Header Ads



அர்ஜூன் மகேந்திரனை எந்நேரத்திலும், கைதுசெய்ய முடியும் - சட்டமா அதிபர்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை எந்தவொரு நேரத்திலும் கைது செய்ய முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தற்போது வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரனை எந்தவொரு நேரத்திலும் கைது செய்யக் கூடிய ஆற்றல் இலங்கைக்கு உண்டு என சட்ட மா அதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்ற போதிலும், நாட்டின் தற்போதைய சட்ட திட்டங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய முடியும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவ்வாறானவர்களை கைது செய்ய முடியும்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராகவும் இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்படும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் தற்பொழுது ஆராயப்பட்டு வருகின்றது.

சாட்சியங்கள் மற்றும் ஏனைய காரணிகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டியிருப்பதனால் எப்போது சரியாக வழக்குத் தொடர முடியும் என்பது பற்றிய தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.