Header Ads



தேர்தலுக்குப் பின், புதிய அரசு...? குழப்பம் ஏற்படும் சாத்தியம்

-நஜீப் பின் கபூர்-

தேர்தல் களம் கொதித்துப் போய் இருக்கின்றது. அதே அளவு பிணைமுறி விவகாரமும் நாட்டில் சூடான பேசு பொருளாக இருந்து வருகின்றது. கொள்ளையர்களுக்கு எதிராக தனது பரப்புரையை ஜனாதிபதி மைத்திரி கடுமையாக்கி வருகின்றார். தேர்தல் தினத்திற்கு முன்னர் ஒருநாளாவது இந்த பிணைமுறி விவகாரத்தைப் பாராளுமன்றத்தில் விவாதத்துக் எடுத்துக்கு கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பகிரங்கமாக ஜேவிபிகாரர்களின்  கோஷத்துக்கு சமாந்திரமாக குரல் கொடுத்து வருகின்றார். 

புதிய பழைய கொள்ளைக்கார பிரபுக்கள் (டைகோர்ட் அணிந்த) தனக்கு எதிராக தற்போது ஒரு பலமான அரசியல் கூட்டை நிறுவி இருக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி தற்போது பேசி வருகின்றார். அவர் இப்படிப்பேசி இருப்பது ராஜபக்ஷாக்களையும் ரவி-அர்ஜூன் மகேந்திரன் போன்றவர்களைத்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதியின் கடும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க முடியாது பிரதமர் ரணிலும் அவரது ஐக்கிய தேசியக் கட்சியும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றது. இது விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சொல்கின்ற கதைகளை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. இந்த பிணை முறிவிவகாரத்தில் பிரதமர் ரணில் அமைக்கின்ற விசாரணைக் குழுவை மக்கள் ஒரு ஜோக்காகத்தான் பார்க்கின்றார்கள்.

அர்ஜூன் மகேந்திரனை தன்னிஷ்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநராக்கி அதன் மூலம் நடந்த நிதி மோசடியிலிருந்து பிரதமர் எந்த வகையிலும் தப்பிக்க முடியும் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. நாம் முன்பு குறிப்பிட்டது போல் இந்த பிணைமுறி விவகாரம் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடுமையான பாதிப்புக்களை உண்டு பண்ணி இருக்கின்றது என்பதனை தேர்தல் முடிவுகளில் பார்க்க முடியும் என்று நாம் அடித்துக் கூறுகின்றோம். 

ஐக்கிய தேசியக் கட்சி நடாத்துக்கின்ற முக்கிய தேர்தல் பேரணிகளை சஜித் பிரேமதாச தவிர்த்து வருகின்றார். பிணை முறிவிவகாரத்தில் குற்றவாளியாக சொல்லப்படுகின்ற ரவிக்கு இன்னும் பிரதமர் ரணில் தேர்தல் மேடைகளில் முக்கியத்துவம் கொடுப்பதால் அவர் இவ்வாறு நடந்து கொள்கின்றார் என்பது எமக்கு நம்பகத்தனமாகத் தெரிய வருகின்றது. அதே நேரம் தெற்கு ஹம்பாந்தோட்டை ராஜபக்ஷக்களின் கேட்டைக்குள் சஜித் வெற்றிகரமாக ஐக்கிய தேசியக் கட்சிப் பிரச்சாரப் பணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார். 

இந்த வளர்ச்சியை  ஏனைய இடங்களில் பார்க்க முடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தனது முதலாவது தேர்தல பேரணியை கண்டியில் நடாத்தியது. அதில் ஒரு பத்து அல்லது பண்ணிரெண்டாயிரம் பேரளவிலே கலந்து கொண்டார்கள். அதனை நேரடியாகப் பார்த்தவன் என்ற வகையில் இந்தக் கட்டுரையாளனால் கூற முடியும். இந்தக் கூட்டத்திற்கு நாட்டில் பல இடங்களில் இருந்தும் மக்கள் எடுத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சி இரு கூறுகளாக பிளந்திருக்கின்றது அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதும், அந்தக் கட்சிக்காரர்கள் தாங்கள் 60 சதவிகிதமான இடங்களில் தனித்து உள்ளாட்சி சபைகளை நிறுவுவோம் என்று மேடைகளில் பேசிவருவதும் யதார்த்தத்திற்குப் புறம்பான கதைகளாகவே நாம் பார்க்கின்றோம்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக கண்மூடித்தனமான கருத்துக் கணிப்புக்களை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடுமையான உத்தரவுகளை விதித்திருக்கின்றார். எனவே இது விவகாரத்தில் நாம் புதிய கணிப்புக்களை சொல்ல முடியாத நிலை இருந்தாலும் 2017 திசம்பர் 31ம் திகதி நமது தினக்குரல் வாரா இதழில் தேர்தல் முடிவுகள் தொடர்ப்க 'தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி தரும்! பெரும்பாலான சபைகளில் கூட்டணி!' என்ற கட்டுரையில் எமது கணிப்புக்களை விவரமாகச் சொல்லி இருந்தோம். அந்த கணிப்புக்களை நாம் மீண்டும், மீண்டும் உறுதி செய்கின்றோம். தேவையானவர்கள் திசம்பர்31 இறுதி வார ஏட்டில் எமது தகவல்களைப் பார்த்துக் கொள்ள முடியும். 

இதற்கிடையில் நல்லாட்சி தொடர்பான ஐ.தே.க.-ஸ்ரீ.ல.சு.கட்சிகள் செய்து கொண்ட உடன்பாடு கடந்த திசம்பர் மாதத்துடன் முற்றுப்பெற்றிருக்கின்றது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் இந்த இரு கட்சிகளும் இணைந்து தொடர்ந்தும் நல்லாட்சியை முன்னெடுப்பதா அல்லது வேறு வழியில் இந்த அரசாங்கத்தை முன்னெடுப்பதா என்று முடிவு செய்ய வேண்டி இருக்கின்றது.

தேர்தல் மேடைகளில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிவருகின்றார்கள். மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும்போல் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் குடித்தனம் நடத்த முடியாது என்று கர்ச்சித்து வருகின்றனர்.

ஆனால் இந்த இருதரப்பினருக்கும் அரசாங்கத்தை முன்னெடுக்க மாற்று வழிகள் இருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கான வழிகள் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்லாது மஹிந்தவின் மொட்டுக்கள் தரப்பினரும் மேடைகளில் பேசி வருகின்றார்கள். 

நல்லாட்சியிலுள்ள கள்வர்களை நீக்கிவிட்டு கரு அல்லது சஜித் தலைமையில் அரசொன்றை அமைப்பது தொடர்பாக இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களில் ஆதரவும் இருப்பதாகத் தெரிகின்றது.  அப்படி ஒரு நிலை வருமாக இருந்தால் ரணில்-மஹிந்த மைத்திரிக்கு எதிரான ஒரு கூட்டை அமைத்து அரசாங்கமொன்றை அமைக்கவும்  வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது.

தற்போது நல்லாட்சி நடாத்துக்கின்ற இந்த இரு அணிகளுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி அந்த இடைவெளியை நிரப்ப இருதரப்பினரும் உடன்பட மாட்டார்கள். எனவே வருகின்ற தேர்தல் முடிவுகள் கட்சிகளின் பலத்தைக் காட்சிப்படுத்தும். அப்போது இந்தக் குடித்தனம் பற்றிய இறுதித் தீர்மானங்களுக்கு வருவதற்கு இரு தரப்பினருக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். 
ஜனாதிபதி மைத்திரி பிணைமுறி விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்காவை தற்போது நேரடியாகவே விமர்சித்து வருகின்றார். அதே வேளை பிரதமரோ ரவியை அணைத்துக் கொண்டு இந்த தேர்தல் வேலைகளைச் செய்து வருகின்றார். இது சாதாரண மக்களிடத்தில் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

கடந்த பாராளுமன்ற அமர்வின்போது தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதலளிக்க முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க முயன்ற போது அதனை சபாநாயகர் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் ரவிக்கு ஆதரவாக பேச முன்வரவில்லை என்பதனை அங்கு பார்க்க முடிந்தது.

இவ்வாறான பின்னணியலும்; பிரதமர் ரணில் ரவிக்கு தேர்தல் மேடைகளில் முன்னுரிமை கொடுப்பது  புரிந்து கொள்ள முடியாத ஒரு விவகாரமாக இருக்கின்றது. பிரதமர் ரணிலின் பல இராகசியங்களை ரவி தெரிந்து வைத்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

தற்போது தேர்தல் பரப்புரைகளை அவதானிக்கின்ற போது ஜனாதிபதி மைத்திரி தரப்பினர் முன்னணியில் இருந்து வருகின்றார்கள். அதற்காக அவர்கள் முதலாம் இடத்தில் இருக்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.! அது அப்படி இல்லை.!! மொட்டுக்கள் அணியினரும் அவர்கள் ஆதரவாளர்களைத் தமது கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார்கள் என்று தெரிகினறது. 

ஜேவிபியினரும் வழக்கம் போல் அவர்கள் பாணியில் பரப்புரைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். புதிய யுக்திகளை அவர்கள் இந்தத் தேர்தல்லில் எந்தளவுக்குக் கைக் கொண்டிருக்கின்றார்கள் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் அங்கு இருப்பதாகத் தெரிய வில்லை. சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற பெரும் பான்மையான இடங்களில் அவர்களுடைய வேட்பாளர் யார் என்பது கூட மக்களுக்கு இன்னும் தெரியாதிருக்கின்றது. 

சிறுபான்மை மக்களிடத்தில் அவர்கள் செய்திகள் போய்ச் சேர்வதில் நிறையவே பலயினங்கள் இருக்கின்றது. இது பற்றி பொறுப்பான தலைவர்களிடத்தில் கேட்டால் எமது குற்றச்சாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்வதுடன,; சிறுபான்மை மக்களிடத்தில் பிரச்சாரப் பணிகளை முன்வைப்பத்தில் போதிய ஆளணியினர் தமக்கு இன்னும் கிடைக்க வில்லை என்பது அவர்களது பதிலாக  இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் கூட்டணி ஆதிக்கம் இருந்தாலும் கிழக்கில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரி நடத்திய பேரணிக்கு ஏன் இந்தளவு மக்கள் கூட்டம் வந்து சேர்ந்தது என்பது புரியாமல் இருக்கின்றது. இது அவர்களது அரசியல் பலம் என்று வந்தால் கூட்டணி கோட்டைக்குள் பெரிய ஓட்டைகள் விழுந்திருக்கின்றது என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

முஸ்லிம் அரசியலை எடுத்துக் கொண்டால் நாடுபூராவிலும் மு.காவுக்கு எதிரான அணி வலுவான நிலையில் முன்னேறி வருகின்றது என்பது எமது கருத்து. மலையகத்தில் தொண்டாவின் நிலை மு.கா நிலையாக இருக்கின்றது. எப்படிப் பார்த்தாலும் சிறுபான்மை சமூகம் ஒட்டுமொத்தமாக மஹிந்த அணியை நிராகரித்திருக்கின்றது.

எந்தவொரு கட்சியும் அவர்கள் கூட்டில் இல்லை. என்றாலும் பொருளாதார நலன்களுக்காக அங்கு சிறுபான்மை அரசியல் வியாபாரிகள் சிலர் வேலைபார்த்து வருகின்றார்கள் என்பதனைக் காண முடிகின்றது. எனவே ராஜபக்ஷாக்களின் மொட்டுக்கள் தரப்பினர் சிங்கள மக்களினதும் இனவாதிகளினதும் வாக்குப் பலத்தை மட்டும் நம்பியே இந்தத் தேர்தலை முன்னெடுத்து வருகின்றது.

எப்படித் தேர்தல் முடிவுகள் வந்தாலும் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை அமைக்கும் போது கூட்டுச ;சேர்ந்தே அதனை அமைக்க வேண்டி வரும் என்பது தெளிவு.

1 comment:

  1. Eppo sirupanmai katchi vandazo azodu thuwesamum Wandu wittazu...cant stop

    ReplyDelete

Powered by Blogger.