Header Ads



கிரகணம் பற்றி, நபிகள் நாயகம் சொன்னவை


எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள். 
(புகாரி 1041, முஸ்லிம் 1670)

கிரகணத்தைப் பார்த்தால்தான் தொழ வேண்டும் என்று நபிகளார் தெளிவாக கூறியுள்ளதால் கிரகணம் தெளிவாக தெரியாத பகுதியில் தொழுகை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிரகணம் தெளிவாக தெரியும் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியின்படி தொழுகையை கடைபிடிக்க வேண்டும்.

நபிமொழிகளில் கிரகணம் தொடர்பாக வந்துள்ள வழிகாட்டுதல்களை காண்போம்.

கிரகணமும் நபிகளார் காட்டிய வழிமுறைகளும்!

சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்)  காட்டித் தந்துள்ளார்கள்:

கிரகணத் தொழுகை தொழுகும் முறை:

1.கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்கு வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

2.பள்ளியில் தொழ வேண்டும்.

3.இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

4.இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்.

5.ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும்.

6.நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்.

7.கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். 

8.மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.

இவற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:

'நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரி 1051, முஸ்லிம் 1515.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1065, முஸ்லிம் 1502.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். 

பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள். 

பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். 

பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். 

இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

(தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள்.

 பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1046, முஸ்லிம் 1500.

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை'என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1515.

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 1044, 
முஸ்லிம் 1499.

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். 

(பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: 
அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரி 1059, முஸ்லிம் 1518.

1 comment:

  1. Alhamdulillah... I hope many parts of Srilanka witnessed the moon eclipse and hopefully ACJU inform Masjid immams to perform the salathul kushoof.

    ReplyDelete

Powered by Blogger.