Header Ads



சஜித் நீக்கம்? ரவி விரட்டப்படுகிறார் - (அலரி மாளிகையில் மந்திரலோசனை)


மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவர் பதவியில் இருந்து கீழ் இறக்கப்படவுள்ளார்.

பிணைமுறி மோசடி குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய திலக் மாரப்பன தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்திருந்தார்.

இந்தக் குழுவின் அறிக்கை கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையிலேயே, ஐதேகவின் உதவித் தலைவர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க விலக்கப்பட வேண்டும் என்றும், கட்சியின் தேசிய நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் இருந்து அவரை விலக்கி வைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கை தொடர்பாக அலரி மாளிகையில் நேற்று நடந்த கூட்டத்தில்,  அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐதேக அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐதேகவின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உதவித் தலைவர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்படும் அதேவேளை, கட்சியில் உள்ளக குழப்பங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு, பிரதித் தலைவர் பதவியையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் திலக் மாரப்பன குழு பரிந்துரை செய்துள்ளது.

2014ஆம் ஆண்டு உள்ளக முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் ஐதேகவில் உதவித் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் ஆகிய இரண்டு புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

இதன்போது உதவித் தலைவராக ரவி கருணாநாயக்கவும், பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.