Header Ads



தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம், பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதீர்கள் - முஸ்லிம் கவுன்சில்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலோ அல்லது அவர்களை அசௌகரியப்படுத்தும் வகையிலோ நடந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வரும் நிலையிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

புதிய தேர்தல் திருத்தச் சட்டத்திற்கமைய உள்ளூராட்சித் தேர்தலில் 25 வீத பெண் பிரதிநிதித்துவ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான உரிமையாகும்.

அந்த வகையில் இம் முறை ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் நியமிக்கப்படவிருக்கின்ற உறுப்பினர் எண்ணிக்கையின் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஆகக் குறைந்தது 1,900 இற்கும் அதிகமான பெண்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அந்த வகையில் இத் தேர்தலில் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் எமது விகிதாசாரத்திற்கொப்ப உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

முஸ்லிம் பெண்கள் இத் தேர்தலில் போட்டியிடாது தவிர்ந்து கொண்டால் அல்லது தெரிவு செய்யப்படாதுவிடின் எமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் அபாயம் உள்ள நிலையில் பெண் வேட்பாளர்களை அச்சுறுத்தி, அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் ஏனைய பணிகளில் ஷரீஆ வரையறைகளுக்குட்பட்டவாறு ஈடுபடுவது போன்றே அரசியலிலும் ஷரீஆ அனுமதித்த வரையறைகளைப்பேணி ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்குவதே நமது கடப்பாடாகும் என வலியுறுத்த விரும்புகிறோம். 

No comments

Powered by Blogger.