Header Ads



முஸ்லிம் தலைமைகள், ரணிலுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டிலே இடம்பெற்ற பாரிய ஊழலாக பேசப்படுகின்ற மத்திய வங்கியில் இருந்து திருடப்பட்ட பணத்தில் ஒருதொகையினை இரு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இவர்களுடைய பெயர் மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அம்பாரை பிரதான வீதியில்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியிலே இடம்பெற்றிருக்கின்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பில் அனைவரும் அறிந்திருப்பீர்கள். தற்போது இந்த விடயம் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் பரவலாக பேசப்படுகிறது. இந்த பணத்தினை இரு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது, இந்த இரண்டு முஸ்லிம் தலைவர்களும் வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம் சமூகத்திற்குள் வரமுடியாமல் நாட்டை விட்டு வெளியேற வேண்டியதொரு சூழ்நிலை ஏற்படப்போகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்திய வங்கி ஊழல் தொடர்பில் எதுவித அறிக்கைகளையும் வெளியிடவில்லை. அவர்கள் ரணிலுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தலைவர்கள் இருவரின் மீதும் முஸ்லிம் சமூகத்திற்கு இப்போது சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை கபடமாக கபளீகரம் செய்வதற்கு அந்தப்பணத்தினை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளிவாசல்களை அமைப்பதற்கும், முஸ்லிம்களுடைய வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் அவதானமாக இருந்துகொள்ள வேண்டும்.

குறித்த இரு தலைவர்களும் கிழக்கு மண்ணை ஏமாற்றி எமது மக்களுடைய வாக்குகளை சுவீகரித்துக்கொண்டு இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்கின்றனர். இவர்களினால் இன்னும் ஏமாற வேண்டாம். நான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய கட்சியிலே இருந்தவன் அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவன்.

மஹிந்த ராஜபக்ஷவுடைய அரசாங்கத்திலே மீள்குடியேற்ற அமைச்சை வைத்திருந்த ரிஷாட் பதியுதீன் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றத்தைக் கூட சரியாக செய்யவில்லை. அந்த மக்களுடைய அடிப்படை வசதிகளை தீர்க்கவுமில்லை இன்று அந்த மண்ணை சென்று பாருங்கள் சுடு காட்டைப் போன்று காட்சியளிக்கின்றது. வட மாகாண மக்கள் தெருக்களிலும், வீதிகளிலும், காடுகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அமைச்சர் ரிஷாத் கிழக்கில் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகிறார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களுடைய காணிகளை மீட்டுள்ளனர். அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்துள்ளனர். புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கினர். ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது சமூகத்தின் மீது அக்கரை செலுத்தாது நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவிதமான தீர்வுகையும் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. முஸ்லிம் மக்கள் இழந்த காணிகளில் ஒரு துண்டையேனும் அவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆகவே மேலும் இந்த தலைமைகளை முஸ்லிம் சமூகம் நம்பி பலனேதுமில்லை.

நாங்கள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஊடாக மிக விரைவிலே சம்மாந்துறை வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யவுள்ளோம். அத்துடன் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்கள் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரத்தினை தீர்த்து சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை மண் சிறந்த அரசியல் தலைவர்களை வைத்துக்கொண்ட ஒரு பிரதேசமாகும். மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் தனக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினூடாக இந்த மண்ணிலே பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டிய ஒரு சிறந்த தலைவராவார் எனவே சம்மாந்துறை பிரதேச மக்கள் கிழக்கு சமூகத்தை ஏமாற்றுகின்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(றியாஸ் ஆதம்)

1 comment:

  1. Appo neenga yaarukku muttu kodukkireergal Mr. Jumper...?
    Jumping jumping not tree papa YES papa...!!!
    Neenga my3 kuthane muttu kodukkureenga...nalai Mahinda & Co vanthaal athukkum Jumping thaanaakkum... like your sub-leader.(Hisbu..)

    ReplyDelete

Powered by Blogger.