Header Ads



"எனது அரசியல் வளர்ச்சியை தடைசெய்து, கைகளை கட்டிப்போட தமிழ் கூட்டமைப்பு குறியாக உள்ளது - ரிஷாட்


-ஊடகப்பிரிவு- 

பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  அமைச்சர் மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில், நாம் எதிர்நோக்கும் கஷ்டங்களையும், சவால்களையும் நீங்கள் அறிவீர்கள். இந்தக் குடியேற்றத்தை எதிர்ப்பவர்கள் எங்களை இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் வெளியுலகுக்குக் காட்டி, எவ்வாறாவது மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

மீண்டும் வாழ்வதற்காக இங்கு வந்த முஸ்லிம்கள், தமது காணிகளை துப்புரவாக்கியபோது, அதனை துப்புரவாக்க விடாமல் டோசருக்கு முன்னே குப்புறப்படுத்து சிலர் அதனைத் தடுத்தனர். தமிழ் மக்களுக்கு எங்களைப் பற்றி பிழையான கருத்துக்களைக் கூறி, அவர்களை உசுப்பேற்றி மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமென அவர்கள் முயற்சித்தார்கள். அதன் பின்னர், நாங்கள் காணி இல்லாத இந்த மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து மாணவர்களைக் கொண்டுவந்து எனக்கெதிராகக் கோஷமிட்டனர். 

நான் காடுகளை அழிப்பதாக அவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டனர். ஊடகங்களின் மூலம் என்னைப்பற்றி, இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த நிலையில், இந்த சம்பவங்களின் பின்னர் முல்லைத்தீவுக்கு வந்த மு.கா தலைவர், இங்குள்ள கூட்டங்களிலே என்னையே பிழை கண்டார். இனவாதிகளுடன் இணங்கிப்போக வேண்டுமெனவும், விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கூறி, என்னை மோசமாக விமர்சித்துவிட்டு இந்தப் பிரச்சினைக்கான தீர்வை, தான் பெற்றுத்தருவதாகக் கூறினார். 


ஆனால், இற்றைவரை அவரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத், தட்டிக்கொடுப்பது போலவ அவரின் கதைகள் அமைந்தன. இனவாத சக்திகளிடம் எவ்வாறாவது எம்மைக் காட்டிக் கொடுத்து, தாங்கள் அரசியலில் நல்லபெயர் எடுக்க வேண்டுமெனவும், அதன் மூலம் தாங்கள் குளிர்காய்ந்து விட முடியும் எனவும் மு.கா தலைமை சிந்திக்கின்றது. இவ்வாறு என்னை மோசமாக விமர்சித்து, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறியோர் இற்றைவரை எதுவுமே செய்யவில்ல. 

தேர்தலுக்காக மட்டும் இப்போது வந்து வீர வசனம் பேசுகின்றனர். எமக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கின்றனர். சந்திக்குச்சந்தி வேட்பாளர்களை நிறுத்தி, வாக்குகளைப் பிரித்து எம்மைப் பலவீனப்படுத்துவதன் மூலம், இந்தப் பிரேசத்தில் பட்டுப்போய் கிடக்கும் மரத்தை மீண்டும் துளிர்விட செய்யலாமென அவர்கள் நாப்பசை கொண்டுள்ளனர்.

அவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், பொய்யான வாக்குறுதிகளுக்கும் நீங்கள் ஏமாந்தீர்களேயானால், நஷ்டமடைவது நீங்களே. இது வாக்குச் சேர்க்கும் தேர்தல் அல்ல. உங்கள் வட்டாரத்தில் உள்ள எமது கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். அவர்கள் மூலம் உங்களுக்கும், எமக்குமிடையுமான உறவு வலுப்படுத்தப்படுவதால் நன்மையடையப் போவது நீங்களே.

தமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரையில், எனது அரசியல் வளர்ச்சியையும் அபிவிருத்திப் பணிகளையும் தடை செய்வதில், அங்குள்ள சிலர் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர். எனது கைகளை கட்டிப்போட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். ஆனால், நாங்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எழுவோம். இறைவன் எமக்கு அந்த சக்தியைத் தந்துள்ளான். சதிகாரர்கள் என்னதான் செய்தாலும் மக்களுக்கான எனது பணியிலிருந்து நான் ஒதுங்கப் போவதும் இல்லை.

மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய உதவிகளும் தமிழ்க் கூட்டமைப்போ, வடமாகாண சபையோ செய்யாத நிலையிலேயே, அரசின் உதவியுடன் நாங்கள் மீள்குடியேற்றச் செயலணியை அமைத்தோம். ஆனால், ஒருசில அரசியல் புதுமுகங்கள் மீள்குடியேற்றச் செயலணியின் நடவடிக்கைகளை, தமது செயற்பாடுகளாகக் காட்டுகின்ற துரதிஷ்டமான நிலை இருக்கின்றது. யார் என்னதான் சொன்னாலும், மக்களுக்கு இது நன்கு விளங்கும்.

இவ்வாறான அரசியல்வாதிகளையும், மு.கா அரசியல்வாதிகளையும் மக்கள் இனங்காணத் தொடங்கிவிட்டனர். பொய் எது? உண்மை எது? என்பதை அவர்கள் இப்போது நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான பணிகளை யார் நேர்மையாக முன்னெடுக்கின்றார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இவற்றை அங்கு புலப்படுத்தும் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.