Header Ads



என்னை கொலைசெய்ய முயற்சி, ஜனாதிபதி பொய் சொன்னதாகவும் ரவி குமுறல்

பிணை முறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆற்றிய விஷேட உரையும், அதனை தயாரித்தவர்களும் தனது பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் சூட்சுமமாக திரிபுபடுத்தல்களை செய்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்தார்.

பிணை முறி விவகாரத்தினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி விஷேட உரையாற்ற அவர் சபாநாயகர் கருஜயசூரியவிடம் எழுப்பிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தான் தயாராக எடுத்து வந்த உரையை அறிக்கையாக ஊடகங்களுக்கு வெளியிட்டே மேற்கண்டவாறு அவர் இதனை தெரிவித்தார்.  

10 பக்கங்களைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டிருந்த குறித்த அறிக்கையில்,

தன்னை கைது செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும், தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஆணைக் குழு எங்கும் பரிந்துரைத்திராத நிலையில் அவ்வாறு பரிந்துரை உள்ளதாக கூறி தன்னை அரசியல் ரீதியாக கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார். 

சபாநாயகரை விழித்து அவர் தயார் செய்துள்ள அந்த உரை வடிவிலான அறிக்கையில், 

தான் கிரிக்கட்டில் வைட் பந்தை ஆடாமல் விட்ட போது, நடுவர் அதற்கு ஆட்டமிழப்பை வழங்கியதைப் போன்று ஆட்டமிழக்கச் செய்யப்ப்ட்டுள்ளதாக ரவி கூறியுள்ளார்.

தனக்கு விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கும் அளவுக்கு சக்தி இருப்பதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரையிலேயே காத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டி, அதில் ரவி கருணாநாயக்கவின் பெயர் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு இடம் தொடர்பிலும் தொட்டுக்காட்டியே அவர் இந்த  விஷேட அறிக்கையை தயார் செய்துள்ளார்.

ஜனாதிபதியின் விஷேட உரையில்,

'அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான, அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த வோல்ட் அன் றோ நிறுவனத்தினால் பென்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பென்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களே என்பதும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும், ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் எனக்கு எதிராக வழக்குத் தொடருமாறு அல்லவா கூறப்பட்டுள்ளது. எனினும் ஆணைக் குழுவின் அறிக்கையில், குறித்த நிறுவனங்கள் ஊடாக அது தொடர்பில் விசாரணை செய்து, குற்றம் வெளிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறே கூறப்பட்டுள்ளது.

இது ஒரு புதுமையான நிலைமை. கிரிக்கட்டில் வைட் பந்தை ஆடாமல் விக்கெட் காப்பாளருக்கு செல்ல விட்ட போது, மட்டையில் படாத அந்த பந்துக்கு ஆட்டமிழப்பு கொடுத்த கதையாக இது இருக்கின்றது.

பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கோ வேறு எவருக்கோ பிணை முறி விற்பனை செய்யபப்டும் போது எனது தொடர்புகள் எதுவும் அதில் இருக்கவில்லை என ஆணைக் குழுவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.

அத்துடன் மத்திய வங்கியின்  அந் நடவடிக்கைகளின் போது நான் எவ்வித சட்ட விரோதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதையும் அவ்வறிக்கை உறுதி செய்துள்ளது.

நான் ஏற்கனவே கூறியமை போன்று எனக்கு எதிராக வழக்குத் தொடர எந்த பரிந்துரையும் நேரடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கையில் இல்லை.  அறிக்கையில் 920, 921 ஆம் பக்கங்களில் உள்ள 24,25 ஆம் பரிந்துரைகள் மீது அவதானம் செலுத்தும் போது அது தெளிவாகின்றது. இங்கு தான் அரசியல் ரீதியிலான கொலை முயற்சியை பார்க்கின்றேன்.

நான் ஆணைக் குழுவுக்கு பொய் சாட்சி கூறியதாக கூறி என்னை கைது செய்ய பாரிய முயற்சிகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக பல பிரபல்யங்கள் கொடுக்கப்படுகின்றன. நான் பொய் கூறியிருந்தால் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் 10 ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க ஆணைக் குழுவின் உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருந்தது. 

என்னிடம் கடும் வேகத்திலும் குரலிலும் குறுக்குக் கேள்வி கேட்ட சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நான் பொய் கூறியிருந்தால் அமைதியாக இருந்திருக்கவே மாட்டார்கள்.

எனக்கு ஞாபகம் இருக்கின்றது, ஆணைக் குழு முன்னிலையில் பொய் கூறி பின்னர்  சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பும் கோரினர். எனினும் 5 மாதங்கள் கடந்தும் எனக்கு எதிராக அப்படி எதுவும் நடக்காத நிலையில், பொய் சாட்சி கூறியதாக கைது செய்யப்படலாம் என சேறு பூசுவது  எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே போல் உங்களுக்கு ஞாபகம் இருக்கும், எனக்கு எதிராக குற்றம் சுமத்திய பெண்ணுக்கு எனது உறவினர் ஒருவர் அச்சுறுத்தியதாக பாரிய பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

உண்மையில் அவர் என் உறவினரே அல்லர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு 6 அமைச்சரவை பாதுக்காப்பு பிரிவினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர் சகோதரருக்கு இரு பாதுகாப்பு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இத்தனையும் செய்தது, அவரது சாட்சியத்தின் முக்கியத்துவம் கருதி தானே?, அப்படி இருக்கையில் அவரது சாட்சியம் அறிக்கையில் இல்லையே. அவரது சாட்சியம் எங்கே?

இவ்வளவு செலவிட்டது முக்கியமற்ற சாட்சியம் ஒன்றுக்காகவா அல்லது ரவி கருணாநாயக்க எனும் எனக்கு சேறு பூசும் நடவடிக்கைக்காகவா? என நான் கேட்கின்றேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்கள் உரையாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட விசேட உரையை தயாரித்த நபர் சூட்சுமமான முறையில் திரிபுபடுத்தியுள்ளனர். நான் இந்த விடயத்தை சில காரணங்களை அடிப்படையாக கொண்டே தெரிவிக்கின்றேன். அத்துடன் ஜனாதிபதியினால் ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கான  விடயப்பரப்பிற்கு குறித்த விடயம் தொடர்புபடாது.

எனினும் என்னுடன் தொடர்புபட்ட விடயங்களை விசாரணை செய்வதற்காக ஆணைக்குழு தன்னை அழைத்தது. இதன்போது நல்லாட்சி அரசாங்கத்தின் சொந்தக்கார்கள் என்ற வகையில் அந்த விசாரணைக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கினோம்.

அத்துடன் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக தனது அமைச்சு பதவியை கூட இராஜினாமா செய்தேன். அதன்பின்னர் எனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தியும் சேறு பூசியும் மக்களை திசைதிருப்பினர்.

நான் சொன்ன பொய் என்ன?. நான் கூறிய பொய் என்ன என்பதனை அறிவதற்கு எனக்கு உரிமை உள்ளது.

இதன்படி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஜனாதிபதி விசேட உரை மற்றும் அதன் மொழிபெயர்ப்பிலும் பாரியளவில் வித்தியாசங்கள் உள்ளன. இதனால் அரசியல் ரீதியாக இலக்கு வைக்கப்பட்டுள்ளேன். இதன் ஊடாக சதித்திட்டம் தீட்டப்பட்டமைக்கான சுபாவமொன்று உள்ளது. இதன்காரணமாக ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கையும் கெளரவமும் இல்லாமல் போகும்.

சரியாக பார்க்க போனால் 2008 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முதலில் ஆராய்ந்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் அரசியல் நிலைவரம் முழுமையாக மாற்றம் கண்டிருக்கும். எனினும் அரசியல் தீர்மானமாக 2015 முதல் 2016 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே முதலில் ஆராய தீர்மானித்துள்ளனர். நாம் தவறுகள் செய்யவில்லை. அதனால் தான் பயமில்லாமல் ஆணைக்குழுவுக்கு

முன்வந்து சாட்சியமளித்தோம். இந்த கொடுக்கல் வாங்கலை விசாரணை செய்வதற்கு இதற்கும் முன்பும் குழுக்கள் பல  அமைக்கப்பட்டது. இதன்படி ஆணைக்குழு, டியூ குணசேகர தலைமையிலான கோப்குழு, உயர் நீதிமன்ற விசாரணை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப்குழு போன்றவற்றின் ஊடாக இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது எங்கோ இருந்த என்னை தொடர்புபடுத்தினர்.

மேற்குறித்த குழுக்களின் விசாரணைகளின் போது எக்காரணம் கொண்டு எனது பெயரை தொடர்புபடுத்தவில்லை.  ஏனெனில் மத்திய வங்கி என்னுடைய அமைச்சுக்குள் உள்ளடங்கவில்லை. இது தெளிவான காரணமாகும். எனினும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு மூலையில் இருந்த எனது பெயரை இந்த கொடுக்கல் வாங்கலுக்குள் தொடர்புப்படுத்தினர். அதுமாத்திரமல்ல எனது குடும்பத்தவர்களையும் இதற்குள் உள்வாங்கி கொண்டனர்.  சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளை இவ்வாறான ஆணைக்குழுவில் அழைக்க முடியாது. எனது தனிப்பட்ட விடயங்களையும் கேட்கும் நிலைமைக்கு என்னை தள்ளினர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடக பிரபலத்திற்காக செயற்பட்டனர். எனினும் இது தொடர்பாக ஆணைக்குழு இறுதியாக முன்வைத்துள்ள பரிந்துரைகள் என்ன? நான் கூறிய விடயங்களின் உண்மைதன்மை பார்த்து அதன்படி நடக்க வேண்டும் என்றே கூறியுள்ளது. எனினும் ஜனாதிபதி விசேட உரையில் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளார்.


இதன்போது எனக்கு எதிராகவும் எனது குடும்பத்திற்கு எதிராகவும் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் என அந்த அறிக்கையில் விரிவாக அவர் விபரித்துள்ளார்.

(எம்.எப்.எம்.பஸீர், எம்.எம்.மின்ஹாஜ்)

No comments

Powered by Blogger.