Header Ads



முஸ்லிம் சிறுமியின் வீட்டில் ஜனாதிபதி, பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்தார் (படங்கள்)



ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பதற்கு பதுளையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்தார்.  எவ்வித முன் அறிவித்தலுமின்றி வந்திருந்த இப்பயணத்தில் ஜனாதிபதி அவர்களைச் சந்திக்கக் கிடைக்குமென்று அச்சிறுமியோ சிறுமியின் பெற்றோரோ சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை. 

ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னாள் சிறுமியொருவர் தன்னைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி அச்சிறுமியை தன்னிடம் அழைத்து பேசி மகிழ்ந்தார். ஜனாதிபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடிய அச்சிறுமி தனது கைகளினால் வரைந்த சித்திரமொன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பதுளைக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். வர முன்பதாக தொலைபேசியின் மூலம் தனக்கு தெரியப்படுத்துமாறும் அவர் ஜனாதிபதியிடம் செல்லமாக கேட்டுக்கொண்டார். 

ஜனாதிபதி அவர்கள் நேற்றைய தினம் பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்குபற்றியதன் பின்னர் தனது வேலைப்பளுவின் மத்தியிலும் சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அச்சிறுமியின் வீட்டுக்குச் செல்ல மறந்துவிடவில்லை.

தனது நண்பர் நண்பிகளுடன் ஜனாதிபதி அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்த அமானி ராயிதா என்ற அச்சிறுமி தனது வீட்டுக்கு வந்த ஜனாதிபதி அவர்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

ஜனாதிபதி அவர்கள் சிறுமி ராயிதா பாடிய பாடலொன்றைக் கேட்டு மகிழ்ந்ததுடன், சிறுவர் சிறுமியர்களுடன் சேர்ந்து பாடலொன்றையும் பாடி மகிழ்ந்தார். ஜனாதிபதி அவர்கள் விடைபெற்றுச் செல்லும் வேளையில் கொழும்புக்கு வரும் சந்தர்ப்பத்தில் தன்னைப் பார்க்க வருமாறு அச்சிறுவர்களுக்கு அன்பான அழைப்பையும் விடுத்தார்.




No comments

Powered by Blogger.