ஒதுக்கிக் கொள்கின்றனர். இன்று அவர்களுடைய உரிமைகளும் சலுகைகளும் தேய் பிறையாகவும், சில நிர்வாகிகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் வளர்பிறையாகவும் தொடர்கிறது. இதனால் அமாவாசையில் சிக்கப்போவது சமூகம்தான். 

இவற்றைச் சீரமைக்க நல்லதொரு பொறிமுறை உருவாக்கப் படவில்லையென்றால் எமது தீனின் கேந்திர நிலையங்களான மஸ்ஜித்கள், மத்ரசாக்களின் நிலை கேள்விக்குள்ளாகும் என்பதை சமூக அக்கறைக்கொண்ட எவராலும் இலகுவாகக்; கிரகித்துக் கொள்ள முடியும். இதனைச் சீரமைக்க பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும். 

உலமா சபையும்,  சமூக நிறுவனங்களும், நல்லுள்ளம் படைத்த துறை சார்ந்தவர்களும் மிக அவசரமாக முன்வந்து காரியமாற்ற வேண்டும். பல்வேறு சமூக சேவைகளில் களமிறங்கி செயற்படும் சம்மேளனங்கள் தமது சுய கோபதாபங்களைப் புறந்தள்ளி இதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். இதற்கு முக்கியத்துவம் அளித்து செயற்படவேண்டிய உலமா சபையும், கதீப்மார்கள் சம்மேளனமும் மந்தப் போக்கைக் கையாழ்வது கவலைக்குரியதாகும்.   

அதே நேரம் உலமாக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற நோக்கில் தூரநோக்கின்றி சில உலமாக்கள் களம் இறங்கியிருப்பது எமது சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு சாபக் கேடாகும். 

இவர்கள் அர்த்தங்களையும் பின்விளைவுகளையும் கவனிக்காமல் வாய்க்கு வந்த வார்த்தைகளாலும், கைக்கு வந்த எழுத்துக்களாலும் நிர்வாகிகளைத் திட்டித் தீர்க்கின்றனர். 'வட்ஸ் அப்;' வீரர்களாகி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றனர்.  'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறும் பதம்' எனும் பழமொழியை நிருவாகிகள் விடயத்தில் நிறுவி ஒருவர் செய்த குற்றத்துக்கு அனைத்து நிர்வாகிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்றனர். மஸ்ஜித் மற்றும் மத்ரசாக்களிலிருந்து விலகியவர்களும், விலக்கப்பட்டவர்களும் தாம் விரும்பிய பிரகாரம் தமக்கு சார்பாக நியாயம் கற்பித்து பிரதிவாதியின் உண்மை நிலைகளுக்கு சந்தர்ப்பமளிக்காமல் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் பேசி முடிக்கின்றனர். 

நபியவர்களின் நற்குணங்களை வாழ்வில் சுமந்த உண்மையான ஒரு ஆலிமின் அணுகுமுறை ஒருபோதும் இவ்வாறிருக்க முடியாது என்பது ஒரு புறமிருக்க இச்செயற்பாடுகள் ஒருபோதும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு இட்டுச் செல்லாது என்பதே உண்மையாகும்.

உணர்வுகளைத் தூண்டி விபரமறியாத உலமாக்களை வீதியில் இறக்கி அவர்களை இழிவாக்கியதும், கொடி தூக்கிப் போராடவைத்து பொதுமக்களின் பார்வையில் சீரழித்ததும், அல்லாஹ்வின் புனித இல்லமான மஸ்ஜித்களைப் பகிஷ்கரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து அல்லாஹ்வின் வேதனைகளை இறக்கிக் கொண்டதும், ஆங்காங்கே பிரச்சினைகள் நடந்தபோதிலும் கண்ணியமாக கௌரவமாக வாழ்ந்து நல்ல பல சலுகைகளை பெற்றுவரும் உலமாக்ளிடமிருந்து அவற்றை பிடுங்கியெறிந்ததும் இதன் அடைவுகளாக இருக்குமே தவிர வேறொன்றையும் சாதித்துவிடப் போவதில்லை. 

இதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் வேண்டுமென்றால் தங்களுக்கென பதவிகளை அறிமுகம் செய்யலாம், கடிதத் தலைப்புக்களையும், பதவி முத்திரைகளையும் அமைத்துக்கொள்ளலாம், தாங்கள் அனைத்து நிர்வாகிகளையும் ஆட்டிவைப்பதாக இறுமாப்புக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் அடைந்ததைவிட உடைத்தெறிந்தவைகளே அதிகம் என்பதற்கு காலம் பதில் சொல்லும், கண்திறக்கும்போது பலகோடி நலவுகளை நமது சமூகம் இழந்திருக்கும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்காக என்பதாய் அமைந்து விடும்.

நிதானமாய்ச் சிந்திக்கும்போது உலமாக்களுக்கு பல்வேறு சிக்கல்களைக் கொண்டு வரும் இத்திட்டத்தை, விபரம் அறியாமல் ஆதரிப்N;பார் தமக்குத் தாமே குழிதோண்டிக் கொள்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்ளும் காலம் தொலைவில் இல்லை.  


அல்லாஹ்வின் தீனுக்காக அள்ளிவழங்கும், உலமாக்களைக் கண்ணாய் மதிக்கும், அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும், வலது கரம் கொடுப்பது இடது கரத்துக்குத் தெரியாமல் தர்மம் செய்யும் நல்லவர்களும் நிர்வாகிகளில் இருக்கவே செய்கின்றனர். அனைத்து நிர்வாகிகளையும் இலக்காக்கி, அவர்களை கீறிக்கிளிக்க களமிறங்கி செயற்படுவோர் ஓதிய மத்ரசாக்களைக் கட்டிக் காத்தவர்களும் காப்பவர்களும் நிர்வாகிகளே என்பது மறந்துவிட்டார்கள் போலும்.          

வரலாறு முழுவதிலும் கண்ணியமிக்க உலமாக்கள் அல்லாஹ்வின் தீனை உரிய முறையில் நிலை நாட்டவும், பாதில்களை உடைத்தெறியவும், தம் உயிரையும் துச்சமாக மதித்துப்  போராடினார்கள் என்று நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தங்களது சம்பளத்துக்காக, விடுமுறைக்காக சங்கம் அமைத்து சந்திக்கு வந்தார்கள் என்பது (உண்மையான) உலமாக்களின் வாழ்க்கையில் காண முடியாது. அவர்கள் தங்களது அனைத்து நிலமைகளையும் அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டி பொறுமையோடு வாழ்ந்ததனால்தான் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டபோதிலும் அவர்களது பெயர்கள் உயிர் வாழ்கின்றன. அரசர்களின் பரம்பரைகள் கூட பொறாமைப் படத்தக்க விதத்தில் உலமாக்களின் பரம்பரைகளை அல்லாஹ் கண்ணியமாக வாழச் செய்தான்.

இன்று சில உலமாக்கள் எமது முன்சென்ற உத்தமர்களின் வழி முறைகளைப் புறந்தள்ளி செயற்படுவதை காலத்தின் புதுமையில் ஒன்றாக நினைத்து நாம் மௌனித்து விடலாம். ஆனால் இவர்களின் சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கைகளால் முழு உலமா சமூகமும் பலிக்கடாவாகும் நிலைதான் மிக வேதனைக்குரியதும் அச்சத்துக்குரியதுமாகும். 

உலமாக்களும், தனவந்தர்களும், துறைசார்ந்தவர்களும் ஒன்றிணைந்து தம்மாலான பங்களிப்புக்களைச் செய்யும்போதுதான் ஒரு சமூகத்தை எழுச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம். அதுவும் சிறுபான்மையினராக பல்வேறு பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகங் கொடுத்துவரும் நாம் இதில் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டும். ஒருவர் மற்றவரைப் புறந்தள்ளி செயற்படுவது வீழ்ச்சிக்கே வித்திடும்.

எனவே இரு சாராரும் நிதானித்து செயற்பட வேண்டும். இல்லையெனில். தனது  உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் விபரம் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தின் எதிரிகளிடம் உதவி தேடிச் செல்லுதல், ஒருவர் தனக்கு அநியாயம் செய்யப்பட்டதாக நினைக்கும் இடத்துக்கு யாரும் போகக் கூடாது என மற்றோரை தடுத்து நிறுத்துதல், நிர்வாகிகளுக்கெதிராக உலமாக்களைத் தூண்டிவிடுதல், மத்ரசாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் நல்லவர்கள் மனமுடைந்து பின்வாங்குதல் என்பன போன்ற சமூகத்தைப் பாதாளத்துக்கு இட்டுச் செல்லும் பல விடயங்களை நாம் கண்டுகழித்து முகம் சுழிக்க நேரிடும்.

பிரச்சினையிருப்பது உண்மை அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும். இல்லையெனில் அசுத்தத்தைச் சுத்தம் செய்ய சிறுநீரை உபயோகித்த கதையாகவே மாறிவிடும். 

2 கருத்துரைகள்:

very true article thanks for writer meanwhile writer should avoid some idioms mention in the article " KAN KATTAPIN SOORIYA NAMASKARA" it is giving wrong message to reader as we accept that so avoid like this next article

அது அன்று உள்ள உலமாக்கள் செய்த நல்ல காரியம் இன்று உள்ள உலமாக்கள் இஸ்லாத்தை வித்து வாழ்வாதாரம் தேடுகின்றார்கள் கொந்தராது செய்வதற்காக இஸ்லாத்தை மார்க்கத்தை முதலாக பயன் படுத்துகின்றார்கள்
அரசியல் லாபத்துக்கா மார்கத்தை பயன் படுத்து கின்றார்கள்

இன்னமும் எத்தனையோ லீலைகள் ஒரு கிண்ணத்தை காட்டி 10 பேரிடம் பணம் வசூலிக்கின்ற திறமையும் இந்த உலமாக்களிடம் தான் உண்டு

இந்து சகோதரிக்கு பர்தா இட்டு முஸ்லிமாக காட்டி கொந்தராது செய்யும் திறமையும் இந்த உலமாக்களிடம்தான் உண்டு

யாரோ ஒருதத்தரின் பணத்தில் கட்டிய மலசல கூடத்தை காட்டி இது உங்களின் உதவியால் நடந்தது என்று சொல்லுM திறமையும் இந்த உலமாக்களிடம் தான் உண்டு

இந்த உலமாக்கா சமூகத்தை வலி நடத்த போகிறார்கள் இத்தகய வர்களை இல்லாமல் இருந்தாலே சமூகம் நல்லாக இருக்கும்

Post a Comment