January 03, 2018

இக்கட்டான நிலையில், பயணம் செய்கின்றேன் - ரிஷாட்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு-

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மானிப்பாயில் இன்று (03) இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார்.  அவர் மேலும் கூறியதாவது, 

யாழ் மாநகர சபைத் தேர்தலில் எமது கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஒரேயொரு வேட்பாளரை ஆதரிக்குமாறு கோரி, நான் இங்கு வந்திருப்பது உங்கள் மீதும், இந்த வேட்பாளர் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பும் அபிமானமுமே காரணம் என்பதை நீங்கள் உணர வேண்டும். கட்சியின் பல முன்னணி உறுப்பினர்களும், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் இருக்கும் இந்தப் பிரதேசத்திலே, தற்போது நாங்கள் எல்லோருடைய ஏகோபித்த தீர்மானத்துடன் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளரை, பொது வேட்பாளராகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த வேட்பாளர் தெரிவில் விட்டுக்கொடுப்பும், ஒற்றுமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திலே தமிழ் சமூகத்துடன் முஸ்லிம் சமூகம் அந்நியோனியத்துடனும், கௌரவமாகவும் இணைந்து வாழ்ந்த வரலாறு இருக்கின்றது. அவர்களது பேச்சிலும், எண்ணத்திலும்,; செயற்பாட்டிலும் இந்த ஒற்றுமையை நாம் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம். யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த போதும்,; யாழ் நகரிலுள்ள தமிழர்களுடன் உறவை தொடர்ந்ததே வரலாறு. அமைச்சரான என்னிடம் கூட முஸ்லிம்கள் வந்து தமிழ் சமூகங்களுக்கு வேலைவாய்ப்;பை பெற்றுக்கொடுங்கள் என்று பல தடவை வலியுறுத்தியிருக்கின்றனர். 

என் அரசியல் வாழ்வை பல கோணங்களில் படம்பிடித்துக் காட்ட பல சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. சிங்களவர்களிடம் சென்று  என்னை சிங்கள மக்களின் விரோதியாகவும், தமிழர்களிடம் சென்று என்னை தமிழ் மக்களின் எதிரியாகவும் சிலர் சித்திரிக்கின்றனர். முஸ்லிம் கட்சிகள் சில என் மீது கொண்ட காழ்ப்;புணர்வினால், முஸ்லிம சமூகத்தின்; மத்தியிலே என்னை ஒரு பிழையானவனாகக் காட்ட பிரயத்தனப்படுகின்றனர். இத்தனை அம்புகளையும் தாங்கிக் கொண்டு இக்கட்டான நிலையில் பயணம் செய்கின்றேன். கரடுமுரடான பாதையிலே நிம்மதியிழந்து, இந்த அரசியல் பயணத்தை தொடரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சமுதாய நலனுக்காகவே இந்த சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். 

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் சகோதரர்களும், முஸ்லிம்களும் பல பாதைகளை செப்பனிடுமாறு வந்து கோரிக்கை விடுத்ததை நான் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும். எனவே இங்கு வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் மதத்தால் வேறுபட்ட போதும், மொழியால் ஒன்றுபட்டு ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் முரண்படாமலும் வாழவேண்டும் என்பதே எமது விருப்பமாகும். 

யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் தமிழ் கூட்டமைப்பினருக்கு கடந்த மாகாண சபை தேர்தலில் 80 சதவீதமான மக்கள் வாக்களித்து, அறுதி பெரும்பான்மையை பெற்றுக்கொடுத்தனர். அதே போன்று யாழ் மாநகர சபையிலும் அந்த கூட்டமைப்பு, பெரும்பான்மை ஆசனங்களுடன் வெற்றிபெற்ற போதும், இங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை மாகாண சபையோ, மாநகர சபையோ பெற்றுக் கொடுத்திருக்கின்றதா? ஏன்பதை நீங்கள் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றீர்கள். அதே போன்று இந்தத் தேர்தலிலும் அதே பல்லவியையே இவர்கள் பாடுவர். அதற்கு நீங்கள் ஏமாந்து விடக்கூடாது. 


யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும், எமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதன் மூலமே மத்திய அரசாங்கத்திற்கும், மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான நெருக்கமான நேரடியான உறவு ஏற்படும் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். 

யாழ்ப்பாண உள்ளுராட்சி சபைகளிலே பல கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் தேர்தலில் குதிக்கின்றனர். அவர்கள் தேர்தல் காலங்களில் மட்டும் வந்து உங்கள் வாக்குகளை அள்ளிச் செல்லும் உள்நோக்கம் கொண்டவர்களாகவும் இருக்கலாம். வெற்றி பெற்றதன் பின்னர், அடுத்த நான்கு வருடங்களுக்கு இந்தப் பக்கம் தலைகாட்டாது மீண்டும் இங்கு வந்து வாக்கு கேட்பவர்களாகவோ அல்லது தாங்கள் போட்டியிடாமல் இன்னொரு வேட்பாளர்களை நிறுத்துபவர்களாகவோ இருக்கமுடியும். 

ஆனால் எங்களை பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் மட்டும்  இங்கு வந்து வீராவேசம் பேசுபவர்கள் அல்லர். உணர்ச்சிகளை தூண்டி வாக்குகளை பெறுபவர்களும் அல்லர். கடந்த காலங்களில் மக்கள் பணியை நேர்மையாக செய்திருக்கின்றோம். வீடமைப்புத் திட்டத்திலோ, வேலைவாய்ப்பிலோ நேர்மையாக உதவியுள்ளோம். மீளக் குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்கள் புத்தளத்தில் வாழும் போது, எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி நாங்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். 

யாழ் முஸ்லிம்களை போன்று நானும் ஓர் அகதியே என்ற எண்ணத்திலும், சிந்தனையிலுமே தூய்மையான முறையில் பணியாற்றியிருக்கின்றேன். அவர்களின் தேவைகளை எனது தேவையாக எண்ணி கருமமாற்றியிருக்கின்றேன்.  பாராளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ ஆளுங்கட்சி கூட்டங்களிலோ சர்வதேச  இராஜதந்திரிகள் மத்தியிலோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மத்தியிலோ உள்ளதை உள்ளபடி நேர்மையாக பேசி உண்மையை உரைத்திருக்கின்றோம். 

புத்தளத்தில் யாழ் முஸ்லிம்கள் வாழ்ந்த போது நாம்  எவ்வாறு பணியாற்றினோமோ அதே போன்றே இந்தப் பிரதேசத்திலும் உங்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவோம். கடந்தகாலங்களில் நீர்கொழும்பிலும், பாணந்துறையிலும், குருணாகலிலும் நீங்கள் அகதிகளாக வாழ்ந்த போது பட்ட கஷ்டங்களும் சீரழிவுகளும் எமக்கு இப்போது கண்முன்னே வந்து நிற்கின்றன. இன்னும் அந்த மண்ணிலே அகதியாக  வாழ்கின்றவர்கள் கணவனை இழந்து விதவையாக பிள்ளைகளை இழந்து குடும்ப உறவுகளை இழந்து சின்னாபின்னம் அடைந்திருப்பதை நினைத்து பார்க்கின்றோம். 

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி தமது பழைய வாழ்வை தொடர்வதற்கு பல தடைகள் அவர்களுக்கு இருக்கின்றன. வீடமைக்க காணி இல்லை வாழ்வாதாரத்திற்கான தொழில் இல்லை இவ்வாறான நிலையில் அங்கேயும் வாழமுடியாது. இங்கேயும் வரமுடியாது தவிப்பதை காண்கின்றோம். 

மீளக்குடியேறிய மக்களின் பல்வேறு துன்பங்களை தீர்ப்பதற்கான ஓர் அடித்தளமாகவே, இந்த உள்ளுராட்சி தேர்தலில் எமது பிரதிநிதியின் வெற்றியை நாம் நோக்குகின்றோம். கடந்தகாலங்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருந்தபோது நாம் ஆற்றிய பணிகளை நன்றியுள்ளவர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ் மக்கள் ஓடிவந்து முள்ளுக்கம்பிகளுக்குள்ளே முடங்கிக் கிடந்தபோது ஓடிச்சென்று உதவிக் கரம் நீட்டியவர்கள் நாங்களே. யுத்தம் முடிந்து மீள்;;குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டுமென்று அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்த போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை வழங்கி 3லட்சம் மக்களை தமது சொந்த நிலங்களில் குடியேற்றியிருக்கின்றோம்.  கோரயுத்தத்தினால் சிதைந்து போய்க்;கிடந்த கட்டுமானங்களையும், பாதைகளையும் முடிந்தளவு கட்டியெழுப்பினோம். முற்றாக அளிந்துபோன முல்லைத்தீவு மாவட்டத்தையும், வவுனியா வடக்குப் பிரதேசத்தையும், மடுப் பிரதேசத்தையும் எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி மீளக் கட்டியிருக்கின்றோம். சுமார் 15ஆயிரம் வீடுகளை கட்டி வழங்கியிருக்கின்றோம். வாகனங்கள் எரிந்தும் கட்டிடங்கள் தகர்ந்தும் மயானமாக காட்சியளித்த அந்தப் பிரதேசத்தை குறுகிய காலத்தில் மீளமைத்தோம். 

இந்தப் பணிகளை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் மேற்கொண்டிருக்கின்றேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. மாகாண சபை இயங்காத அந்தக் காலங்களில் வடமாகாண ஆளுநருடன், இணைந்து இந்தப் பணிகளை நான் மேற்கொண்டிருக்கின்றேன். ஆனால் அகதிகளாய்ப் போன வடக்கு முஸ்லிம்களில் 3000 பேரையாவது குடியேற்ற நாங்கள் முயற்சிகளை மேற்கொண்ட போது, வடக்கு மாகாணசபை அதற்கு தடையாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு காணிகளை கேட்கின்ற போது அதைக் கொடுப்பதற்கு மனமில்லாது இரண்டு இனங்களையும் மோதவிடுகின்ற சூழ்ச்சியை மேற்கொண்டு, அதனை தடுத்து தமது அரசியல் இருப்பை தக்கவைக்க சில அரசியல்வாதிகள் இன்னும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் நான் இனவாதியாக இருந்திருந்தால் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரங்கள் என்னிடம் இருந்த போது முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றத்தில் முன்னுரிமை கொடுத்திருக்கமுடியுமே. அவ்வாறு நாம் செய்யவில்லை. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆக 300 குடும்பங்களுக்கேனும் காணிகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் முனைந்த போது, யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அப்பாவி மாணவர்களுக்கு உசுப்பேற்றி அவர்களை, அந்தப் பிரதேசத்துக்கு கொண்டு வந்து, எனக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை கச்சிதமாக மேற்கொண்டனர். என்னை மோசமாக தூசித்தனர். 

ஆனால் நாங்கள் இந்தப் பிரதேசத்தில் இன, மத பேதமின்றி பணியாற்றியதற்கு எமக்கு கிடைத்த பரிசே கடந்த மாகாண சபை தேர்தலில், எமது கட்சியின் சார்பில் சிங்கள உறுப்பினர் ஒருவர் வெற்றி பெற்றமையாகும். அதே போன்று வவுனியா பிரதேச சபை மன்னார் நானாட்டான் பிரதேசசபை,  மன்னார் பிரதேசசபை ஆகியவற்றில் பல தமிழர்களும், கணிசமான முஸ்லிம்களும் எமது கட்சியில் வெற்றிபெற்றுள்ளனர்.  அதே போன்று இந்தப் பிரதேச சபையில் கனிசமான அளவு முஸ்லிம்களையும் நாம் மக்கள் காங்கிரஸ், தமிழர் முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகிய மூவினங்களையும் அரவணைத்துச் செல்வதற்கு இதுவே முன்னுதாரணங்களாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2 கருத்துரைகள்:

ஐயோ எல்லோரும் ஓடி வாருங்கள்.. எமது பொன்னான வாக்குகளை அமைச்சரின் ஆட்களுக்கு வாரி வழங்கி அவரை காப்பாற்றுவோம்...

Post a Comment